குறள் பால் : பொருட்பால். குறள் இயல் : குடியியல். அதிகாரம் : இரவச்சம்.
இரவுள்ள உள்ளம் உருகும் கரவுள்ள
உள்ளதூஉம் இன்றிக் கெடும்.
Translation:
The heart will melt away at thought of
beggary,
With thought of stern repulse 'twill perish
utterly.
Explanation:
To think of (the evil of) begging is enough
to melt one's heart; but to think of refusal is enough to break it.
கலைஞர் உரை:
இரந்து வாழ்வோர் நிலையை நினைக்கும் போது உள்ளம் உருகுகிறது, இருப்பதைக் கொடுக்க மனமின்றி மறைத்து வாழ்பவரை நினைத்தால் உருகிடவும் வழியின்றி உள்ளமே ஒழிந்து விடுகிறது.
[ads-post]
மு.வ உரை:
இரத்தலின் கொடுமையை நினைத்தால் உள்ளம் கரைந்து உருகும், உள்ளதை ஒழிக்கும் கொடுமையை நினைத்தால் உருகுமளவும் இல்லாமல் அழியும்.
சாலமன் பாப்பையா உரை:
பிறரிடம் போய்ப் பிச்சை ஏற்று நிற்கும் கொடுமையை எண்ணினால் என் உள்ளம் உருகும். இக்கொடுமையைப் பார்த்த பிறகும் இல்லை என்று மறைப்பவர் கொடுமையை எண்ணினால் உருகும் உள்ளமும் இல்லாது அழிந்துவிடும்.
மணக்குடவர் உரை:
இரப்பென்று நினைக்க உள்ளம் கரையும்: இரக்கப்பட்டவர் கரக்கு மதனை நினைக்கக் கரைந்து நின்ற உள்ளமும் மாய்ந்து கெடும். இஃது இரப்பார்க்கு ஆக்கமில்லை என்றது.
பரிமேலழகர் உரை:
இரவு உள்ள உள்ளம் உருகும் - உடையார் முன் இல்லார் சென்று இரந்து நிற்றலின் கொடுமையை நினைத்தால் எம் உள்ளங் கரைந்து உருகாநிற்கும்; கரவு உள்ளதூஉம் இன்றிக் கெடும் - இனி அந்நிலையைக் கண்டுவைத்தவர் இல்லை என்றலின் கொடுமையை நினைத்தால், அவ்வுருகுமளவுதானும் இன்றிப் பொன்றிவிடும் ('இரவினை, உள்ளுங்கால் உள்ளம் உருகுமால் என்கொலோ, கொள்ளுங்கால் கொள்வார் குறிப்பு' (நாலடி.305)என்றார் பிறரும், இரவினும் கரவு கொடிது என்பதாம்.இதற்குப் பிறரெல்லாம் 'இரக்கின்றவர் உள்ளம் உருகும்'என்று உரைத்தார்.)