Thirukural 441 of 1330 - திருக்குறள் 441 of 1330

Thirukural 441 of 1330 - திருக்குறள் 441 of 1330

thirukural
குறள் பால் : பொருட்பால். குறள் இயல் : அரசியல். அதிகாரம் : பெரியாரைத் துணைக்கோடல்.

அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை
திறனறிந்து தேர்ந்து கொளல்.

Translation:

As friends the men who virtue know, and riper wisdom share,
Their worth weighed well, the king should choose with care.

Explanation:

Let (a king) ponder well its value, and secure the friendship of men of virtue and of mature knowledge.

கலைஞர் உரை:

அறமுணர்ந்த மூதறிஞர்களின் நட்பைப் பெறும் வகை அறிந்து, அதனைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.

[ads-post]

மு. உரை:

அறம் உணர்ந்தவராய்த் தன்னை விட மூத்தவராய் உள்ள அறிவுடையவரின் நட்பை, கொள்ளும் வகை அறிந்து ஆராய்ந்து கொள்ள வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை:

அறத்தின் நுண்மையை அறிந்து, குறிப்பிட்ட துறையிலும் வளர்ந்த அறிவுடையவரின் நட்பை, அதன் அருமையையும், அதைப் பெறும் திறத்தையும் அறிந்து பெறுக.

மணக்குடவர் உரை:

அறத்தின் பகுதியறிந்து முதிர்ந்த அறிவுடையாரது கேண்மையை அவரவர் செய்தியாகிய திறங்களை யறிந்து ஆராய்ந்து கொள்க. இது புரோகிதரைக் கூட்டுமாறு கூறிற்று.

பரிமேலழகர் உரை:

அறன் அறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை - அறத்தினது நுண்மையை அறிந்து தன்னின் மூத்த அறிவுடையாரது கேண்மையை, தேர்ந்து திறன் அறிந்து கொளல் - அரசன் அதனது அருமையை ஓர்ந்து, கொள்ளும் திறன் அறிந்து கொள்க. (அறநுண்மை நூலானேயன்றி, உய்த்துணர்வானும் அறிய வேண்டுதலின், 'அறம் அறிந்து' என்றார். மூத்தல் - அறிவானும் சீலத்தானும் காலத்தானும் முதிர்தல். அறிவுஉடையார் நீதியையும் உலகஇயலையும் அறிதலை உடையார். திறன் அறிதலாவது நன்கு மதித்தல், உயரச் செய்தல், அவர் வரை நிற்றல் என்பன முதலாக அவர் பிணிப்புண்ணும் திறன் அறிந்து செய்தல்.)

thirukural, kural, thiruvalluvar, valluvar