குறள் பால் : காமத்துப்பால். குறள் இயல் : கற்பியல். அதிகாரம் : பசப்புறுபருவரல்.
பசப்பெனப் பேர்பெறுதல் நன்றே நயப்பித்தார்
நல்காமை தூற்றார் எனின்.
Translation:
'This well, though men deride me for my
sickly hue of pain;
If they from calling him unkind, who won my
love, refrain.
Explanation:
It would be good to be said of me that I
have turned sallow, if friends do not reproach with unkindness him who pleased
me (then).
கலைஞர் உரை:
என்னைப் பிரிவுக்கு உடன்படுமாறு செய்த காதலரை அன்பில்லாதவர் என்று யாரும் தூற்றமாட்டார்கள் எனில், பசலை படர்ந்தவள் என நான் பெயரெடுப்பது நல்லது தான்!.
[ads-post]
மு.வ உரை:
பிரிவுக்கு உடன்படச் செய்த காதலர் பிரிந்து வருத்துதலைப் பிறர் தூற்றாமல் இருப்பாரானால், யான் பசலை உற்றதாக பெயர் எடுத்தல் நல்லதே.
சாலமன் பாப்பையா உரை:
என்னைச் சம்மதிக்கச் செய்து பிரிந்தவர் இன்னும் வராமல் இருப்பதை எண்ணி அவரை ஏசாமல், இவளே பசலை ஆயினாள் என்று இம்மக்கள் சொல்லுவர் என்றால் அப்படி ஓரு பெயரைப் பெறுவதும் நல்லதே.
மணக்குடவர் உரை:
பசந்தாளெனப் பேர்பெறுதல் நன்று: நம்மைக் காதலிப்பித்தவர் அருளாமையை இவ்வூரார் கூறாராயின். இது நின்மேனி பசந்ததென்ற தோழிக்கு அவ்வளவாய்க் குற்றமில்லையென்று தலைமகள் கூறியது.
பரிமேலழகர் உரை:
(தலைமகள் ஆற்றுதற்பொருட்டுத் தோழி தலைமகனை இயற்பழித்தவழி அவள் இயற்பட மொழிந்தது.) நயப்பித்தார் நல்காமை தூற்றார் எனின் - அன்று தாம் குறை நயப்பித்துக் கூடியவர்க்கு இன்று நல்காமையை நட்டோர் தூற்றாராயின்; பசப்பு எனப் பேர் பெறுதல் நன்றே - பசப்புற்றாள் என வேற்றுமையானன்றிப் பசப்புந்தான் ஆயினாள் என ஒற்றுமையால் தாம் சொல்ல அப்பெயரைப் பெறுதல் எனக்கு நன்று. ('நட்டார்' என்பது அவாய்நிலையான் வந்தது. இயற்பழித்தல் பொறாது புலக்கின்றாளாகலின், இகழ்ச்சிக் குறிப்பால் கூறினாள், அவரை அருளிலர் என்னாது 'இன்னும் பசந்தாள் இவள் என்கையே யான் ஆற்றும் நெறியாவது' என்பதாம்.).