Thirukural 758 of 1330 - திருக்குறள் 758 of 1330

thirukural
குறள் பால் : பொருட்பால். குறள் இயல் : கூழியல். அதிகாரம் : பொருள்செயல்வகை.

குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்று
உண்டாகச் செய்வான் வினை.

Translation:

As one to view the strife of elephants who takes his stand,
On hill he's climbed, is he who works with money in his hand.

Explanation:

An undertaking of one who has wealth in one's hands is like viewing an elephant-fight from a hill-top.

கலைஞர் உரை:

தன் கைப்பொருளைக்கொண்டு ஒரு தொழில் செய்வது என்பது யானைகள் ஒன்றோடொன்று போரிடும் போது இடையில் சிக்கிக் கொள்ளாமல் அந்தப் போரை ஒரு குன்றின் மீது நின்று காண்பதைப் போன்று இலகுவானது.

[ads-post]

மு. உரை:

தன் கைப்பொருள் ஒன்று தன்னிடம் இருக்க அதைக் கொண்டு ஒருவன் செயல் செய்தால், மலையின் மேல் ஏறி யானைப் போரைக் கண்டாற் போன்றது.

சாலமன் பாப்பையா உரை:

தன் கையிலே பணம் இருக்க ஒரு செயலைச் செய்யத் தொடங்குவது, ஒருவன் மலை மேல் ஏறி நின்று யானைச் சண்டையைக் கண்டது போலாம்.

மணக்குடவர் உரை:

குன்றின்மேல் ஏறியிருந்து யானையோடு யானை போர் செய்தலைக் கண்டாற் போலும். தன் கையகத்து எய்திய பொருளுண்டாக ஒரு வினையை யெடுத்துக் கொண்டு தொடங்கினவன் செய்யும் வினை. இது பொருளுடையார் தாம் வருந்தாமல் பிறரை வினைசெய்வாராக ஏவி வினைக்கண் விட்டிருக்கலாமென்றது.

பரிமேலழகர் உரை:

தன் கைத்து உண்டாக ஒன்று செய்வான் வினை - தன் கையதாகிய பொருளுண்டாக ஒரு வினையை எடுத்துக் கொண்டான் அதனைச் செய்தல்; குன்று ஏறி யானைப்போர் கண்டற்று - ஒருவன் மலைமேல் ஏறிநின்று யானைப்போரைக் கண்டால் ஒக்கும். ('கைத்து உண்டாக ஒன்று செய்வான்' எனக் கூட்டுக. 'ஒன்று'என்பது வினையாதல் 'செய்வான்' என்றதனாற் பெற்றாம்.குன்றேறியான் அச்சமும் வருத்தமும் இன்றி நிலத்திடை யானையும் யானையும் பொருபோரைத் தான் இனிதிருந்து காணுமதுபோலக் கைத்து உண்டாக வினையை மேற்கொண்டானும் அச்சமும் வருத்தமும் இன்றி வல்லாரை ஏவித் தான் இனிதிருந்து முடிக்கும்என்பதாம்.)


Thirukural 757 of 1330 - திருக்குறள் 757 of 1330

thirukural
குறள் பால் : பொருட்பால். குறள் இயல் : கூழியல். அதிகாரம் : பொருள்செயல்வகை.

அருளென்னும் அன்பீன் குழவி பொருளென்னும்
செல்வச் செவிலியால் உண்டு.

Translation:

'Tis love that kindliness as offspring bears:
And wealth as bounteous nurse the infant rears.

Explanation:

The child mercy which is borne by love grows under the care of the rich nurse of wealth.

கலைஞர் உரை:

அன்பு என்கிற அன்னை பெற்றெடுக்கும் அருள் என்கிற குழந்தை, பொருள் என்கிற செவிலித் தாயால் வளரக் கூடியதாகும்.

[ads-post]

மு. உரை:

அன்பினால் பெறப்பட்ட அருள் என்றுக் கூறப்படும் குழந்தை, பொருள் என்றுக் கூறப்படும் செல்வமுள்ள செவிலித் தாயால் வளர்வதாகும்.

சாலமன் பாப்பையா உரை:

அன்பு பெற்றெடுத்த அருள் என்னும் குழந்தை, பொருள் எனப்படும் இன்பம் தரும் வளர்ப்புத் தாயால் வளரும்.

மணக்குடவர் உரை:

அறம் செய்தற்குக் காரணமாகிய அன்பினின்றும் தோன்றிய அருளாகிய குழவி, பொருளென்று சொல்லப்படும் செல்வத்தை யுடைய செவிலித்தாய் வளர்த்தலாலே உண்டாம். இது பொருளுடையார்க்கே அறஞ்செய்தலாவதென்பது கூறிற்று.

பரிமேலழகர் உரை:

அன்பு ஈன் அருள் என்னும் குழவி - அன்பினால் ஈனப்பட்ட அருள் என்னும் குழவி; பொருள் என்னும் செல்வச் செவிலியால் உண்டு - பொருள் என்று உயர்த்துச் சொல்லப்படும் செல்வத்தையுடைய செவிலியான் வளரும். (தொடர்பு பற்றாதே வருத்தமுற்றார்மேல் செல்வதாய அருள் தொடர்பு பற்றிச் செல்லும் அன்பு முதிர்ந்துழி உளதாவதாகலின், அதனை 'அன்பு ஈன் குழவி' என்றும், அது வறியார்மேற் செல்வது அவ்வறுமை களையவல்லார்க்காதலின் பொருளை அதற்குச் 'செவிலி' என்றும், அஃது உலகிற் செவிலியர் போலாது, தானே எல்லாப் பொருளும் உதவி வளர்த்தலிற் செல்வச் செவிலி என்றும் கூறினார்.)
Powered by Blogger.