குறள் பால் : பொருட்பால். குறள் இயல் : குடியியல். அதிகாரம் : நாணுடைமை.
நாணால் உயிரைத் துறப்பர் உயிர்ப்பொருட்டால்
நாண்துறவார் நாணாள் பவர்.
Translation:
The men of modest soul for shame would life
an offering make,
But ne'er abandon virtuous shame for life's
dear sake.
Explanation:
The modest would rather lose their life for
the sake of modesty than lose modesty for the sake of life.
கலைஞர் உரை:
நாண உணர்வுடையவர்கள், மானத்தைக் காப்பாற்றிக் கொள்ள உயிரையும் விடுவார்கள். உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக மானத்தை விடமாட்டார்கள்.
[ads-post]
மு.வ உரை:
நாணத்தை தமக்கரிய பண்பாகக் கொள்பவர் நாணத்தால் உயிரை விடுவர், உயிரைக் காக்கும் பொருட்டாக நாணத்தை விட மாட்டார்.
சாலமன் பாப்பையா உரை:
நாணத்தின் சிறப்பை அறிந்து அதன் வழி நடப்பவர் நாணமா, உயிரா,என்ற நெருக்கடி வரும்போது உயிரையே விடுவர்; உயிரைக் காக்க நாணத்தை விடமாட்டார்.
மணக்குடவர் உரை:
நாணுடைமைப் பொருட்டாக உயிரைத் துறப்பார்: உயிர்ப் பொருட்டாக நாணைத்துறவார், நாணம் வேண்டுபவர். இது நாண் உயிரினும் சிறந்ததென்றது.
பரிமேலழகர் உரை:
நாண் ஆள்பவர் - நாணினது சிறப்பு அறிந்து அதனை விடாதொழுகுவார்; நாணால் உயிரைத் துறப்பர் - அந்நாணும் உயிரும் தம்முள் மாறாயவழி நாண் சிதையாமைப் பொருட்டு உயிரை நீப்பர்; உயிர்ப்பொருட்டு நாண் துறவார் - உயிர் சிதையாமைப் பொருட்டு நாணினை நீக்கார். (உயிரினும் நாண் சிறந்ததென்பதாம். இவை இரண்டு பாட்டானும் அவர் செயல் கூறப்பட்டது.)