குறள் பால் :
அறத்துப்பால். குறள் இயல் :
துறவறவியல். அதிகாரம் :
கள்ளாமை.
களவென்னும் காரறி வாண்மை அளவென்னும்
ஆற்றல் புரிந்தார்கண்ட இல்.
Translation:
Practice
of fraud's dark cunning arts they shun,
Who
long for power by 'measured wisdom' won.
Explanation:
That
black-knowledge which is called fraud, is not in those who desire that
greatness which is called rectitude.
கலைஞர் உரை:
அளவறிந்து வாழ்க்கை நடத்துகிற ஆற்றலுடையவர்களிடம், களவாடுதல் எனும் சூதுமதி கிடையாது.
[ads-post]
மு.வ உரை:
களவு என்பதற்கு காரணமான மயங்கிய அறிவு உடையவராயிருத்தல், அளவு அறிந்து வாழ்தலாகிய ஆற்றலை விரும்பினவரிடத்தில் இல்லை.
சாலமன் பாப்பையா உரை:
உயிர்களை நேசிக்கும் ஆசை கொண்டவரிடம், அடுத்தவர் பொருளைத் திருடும் இருண்ட அறிவு இராது.
மணக்குடவர் உரை:
களவாகிய பொல்லா அறிவுடைமை நேராகிய பெருமையைப் பொருந்தினார்மாட்டு இல்லை. இது நேரறிந்தவர் களவு காணாரென்றது.
பரிமேலழகர் உரை:
களவு என்னும் கார் அறிவு ஆண்மை - களவு என்று சொல்லப்படுகின்ற இருண்ட அறிவினை உடையராதல்; அளவு என்னும் ஆற்றல் புரிந்தார்கண் இல் - உயிர் முதலியவற்றை அளத்தல் என்னும் பெருமையை விரும்பினார்கண் இல்லை. (இருள் - மயக்கம். காரியத்தைக் காரணமாக உபசரித்துக் 'களவென்னும் கார் அறிவு ஆண்மை' என்றும், காரணத்தைக் காரியமாக்கி 'அளவு என்னும் ஆற்றல்' என்றும் கூறினார். களவும் துறவும், இருளும் ஒளியும் போலத் தம்முள் மாறாகலின், ஒருங்கு நில்லா என்பது இவை மூன்று பாட்டானும் கூறப்பட்டது.).