குறள் பால் : பொருட்பால். குறள் இயல் : அரசியல். அதிகாரம் : இடுக்கணழியாமை.
இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான்
துன்பம் உறுதல் இலன்.
Translation:
He seeks not joy, to sorrow man is born, he
knows;
Such man will walk unharmed by touch of
human woes.
Explanation:
That man never experiences sorrow, who does
not seek for pleasure, and who considers distress to be natural (to man).
கலைஞர் உரை:
இன்பத்தைத் தேடி அலையாமல், துன்பம் வந்தாலும் அதை இயல்பாகக் கருதிப்கொள்பவன் அந்தத் துன்பத்தினால் துவண்டு போவதில்லை.
மு.வ உரை:
இன்பமானதை விரும்பாதவனாய்த் துன்பம் இயற்கையானது என்று தெளிந்திருப்பவன், துன்பம் வந்த போது துன்ப முறுவது இல்லை.
சாலமன் பாப்பையா உரை:
உடம்பிற்கு இன்பம் விரும்பாதவனாய், அதற்கு வரும் துன்பத்தை இயல்புதானே என்பவன், மனம் தளர்ந்து துன்பப்படமாட்டான்.
மணக்குடவர் உரை:
இன்ப முறுதலை விரும்பாது இடும்பை யுறுதலை இயல்பாகக் கொள்ளுமவன் துன்ப முறுதல் இல்லை. இஃது இடுக்கணை யியல்பாகக் கொள்ளல்வேண்டு மென்றது.
பரிமேலழகர் உரை:
இன்பம் விழையான் இடும்பை இயல்பு என்பான் - தன் உடம்பிற்கு இன்பமாயவற்றை விரும்பாதே வினையால் இடும்பை எய்தல் இயல்பு என்று தெளிந்திருப்பான்; துன்பம் உறுதல் இலன் - தன் முயற்சியால் துன்பமுறான். (இன்பத்தை விழையினும், இடும்பையை இயல்பு என்னாது காக்கக் கருதினும் துன்பம் விளைதலின்,இவ்விரண்டுஞ் செய்யாதானைத் 'துன்பம் உறுதல் இலன்' என்றார்.)