குறள் பால் : பொருட்பால். குறள் இயல் : அரசியல். அதிகாரம் : கல்வி.
கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை.
Translation:
Learning
is excellence of wealth that none destroy;
To
man nought else affords reality of joy.
Explanation:
Learning
is the true imperishable riches; all other things are not riches.
கலைஞர் உரை:
கல்வி ஒன்றே அழிவற்ற செல்வமாகும். அதற்கொப்பான சிறந்த செல்வம் வேறு எதுவும் இல்லை.
[ads-post]
மு.வ உரை:
ஒருவனுக்கு அழிவு இல்லாத சிறந்த செல்வம் கல்வியே ஆகும், கல்வியைத் தவிர மற்றப் பொருள்கள் (அத்தகைய சிறப்புடைய) செல்வம் அல்ல.
சாலமன் பாப்பையா உரை:
கல்வியே அழிவு இல்லாத சிறந்த செல்வம்; பிற எல்லாம் செல்வமே அல்ல.
மணக்குடவர் உரை:
ஒருவனுக்குக் கேடில்லாத சீரிய
பொருளாவது கல்வி: மற்றவையெல்லாம் பொருளல்ல. இது கல்வி அழியாத செல்வமென்றது.
பரிமேலழகர் உரை:
ஒருவற்குக் கேடு இல் விழுச்
செல்வம் கல்வி - ஒருவனுக்கு இழிவு இல்லாத சீரிய செல்வமாவது கல்வி, மற்றையவை மாடு
அல்ல - அஃது ஒழிந்த மணியும் பொன்னும் முதலாயின செல்வமல்ல. (அழிவின்மையாவது :
தாயத்தார், கள்வர், வலியர், அரசர் என்ற
இவரால் கொள்ளப்படாமையும் வழிபட்டார்க்குக் கொடுத்துழிக் குறையாமையும் ஆம். சீர்மை
: தக்கார்கண்ணே நிற்றல். மணி , பொன் முதலியவற்றிற்கு இவ்விரண்டும் இன்மையின், அவற்றை 'மாடு அல்ல' என்றார். இவை
ஐந்து பாட்டானும் கல்வியது சிறப்புக் கூறப்பட்டது.)