குறள் பால் : பொருட்பால். குறள் இயல் : அமைச்சியல். அதிகாரம் : அமைச்சு.
செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்து
இயற்கை அறிந்து செயல்.
Translation:
Though knowing all that books can teach,
'tis truest tact
To follow common sense of men in act.
Explanation:
Though you are acquainted with the
(theoretical) methods (of performing an act), understand the ways of the world
and act accordingly.
கலைஞர் உரை:
செயலாற்றல் பற்றிய நூலறிவைப் பெற்றிருந்தாலும், உலக நடைமுறைகளை உணர்ந்து பார்த்தே அதற்கேற்றவாறு அச்செயல்களை நிறைவேற்ற வேண்டும்.
[ads-post]
மு.வ உரை:
நூலறிவால் செயலைச் செய்யும் வகைகளைச் அறிந்த போதிலும் உலகத்தின் இயற்கையை அறிந்து அதனோடு பொருந்துமாறு செய்யவேண்டும்.
சாலமன் பாப்பையா உரை:
பல்வேறு மொழி நாட்டு நூல்களின் வழி, புதிய செயல் திறங்களை அறிந்திருந்தாலும், தன் நாட்டின் இயற்கை மக்கள் இயல்பு ஆகியவற்றை அறிந்து அவற்றிற்கு ஏற்பச் செய்க.
மணக்குடவர் உரை:
செயத்தகுவன அறிந்த விடத்தும் அது செய்யுங்கால் உலக நடை அறிந்து செய்க. உலகநடை அறிதலாவது அரசர் சீலமும் பரிவாரத்திலுள்ளார் நிலைமையும் அறிதல். இவை யறியாது செய்யிற் குற்றமாமென்றவாறு.
பரிமேலழகர் உரை:
செயற்கை அறிந்தக்கடைத்தும் - நூல் நெறியான் வினை செய்யும் திறங்களை அறிந்த இடத்தும்; உலகத்து இயற்கை அறிந்து செயல் - அப்பொழுது நடக்கின்ற உலக இயற்கையை அறிந்து அதனோடு பொருந்தச் செய்க. (கடைத்தும் என்புழி 'து' பகுதிப்பொருள் விகுதி. 'நூல் நெறியே ஆயினும் உலக நெறியோடு பொருந்தாதன செய்யற்க, செய்யின் அது பழிக்கும்' என, இயற்கை அறிவால் பயன் கூறியவாறு.)