குறள் பால் : பொருட்பால். குறள் இயல் : படையில். அதிகாரம் : படைமாட்சி.
அழிவின்றி அறைபோகா தாகி வழிவந்த
வன்க ணதுவே படை.
Translation:
That is a host, by no defeats, by no
desertions shamed,
For old hereditary courage famed.
Explanation:
That indeed is an army which has stood firm
of old without suffering destruction or deserting (to the enemy).
கலைஞர் உரை:
எந்த நிலையிலும் அழியாததும், சூழ்ச்சிக்கு இரையாகாததும், பரம்பரையாகவே பயமற்ற உறுதி உடையதும்தான் உண்மையான படை எனப்படும்.
[ads-post]
மு.வ உரை:
(போர் முனையில்) அழிவு இல்லாததாய்(பகைவருடைய) வஞ்சனைக்கு இரையாகாததாய், தொன்று தொட்டுவந்த அஞ்சாமை உடையதே படையாகும்.
சாலமன் பாப்பையா உரை:
போரில் தோற்காமலும், பகைவரின் சதிக்குத் துணை போகாமலும், தொன்று தொட்டு வரும் வீரத்தை உடையதே படை.
மணக்குடவர் உரை:
கெடுதலின்றிக் கீழறுக்கப்படாததாகிக் குலத்தின் வழிவந்த அஞ்சாமையையுடையதே படையாவது. வழிவருதல்- வீரன்மகன் வீரனாகுதல். இது படையினது நன்மைகூறிற்று.
பரிமேலழகர் உரை:
அழிவு இன்றி - போரின்கண் கெடுதல் இன்றி; அறை போகாதாகி - பகைவரால் கீழறுக்கப்படாததாய்: வழிவந்த வன்கணதுவே படை - தொன்று தொட்டு வந்த தறுகண்மையை உடையதே அரசனுக்குப் படையாவது. (அழிவின்மையான் மற மானங்கள் உடைமையும், அறை போகாமையான் அரசர்மாட்டு அன்புடைமையும் பெறப்பட்டன. வழி வந்த வன்கண்மை, 'கல்நின்றான் எந்தை கணவன் களப்பாட்டான், முன்னின்று மொய்யவிந்தார் என்ஐயர் - பின்னின்று, கைபோய்க் கணையுதைப்பக் காவலன் மேலோடி எய்போற் கிடந்தான் என் ஏறு'. (பு.வெ.மா.வாகை,22) என்பதனான் அறிக. குற்றியலுகரத்தின் முன்னர் உடம்படுமெய் விகாரத்தான் வந்தது. இது வருகின்ற பாட்டுள்ளும் ஒக்கும்.)