குறள் பால் : பொருட்பால். குறள் இயல் : அரசியல். அதிகாரம் : வலியறிதல்.
பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின்.
Translation:
With peacock feathers light, you load the
wain;
Yet, heaped too high, the axle snaps in
twain.
Explanation:
The axle tree of a bandy, loaded only with
peacocks' feathers will break, if it be greatly overloaded.
கலைஞர் உரை:
மயில் இறகாக இருந்தாலும்கூட அதிகமாக ஏற்றப்பட்டால் வண்டியின் அச்சு முறிகின்ற அளவுக்கு அதற்குப் பலம் வந்து விடும்.
[ads-post]
மு.வ உரை:
மயிலிறகு ஏற்றிய வண்டியே ஆனாலும் , அந்த பண்டமும் (அளவோடு ஏற்றாமல்) அளவு கடந்து மிகுதியாக ஏற்றினால் அச்சு முறியும்.
சாலமன் பாப்பையா உரை:
மயில்தோகைதானே என்று அதை அளவுக்கு அதிகமாக வண்டியில் ஏற்றினால் வண்டியின் அச்சு முறிந்துபோகும்.
மணக்குடவர் உரை:
பீலி யேற்றிய சகடமும் அச்சுமுறியும்; அப்பீலியை மிகவும் அளவின்றியேற்றின். இஃது அரண் மிகுதல் நன்றென்றிருப்பார்க்குப் பகைமிகின் அரண் நில்லாதென்று கூறிற்று.
பரிமேலழகர் உரை:
பீலிபெய் சாகாடும் அச்சு இறும் - பீலியேற்றிய சகடமும் அச்சு முரியும், அப்பண்டம் சால மிகுத்துப் பெயின் - அப்பீலியை அது பொறுக்கும் அளவின்றி மிகுத்து ஏற்றின். (உம்மை சாகாட்டது வலிச்சிறப்பேயு மன்றிப் பீலியது நொய்மைச் சிறப்பும் தோன்ற நின்றது. 'இறும்' என்னுஞ் சினைவினை முதல்மேல் நின்றது. 'எளியர்' என்று பலரோடு பகைகொள்வான், தான் வலியனே ஆயினும் அவர் தொக்கவழி வலியழியும் , என்னும் பொருள் தோன்ற நின்றமையின் இது பிறிது மொழிதல் என்னும் அலங்காரம். இதனை 'நுவலா நுவற்சி' என்பாரும், 'ஒட்டு' என்பாரும்உளர். ஒருவன் தொகுவார் பலரோடு பகைகொள்ளற்க என்றமையின், இதனால் மாற்றான் வலியும் அவன் துணை வலியும் அறியா வழிப்படும் இழுக்குக் கூறப்பட்டது.)