குறள் பால் :
அறத்துப்பால். குறள் இயல் :
இல்லறவியல். அதிகாரம் :
புறங்கூறாமை.
அறன்நோக்கி ஆற்றுங்கொல் வையம் புறன்நோக்கிப்
புன்சொல் உரைப்பான் பொறை.
Translation:
'Tis
charity, I ween, that makes the earth sustain their load.
Who,
neighbours' absence watching, tales or slander tell abroad.
Explanation:
The
world through charity supports the weight of those who reproach others
observing their absence.
கலைஞர் உரை:
ஒருவர் நேரில் இல்லாதபோது பழிச்சொல் கூறுவோனுடைய உடலை இவனைச் சுமப்பதும் அறமே என்று கருதித்தான் நிலம் சுமக்கிறது.
[ads-post]
மு.வ உரை:
ஒருவர் நேரில் இல்லாதது கண்டு பழிச்சொல் கூறுவோனுடைய உடல் பாரத்தை, இவனையும் சுமப்பதே எனக்கு அறம் என்று கருதி நிலம் சுமக்கின்றதோ?.
சாலமன் பாப்பையா உரை:
பிறர் இல்லாதபோது அவரைப் பழிக்கும் இழிசொற்களைப் பேசுபவனின் உடல் பாரத்தை இவனையும் சுமப்பதே என் தருமம் என்றெண்ணி இப்பூமி சுமக்கிறது போலும்!.
மணக்குடவர் உரை:
பிறனில்லாதவிடம் பார்த்துப் புறஞ்சொற் கூறுவானது உடற்பாரத்தை நிலம் தானே அறத்தை நோக்கிப் பொறுத்ததாம்: அல்லது போக்கும். இது புறங்கூறுவார்க்குத் துணையாவாரில்லை யென்றது.
பரிமேலழகர் உரை:
புறன் நோக்கிப் புன்சொல் உரைப்பான் பொறை - பிறர் நீங்கின அளவு பார்த்து அவர் பழித்துரையை உரைப்பானது உடற்பாரத்தை; வையம் அறன் நோக்கி ஆற்றுங்கொல் - நிலம் இக் கொடியது பொறுத்தலே எனக்கு அறமாவது எனக் கருதிப் பொறுக்கின்றது போலும்! (எல்லாவற்றையும் பொறுத்தல் இயல்பாயினும், இது பொறுத்தற்கு அரிது என்னும் கருத்தால், 'அறன் நோக்கி ஆற்றுங்கொல்' என்றார்.' இவை ஐந்து பாடடானும் புறம் கூறுவார்க்கு எய்தும் குற்றம் கூறப்பட்டது.).