குறள் பால் : பொருட்பால். குறள் இயல் : அமைச்சியல். அதிகாரம் : சொல்வன்மை.
பலசொல்லக் காமுறுவர் மன்றமா சற்ற
சிலசொல்லல் தேற்றா தவர்.
Translation:
Who have not skill ten faultless words to
utter plain,
Their tongues will itch with thousand words
man's ears to pain.
Explanation:
They will desire to utter many words, who
do not know how to speak a few faultless ones.
கலைஞர் உரை:
குறையில்லாத சில சொற்களைக் கொண்டு தெளிவான விளக்கம் தந்திட இயலாதவர்கள்தான் பல சொற்களைத் திரும்பத் திரும்பக் கூறிக் கொண்டிருப்பார்கள்.
[ads-post]
மு.வ உரை:
குற்றமற்றவையாகியச் சில சொற்களைச் சொல்லத் தெரியாதவர், உண்மையாகவே பலச் சொற்களைச் சொல்லிக்கொண்டிருக்க விரும்புவர்.
சாலமன் பாப்பையா உரை:
குற்றமற்ற சில சொற்களால் சொல்லும் ஆற்றல் இல்லாதவர், பலபல சொற்களைப் பேச விரும்புவர்.
மணக்குடவர் உரை:
பல சொற்களைச் சொல்லக் காதலியா நிற்பர், குற்றமற்ற சில சொற்களைத் தெளியச் சொல்லலை அறியமாட்டாதார். மன்ற - தெளிய. இது சுருங்கச் சொல்லல் வேண்டு மென்றது.
பரிமேலழகர் உரை:
மாசு அற்ற சில சொல்லல் தேற்றாதவர் - குற்றமற்றனவாய்ச் சிலவாய வார்த்தைகளை அவ்வாற்றால் சொல்லுதலை அறியாதார்; பல சொல்லக் காமுறுவர் - பலவாய வார்த்தைகளைத் தொடுத்துச் சொல்ல விரும்புவர். (குற்றம் - மேல் சொல்லிய குணங்கட்கு மறுதலையாயின. இடைவிடாது பல சொல்லுதலையும் சொல்வன்மை என்று விரும்புவாரும் உளர், அவர் இவ்வாறு சொல்ல மாட்டாதாரே வல்லார் அது செய்யாரென யாப்புறுப்பார், 'மன்ற' என்றார்.)