குறள் பால் : காமத்துப்பால். குறள் இயல் : கற்பியல். அதிகாரம் : தனிப்படர்மிகுதி.
உறாஅர்க்கு உறுநோய் உரைப்பாய் கடலைச்
செறாஅஅய் வாழிய நெஞ்சு.
Translation:
Tell him thy pain that loves not thee?
Farewell, my soul, fill up the sea!.
Explanation:
Live, O my soul, would you who relate your
great sorrow to strangers, try rather to fill up your own sea (of sorrow).
கலைஞர் உரை:
நெஞ்சமே! நீ வாழ்க! உன்னிடம் அன்பு இல்லாதவரிடம் உனது துன்பத்தைச் சொல்லி ஆறுதல் பெறுவதைக் காட்டிலும் கடலைத் தூர்ப்பது எளிதான வேலையாகும்.
[ads-post]
மு.வ உரை:
நெஞ்சமே! நீ வாழி! அன்பு இல்லாதவரிடம் உன் மிகுந்த துன்பத்தைச் சொல்கின்றாய்! அதை விட எளிதாகக் கடலைத் தூர்ப்பாயாக.
சாலமன் பாப்பையா உரை:
நெஞ்சே நீ வாழ்க! பாவம், நீ ஏன் உன்னோடு உறவில்லாதவர்க்கு உன் அளவற்ற துன்பத்தைச் சொல்லிக் கொண்டிருக்கிறாய்? (அதற்குப் பதில்) உன்னைத் துன்புறுத்தும் கடலைத் தூர்க்க முயற்சி செய்; அது முடியும்.
மணக்குடவர் உரை:
நெஞ்சே! நம்மோடு அன்புற்றார்க்குத் தூது விட்டாலும் பயனில்லை யென்று உன்னோடு உறாதார்க்கு நீயுற்ற நோயைச் சொல்ல நினையா நின்றாய்: நம்மை உறங்காமல் வருத்துகின்ற கடலைத் தூர்ப்பாயாயின் அஃது அதனினும் நன்று. இது தூதுவிடக் கருதிய நெஞ்சுக்குத் தூதுவிட்டாலும் பயனில்லை யென்று தலைமகள் கூறியது.
பரிமேலழகர் உரை:
(தலைமகன் தூது வரப்பெறாது தான் தூதுவிடக் கருதியாள் நெஞ்சோடு சொல்லியது.) உறார்க்கு உறுநோய் உரைப்பாய் நெஞ்சு - நின்னோடு உறாதார்க்கு நின் நோயை உரைக்கலுற்ற நெஞ்சே; கடலைச் செறாய் - நீ ஆற்றாயாயினும் அரிதாய அதனையொழிந்து, நினக்குத் துயரஞ் செய்கின்ற கடலைத் தூர்க்க முயல்வாயாக, அஃது எளிது. (உரைக்கலுற்றது அளவிறந்த நோயாகலானும், கேட்பார் உறவிலராகலானும், அது முடிவதொன்று அன்று; முடிந்தாலும் பயன் இல்லை என்பது கருதாது, முயலாநின்றாய் என்னும் குறிப்பான், 'வாழிய' என்றாள்.).