திருவள்ளுவ மாலை 1 - 5 of 55 பாடல்கள் 



உடம்பிலி (அசரீரி)


1. திருத்தகு தெய்வத் திருவள் ளுவரோ
டுருத்தகு நற்பலகை யொக்க-விருக்க
வுருத்திர சன்ம ரெனவுரைத்து வானி
லொருக்கவோ வென்றதோர் சொல்.

விளக்கவுரை :

உருத்திரசர்மன் கழகப் பலகையிடத்துத் திருவள்ளுவருடன் ஒக்கவிருக்க வென்று வானில் ஓர் உரையெழுந்த்து.

நாமகள்

2. நாடா முதனான் மறைநான் முகனாவிற்
பாடா விடைப்பா ரதம்பகர்ந்தேன்--கூடாரை
யெள்ளிய வென்றி யிலங்கிலைவேன் மாறபின்
வள்ளுவன் வாயதென் வாக்கு.

விளக்கவுரை :

பாண்டிய வேந்தே!நான் படைப்புக் காலத்தில் நான்முகன் நாவிலிருந்து நான்மறை பாடினேன்; இடைக்காலத்திற் பாரதம் பாடினேன்;இன்று வள்ளுவன் வாயது என் பாட்டு.

[ads-post]

இறையனார்
.

3. என்றும் புலரா தியாணர்நாட் செல்லுகினு
நின்றலர்ந்து தேன்பிலிற்று நீர்மையதாய்க்--குன்றாத
செந்தளிர்க் கற்பகத்தின் தெய்வத் திருமலர்போன்
மன்புலவன் வள்ளுவன் வாய்ச்சொல்.

விளக்கவுரை :


திருவள்ளுவரின் திருக்குறள் நெடுங்காலஞ்செல்லினும் தேன் சொரியுந் தன்மையதான விண்ணக மலர்போலும்.

உக்கிரப்பெரு வழுதியார்.


4. நான்மறையின் மெய்ப்பொருளை முகப்பொருளா நான்முகத்தோன்
றான்மறைந்த வள்ளுவனாய்த் தந்துரைத்த - நூன்முறையை
வந்திக்க சென்னிவாய் வாழ்த்துக நன்னெஞ்சஞ்
சிந்திக்க கேட்க செவி.

விளக்கவுரை :

நான்முகன் வள்ளுவனாகத் தோன்றிக் கூறிய முப்பால் நூலை , என்தலை வணங்குக; வாய்வழுத்துக; மனம் ஊழ்குக (தியானிக்க) செவி கேட்க.

கபிலர்.

5. தினையளவு போதாச் சிறுபுன்னீர் நீண்ட
பனையளவு காட்டும் படித்தால் - மனையளகு
வள்ளைக் குறங்கும் வளநாட வள்ளுவனார்
வெள்ளைக் குறட்பா விரி.

விளக்கவுரை :

வீட்டுப் பறவைகள் வள்ளைப்பாட்டிற் குறங்கும் வளநாட்டரசே! திருவள்ளுவர் திருக்குறளின் சொற்சுருக்கப் பொருட்பெருக்கம். புல்நுனிப் பனித்துளி பனைவடிவைத் தன்னுள்ளடக்கிக் காட்டினாற் போலும்.

திருவள்ளுவ மாலை – நூல் அறிமுகம்


இப்பாடற்றிரட்டு கடைக் கழகப் புலவராற் பாடப்பட்டதன்று. பிற்காலத்து ஆரியச்சார்பான ஒருவரோ ஒரு சிலரோ அவர்பெயரிற் பாடிவைத்ததாகும் இதற்குச் சான்றுகள்:-

1. உடம்பிலி (அசரீரி) யுரையும் நாமகள் கூற்றும் இறைவன் பாராட்டும் என்று முப்பாக்கள் கலந்திருத்தல்.

2.இறையனாரகப் பொருளுரைக் கட்டுக் கதையிற் கூறப்பட்டுள்ள உருத்திரசன்மன் என்னும் ஐயாட்டை மூங்கைப் பிராமணச் சிறுவன், திருவள்ளுவரோடு ஒக்கவிருக்கவென்று வானுரையெழுந்ததாகக் கூறப்பட்டிருத்தல்.

