குறள் பால் : பொருட்பால். குறள் இயல் : அரசியல். அதிகாரம் : பொச்சாவாமை.
பொச்சாப்பார்க் கில்லை புகழ்மை அதுஉலகத்து
எப்பால்நூ லோர்க்கும் துணிவு.
Translation:
'To
self-oblivious men no praise'; this rule
Decisive
wisdom sums of every school.
Explanation:
Thoughtlessness
will never acquire fame; and this tenet is upheld by all treatises in the
world.
கலைஞர் உரை:
மறதி உடையவர்களுக்கு, மங்காப் புகழ் இல்லை என்பதே அனைத்தும் கற்றுணர்ந்த அறிஞர்களின் முடிவான கருத்தாகும்.
[ads-post]
மு.வ உரை:
மறதியால் சோர்ந்து நடப்பவர்க்குப் புகழுடன் வாழும் தன்மையில்லை, அஃது உலகத்தில் எப்படிப்பட்டநூலோர்க்கும் ஒப்ப முடிந்த முடிப்பாகும்.
சாலமன் பாப்பையா உரை:
மறதியை உடையவர்க்குப் புகழ் உடைமை இல்லை; இது இவ்வுலகத்தில் எந்தத் துறை நுகர்வோர்க்கும் முடிவான கருத்தாகும்.
மணக்குடவர் உரை:
பொச்சாப்பு உடையார்க்குப் புகழுடைமையில்லையாம்; அஃது உலகத்து வழங்குகின்ற எவ்வகைப்பட்ட நூலோர்க்குந் துணிவு. இது பொச்சாப்பார்க்குப் புகழாகாதென்றது.
பரிமேலழகர் உரை:
பொச்சாப்பார்க்குப் புகழ்மை இல்லை - பொச்சாந்து ஒழுகுவார்க்குப் புகழுடைமை இல்லை, அது உலகத்து எப்பால் நூலோர்க்கும் துணிவு - அவ்வின்மை இந்நீதி நூலுடையார்க்கேயன்றி உலகத்து எவ்வகைப்பட்ட நூல் உடையார்க்கும் ஒப்ப முடிந்தது. (அரசர்க்கேயன்றி அறம் முதலியன நான்கினும் முயல்வார் யாவர்க்கும் அவை கைகூடாமையின் புகழில்லை என்பது தோன்ற, 'எப்பால் நூலோர்க்கும் துணிவு' என்றார்.)