குறள் பால் :
அறத்துப்பால். குறள் இயல் :
துறவறவியல். அதிகாரம் :
கூடாவொழுக்கம்.
கணைகொடிது யாழ்கோடு செவ்விதுஆங் கன்ன
வினைபடு பாலால் கொளல்.
Translation:
Cruel
is the arrow straight, the crooked lute is sweet,
Judge
by their deeds the many forms of men you meet.
Explanation:
As,
in its use, the arrow is crooked, and the curved lute is straight, so by their
deeds, (and not by their appearance) let (the uprightness or crookedness of)
men be estimated.
கலைஞர் உரை:
நேராகத் தோன்றும் அம்பு, கொலைச் செயல் புரியும். வளைந்து தோன்றும் யாழ், இசை, இன்பம் பயக்கும். அது போலவே மக்களின் பண்புகளையும் அவர்களது செயலால் மட்டுமே உணர்ந்து கொள்ள வேண்டும்.
[ads-post]
மு.வ உரை:
நேராகத் தோன்றினும் அம்பு கொடியது; வளைவுடன் தோன்றினாலும் யாழின் கொம்பு நன்மையானது. மக்களின் பண்புகளையும் செயல்வகையால் உணர்ந்துகொள்ள வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை:
வடிவால் நேரானது என்றாலும் செயலால் அம்பு கொடியது. கழுத்தால் வளைந்தது ஆயினும் செயலால் யாழ் இனிது. அதனால் தோற்றத்தால் அன்றிச் செயலால் மனிதரை எடை போடுக.
மணக்குடவர் உரை:
செவ்விய கணை கொடுமையைச் செய்யும்; கோடியயாழ் செவ்வையைச் செய்யும்; அதுபோல யாவரையும் வடிவுகண்டறியாது; அவரவர் செய்யும் வினையின் பகுதியாலே யறிந்துகொள்க.
பரிமேலழகர் உரை:
கணை கொடிது யாழ் கோடு செவ்விது - அம்பு வடிவால் செவ்விதாயினும், செயலால் கொடிது, யாழ் கோட்டால் வளைந்ததாயினும் செயலால் செவ்விது. ஆங்கு அன்ன வினைபடு பாலால் கொளல் - அவ்வகையே தவம்
செய்வோரையும் கொடியர் செவ்வியர் என்பது வடிவால் கொள்ளாது அவர்செயல்பட்ட கூற்றானே அறிந்து கொள்க. (கணைக்குச்செயல் கொலை, யாழுக்குச் செயல் இசையால் இன்பம் பயத்தல். அவ்வகையே செயல் பாவமாயின் கொடியர் எனவும், அறமாயின் செவ்வியர் எனவுங் கொள்க என்பதாம். இதனால் அவரை அறியும் ஆறு கூறப்பட்டது.).