குறள் பால் : காமத்துப்பால். குறள் இயல் : களவியல். அதிகாரம் : அலரறிவுறுத்தல்.
ஊரவர் கெளவை எருவாக அன்னைசொல்
நீராக நீளும்இந் நோய்.
Translation:
My anguish grows apace: the town's report
Manures it; my mother's word doth water it.
Explanation:
This malady (of lust) is manured by the
talk of women and watered by the (harsh) words of my mother.
கலைஞர் உரை:
ஒருவரையொருவர் விரும்பி மலர்ந்த காதலானது ஊர்மக்கள் பேசும் பழிச்சொற்களை எருவாகவும் அன்னையின் கடுஞ்சொற்களை நீராகவும் கொண்டு வளருமே தவிரக் கருகிப் போய்விடாது.
[ads-post]
மு.வ உரை:
இந்தக் காம நோய் ஊராரின் அலர் தூற்றலே எருவாகவும் அன்னை கடிந்து சொல்லும் கடுஞ்சொல்லே நீராகவும் கொண்டு செழித்து வளர்கின்றது.
சாலமன் பாப்பையா உரை:
இந்த ஊர்ப் பெண்கள் பேசும் பேச்சே உரமாக தாயின் தடைச்சொல் நீராக என் காதல் பயிர் வளரும்.
மணக்குடவர் உரை:
ஊரார் எடுத்த அலர் எருவாக அன்னை சொல்லும் சொற்கள் நீராக இந்நோய் வளராநின்றது. இஃது அலரின் ஆற்றாளாகிய தலைமகள் தோழிக்குச் சொல்லியது. இவையிரண்டிற்கும் வரைவானாதல் பயன்.
பரிமேலழகர் உரை:
(வரைவு நீட ஆற்றாளாய தலைமகளைத் தலைமகன் சிறைப்புறத்தானாதல் அறிந்த தோழி, ஊரவர் அலரும் அன்னை சொல்லும் நோக்கி ஆற்றல் வேண்டும் எனச் சொல்லெடுப்பியவழி அவள் சொல்லியது.) இந்நோய் - இக்காம நோயாகிய பயிர்; ஊரவர் கௌவை எருவாக அன்னை சொல் நீராக நீளும் - இவ்வூரின் மகளிர் எடுக்கின்ற அலர் எருவாக அது கேட்டு அன்னை வெகுண்டு சொல்லுகின்ற வெஞ்சொல் நீராக, வளராநின்றது. ('ஊரவர்' என்பது தொழிலான் ஆணொழித்து நின்றது. ஏக தேச உருவகம். சுருங்குதற்கு ஏதுவாவன தாமே விரிதற்கு ஏதுவாக நின்றன என்பதாம். வரைவானாதல் பயன்.).