3. இத்திருவள்ளுவமாலைப் பாடகராகக் குறிக்கப்பட்டவருட் பலர் திருவள்ளுவர் காலத்தவராக இருத்தல்.

4. திருக்குறள் ஆரியவேத வழிப்பட்டதாகப் பல பாட்டுக்கள் கூறுதல்.

5. பாக்களின் நடை பெரும்பாலும் பிற்காலத்த தாக விருத்தல்.

[ads-post]

6. உருத்திரசர்மன் என்னும் இயற்பெயர் உயர்வுப்பன்மை வடிவிற் குறிக்கப்பட்டிருத்தல்.

7. நல்கூர்வேள்வியார் பெயரிலுள்ள பாவில் மாதாநுபங்கி என்னும் ஒரு பொருளற்ற வடசொல் ஆளப்பட்டிருத்தல்.

8. சில பாக்களில் திருவள்ளுவர் கருத்திற்கு மாறாகப் பிராமணரை அந்தணரென்று குறித்திருத்தல்.

குறிப்புகள்:

1. இத் திருவள்ளுவ மாலை கடைக்கழகப் புலவரால் பாடப் பட்டதன்றாயினும் பலபாக்களிலுள்ள கருத்துக்கள் சிறந்தனவும் நடுநிலையானவும் மேற்கோளாக ஆளத்தக்கனவுமாக உள்ளன.

2. சில பாக்கள் அவற்றைப் பாடியவரின் அளவிறந்த ஆரிய வெறியையோ அடிமைத் தனத்தையோ காட்டுவனவாக வுள்ளன.

3. சிலபாக்கள் அளவிறந்த உயர்வுநவிற்சியாகவுள்ளன.

4. சிலபாக்கள் நூலின் பாகுபாட்டையே எடுத்துக்கூறுவன.


Thirukural 1330 of 1330 - திருக்குறள் 1330 of 1330

thirukural

குறள் பால் : காமத்துப்பால். குறள் இயல் : கற்பியல். அதிகாரம் : ஊடலுவகை.

ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம்
கூடி முயங்கப் பெறின்.

Translation:

A 'feigned aversion' coy to pleasure gives a zest;
The pleasure's crowned when breast is clasped to breast.

Explanation:

Dislike adds delight to love; and a hearty embrace (thereafter) will add delight to dislike.

கலைஞர் உரை:

ஒருவருக்கொருவர் செல்லமாகச் சினங்கொண்டு பிரிந்திருப்பது எனப்படும் ஊடல், இருவரும் சேர்ந்த பிறகு காதல் இன்பத்தை அதிகமாகப் பருகிட உதவும். எனவே ஊடல் கொள்வதே ஒரு இன்பமான செயல்தான்.

[ads-post]

மு. உரை:

காமத்திற்கு இன்பம் தருவது ஊடுதல் ஆகும், ஊடல் முடிந்த பின் கூடித் தழுவப் பெற்றால் அந்த ஊடலுக்கு இன்பமாகும்.

சாலமன் பாப்பையா உரை:

காதல் நுகர்ச்சிக்கு இன்பம் ஊடுதலே அவ்வூடலுக்கும் இன்பம், அளவு அறிந்து ஊடலை நீக்கிக் கூடித் தழுவுதலே.

மணக்குடவர் உரை:

காமத்திற்கு ஊடுதல் இன்பமாம்: அதன்பின் கூடிக்கலக்கப் பெற்றால் அதற்கு இன்பமாம். இது யாம் பெற்றோம்; பிறர் அதன் செவ்வியறியாமையால் பெறுதலரிதென்று கூறியது.

பரிமேலழகர் உரை:

