குறள் பால் : பொருட்பால். குறள் இயல் : படையில். அதிகாரம் : படைமாட்சி.
உலைவிடத்து ஊறஞ்சா வன்கண் தொலைவிடத்துத்
தொல்படைக் கல்லால் அரிது.
Translation:
In adverse hour, to face undaunted might of
conquering foe,
Is bravery that only veteran host can show.
Explanation:
Ancient army can alone have the valour
which makes it stand by its king at the time of defeat, fearless of wounds and
unmindful of its reduced strength.
கலைஞர் உரை:
போரில் சேதமுற்று வலிமை குன்றியபோதும், எவ்வித இடையூறுகளுக்கும் அஞ்சாத நெஞ்சுறுதி, பழம்பெருமை கொண்ட படைக்கு அல்லாமல் வேறு எந்தப் படைக்கும் இருக்க முடியாது.
[ads-post]
மு.வ உரை:
போரில் அழிவு வந்தவிடத்தில் வலிமைக் குன்றினாலும், இடையூறுகளுக்கு அஞ்சாத அஞ்சாமை தொன்றுதொட்டுப் பெருமை உடையபடைக்கு அல்லாமல் முடியாது.
சாலமன் பாப்பையா உரை:
தம் அரசுக்கு ஓர் அபாயம் வரும்போது, தாம் எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும், தமக்கு ஏற்படும் அழிவிற்கு அஞ்சாது நின்று போரிடும் வீரம், பரம்பரை பரம்பரையாக வாழும் சொந்த நாட்டு மக்களுக்கே அன்றி, மற்றவர்க்கு வருவது கடினம்.
மணக்குடவர் உரை:
அரசர் கெடுமிடத்து வழிவந்த படைக்கு அல்லது பிறபடைக்குப் போர்க்களத்து அழிவு வந்தவிடத்து, உயிர்க்கு வரும் ஊறு அஞ்சாத வன்கண்மை இல்லை. வழிவந்த படை-வீரன் மகன் வீரன்.
பரிமேலழகர் உரை:
தொலைவிடத்து உலைவிடத்து ஊறு அஞ்சா வன்கண் - தான் சிறியதாய வழியும் அரசற்குப் போரின்கண் உலைவுவந்தால் தன் மேலுறுவதற்கஞ்சாது நின்று தாங்கும் வன்கண்மை; தொல்படைக் கல்லால் அரிது - அவன் முன்னோரைத் தொடங்கிவரும் படைக்கல்லது உளதாகாது. (இழிவு சிறப்பு உம்மை விகாரத்தால் தொக்கது. மூலப்படை, கூலிப்படை, நாட்டுப்படை, காட்டுப்படை, துணைப்படை, பகைப்படை என்னும் அறுவகைப்படையுள்ளும் சிறப்புடையது மூலப்படை யாகலான் அதனை அரசன் 'வெல்பொறியும் நாடும் விழுப்பொருளும் தண்ணடையும் - கொல்களிறும் மாவும் கொடுத்தளிக்க.' (பு.வெ.மா.தும்பை2) என்பது குறிப்பெச்சம். இப்படையை வடநூலார் 'மௌலம்' என்ப.)