குறள் பால் : காமத்துப்பால். குறள் இயல் : கற்பியல். அதிகாரம் : கண்விதுப்பழிதல்.
உழந்துழந் துள்நீர் அறுக விழைந்திழைந்து
வேண்டி அவர்க்கண்ட கண்.
Translation:
Aching, aching, let those exhaust their
stream,
That melting, melting, that day gazed on
him.
Explanation:
The eyes that became tender and gazed
intently on him, may they suffer so much as to dry up the fountain of their
tears.
கலைஞர் உரை:
அன்று, இழைந்து குழைந்து ஆசையுடன் அவரைக் கண்ட கண்களே! இன்று பிரிந்து சென்றுள்ள அவரை நினைத்துக் தூங்காமலும், துளிக் கண்ணீரும் அற்றுப்போகும் நிலையிலும் துன்பப்படுங்கள்.
[ads-post]
மு.வ உரை:
அன்று விரும்பி நெகிழ்ந்து காதலரைக் கண்ட கண்கள் இன்று உறக்கமில்லாத துன்பத்தால் வருந்தி வருந்திக் கண்ணீரும் அற்றுப் போகட்டும்.
சாலமன் பாப்பையா உரை:
விரும்பி மகிழ்ந்து விடாமல் அன்று அவரைக் கண்ட கண்களின் உள் இருக்கும் கண்ணீர் எல்லாம் இன்று வருந்தி வருந்தி வற்றிப் போகட்டும்!.
மணக்குடவர் உரை:
அழுதலை யுழந்துழந்து உள்ளநீர் அறுவனவாக; தாம் வேண்டினவரை விரும்பி நெகிழ்ந்து கண்டகண்கள். இஃது இவ்வாறு அழுதல் தகாதென்ற தோழிக்குத் தலைமகள் கூறியது.
பரிமேலழகர் உரை:
(இதுவும் அது) விழைந்து இழைந்து வேண்டி அவர்க் கண்ட கண் - விழைந்து உள்நெகிழ்ந்து விடாதே அன்று அவரைக் கண்ட கண்கள்; உழந்துழந்து உள்நீர் அறுக-இன்று இத்துயிலாது அழுங்கலாய துன்பத்தினை உழந்து தம் அகத்துள்ள நீர் அற்றே போக. (அடுக்கு இடைவிடாமைக்கண் வந்தது. அறுதலாகிய இடத்து நிகழ்பொருளின் தொழில் இடத்தின் மேல் நின்றது)