Thirukural 393 of 1330 - திருக்குறள் 393 of 1330

Thirukural 393 of 1330 - திருக்குறள் 393 of 1330

thirukural

குறள் பால் : பொருட்பால். குறள் இயல் : அரசியல். அதிகாரம் : கல்வி.

கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லா தவர்.

Translation:

Men who learning gain have eyes, men say;
Blockheads' faces pairs of sores display.

Explanation:

The learned are said to have eyes, but the unlearned have (merely) two sores in their face.

கலைஞர் உரை:

கண்ணில்லாவிடினும் அவர் கற்றவராக இருப்பின் கண்ணுடையவராகவே கருதப்படுவார். கல்லாதவருக்குக் கண் இருப்பினும் அது புண் என்றே கருதப்படும்.

[ads-post]
 
மு. உரை:

கண்ணுடையவர் என்றுக் கூறப்படுபவர் கற்றவரே, கல்லாதவர் முகத்தில் இரண்டுப் புண் உடையவர் ஆவார்.

சாலமன் பாப்பையா உரை:

கற்றவரே கண் உடையவர்; கல்லாதவரோ முகத்தில் இரண்டு புண்ணையே உடையவர்.

மணக்குடவர் உரை:

கற்றோர் கண்ணுடைய ரென்று சொல்லப்படுவர்: கல்லாதார் முகத்தின்கண்ணே இரண்டு புண்ணுடைய ரென்று சொல்லப்படுவர். அறிவு கல்வியின் கண்ணதாகலான் அக்கல்வியில்லாதார் கண் புண்ணாயிற்று.

பரிமேலழகர் உரை:

கண் உடையர் என்பவர் கற்றோர் - கண்ணுடையர் என்று உயர்த்துச் சொல்லப்படுவார் கற்றவரே, கல்லாதவர் முகத்து இரண்டு புண் உடையர் - மற்றைக் கல்லாதவர் முகத்தின்கண் இரண்டு புண்ணுடையர், கண்ணிலர் (தேயம்இடையிட்டவற்றையும் காலம் இடையிட்டவற்றையும் காணும் ஞானக்கண்உடைமையின் கற்றாரைக் கண்ணுடையர் என்றும் அஃதின்றி நோய்முதலியவற்றால் துன்பம் செய்யும் ஊனக்கண்ணேஉடைமையின், கல்லாதவரைப் புண்ணுடையர் என்றும் கூறினார்.மேல் கண்ணன்மை உணரநின்ற ஊனக்கண்ணின் மெய்ம்மைகூறியவாற்றான் , பொருள் நூல்களையும் கருவிநூல்களையும் கற்றாரது உயர்வும், கல்லாதாரது இழிவும் இதனான் தொகுத்துக்கூறப்பட்டன.)

thirukural, kural, thiruvalluvar, valluvar