(இதுவும் அது) காமத்திற்கு இன்பம் ஊடுதல் - காமநுகர்ச்சிக்கு இன்பமாவது அதனை நுகர்தற்குரியராவார் ஆராமைபற்றித் தம்முள் ஊடுதல்; அதற்கு இன்பம் கூடி முயங்கப்பெறின் - அவ்வூடுதற்கு இன்பமாவது அதனை அளவறிந்து நீங்கித் தம்முள் கூடி முயங்குதல் கூடுமாயின், அம்முயக்கம். (கூடுதல் - ஒத்த அளவினராதல். முதிர்ந்த துனியாயவழித் துன்பம் பயத்தலானும், முதிராத புலவியாயவழிக் கலவியின்பம் பயவாமையானும், இரண்டற்கும் இடையாகிய அளவறிந்து நீங்குதல் அரிது என்பதுபற்றி, 'கூடிமுயங்கப்பெறின்' என்றான். 'அவ்விரண்டு இன்பமும் யான் பெற்றேன்' என்பதாம்.) ஈண்டுப் பிரிவினை வடநூல் மதம் பற்றிச் செலவு, ஆற்றாமை, விதுப்பு, புலவி என நால்வகைத்தாக்கிக் கூறினார். அவற்றுள் செலவு பிரிவாற்றாமையுள்ளும்; ஆற்றாமை படர் மெலிந்திரங்கல் முதல் நிறையழிதல் ஈறாயவற்றுள்ளும்; விதுப்பு அவர்வயின் விதும்பல் முதல் புணர்ச்சி விதும்பல் ஈறாயவற்றுள்ளும்; புலவி நெஞ்சோடு புலத்தல் முதல் ஊடலுவகை ஈறாயவற்றுள்ளும் கண்டுகொள்க. அஃதேல், வட நூலார் இவற்றுடனே சாபத்தினானாய நீக்கத்தினையும் கூட்டிப் பிரிவினை ஐவகைத்து என்றாரால் எனின், அஃது அறம் பொருள் இன்பம் என்னும் பயன்களுள் ஒன்றுபற்றிய பிரிவு அன்மையானும், முனிவராணையான் ஒரு காலத்து ஓர் குற்றத்துளதாவதல்லது உலக இயல்பாய் வாராமையானும் ஈண்டு ஒழிக்கப்பட்டது என்க.


Thirukural 1329 of 1330 - திருக்குறள் 1329 of 1330

thirukural
குறள் பால் : காமத்துப்பால். குறள் இயல் : கற்பியல். அதிகாரம் : ஊடலுவகை.

ஊடுக மன்னோ ஒளியிழை யாமிரப்ப
நீடுக மன்னோ இரா.


Translation:

Let her, whose jewels brightly shine, aversion feign!
That I may still plead on, O night, prolong thy reign!.

Explanation:

May the bright-jewelled one feign dislike, and may the night be prolonged for me to implore her!.

கலைஞர் உரை:

ஒளி முகத்தழகி ஊடல் புரிவாளாக; அந்த ஊடலைத் தீர்க்கும் பொருட்டு நான் அவளிடம் இரந்து நிற்கும் இன்பத்தைப் பெறுவதற்கும் இராப்பொழுது இன்னும் நீடிப்பதாக.

[ads-post]

மு. உரை:

காதலி இன்னும் ஊடுவாளாக, அந்த ஊடலைத் தணிக்கும் பொருட்டு யாம் இரந்து நிற்குமாறு இராக்காலம் இன்னும் நீட்டிப்பதாக.

சாலமன் பாப்பையா உரை:

ஒளிமிகும் அணிகளை அணிந்த இவள் இன்னும் என்னோடு ஊடட்டும், அப்போது அதிக நேரம் இருக்கும்படி நான் வேண்டிக்கொள்ள, இந்த இரவு விடியாது நீளட்டும்.

மணக்குடவர் உரை:

விளங்கிய இழையினையுடையாள் என்றும் ஊடுவாளாக வேண்டும்: யாம் இவளை இரந்து ஊடல் தீர்க்கும் அளவும் இராப்பொழுது நெடிதாக வேண்டும். இது மனவூக்கத்தின்கண் வந்தது.

பரிமேலழகர் உரை:

(இதுவும் அது.) ஒளி இழை ஊடுக மன் - ஒளியிழையினை உடையாள் இன்னும் எம்மோடு ஊடுவாளாக; யாம் இரப்ப இரா நீடுக மன் - அங்ஙனம் அவள் ஊடிநிற்கும் அதனை உணர்த்துதற் பொருட்டு யாம் இரந்து நிற்றற்கும் காலம் பெறும் வகை, இவ்விரவு விடியாது நீட்டித்தல் வேண்டுக. ('ஊடுக', 'நீடுக' என்பன வேண்டிக்கோடற்பொருளன. 'மன்' இரண்டும் ஆக்கத்தின்கண் வந்தன. ஓகாரங்கள் அசைநிலை. கூடலின் ஊடலே அமையும் என்பதாம்).
Powered by Blogger.