Thirukural 757 of 1330 - திருக்குறள் 757 of 1330

thirukural
குறள் பால் : பொருட்பால். குறள் இயல் : கூழியல். அதிகாரம் : பொருள்செயல்வகை.

அருளென்னும் அன்பீன் குழவி பொருளென்னும்
செல்வச் செவிலியால் உண்டு.

Translation:

'Tis love that kindliness as offspring bears:
And wealth as bounteous nurse the infant rears.

Explanation:

The child mercy which is borne by love grows under the care of the rich nurse of wealth.

கலைஞர் உரை:

அன்பு என்கிற அன்னை பெற்றெடுக்கும் அருள் என்கிற குழந்தை, பொருள் என்கிற செவிலித் தாயால் வளரக் கூடியதாகும்.

[ads-post]

மு. உரை:

அன்பினால் பெறப்பட்ட அருள் என்றுக் கூறப்படும் குழந்தை, பொருள் என்றுக் கூறப்படும் செல்வமுள்ள செவிலித் தாயால் வளர்வதாகும்.

சாலமன் பாப்பையா உரை:

அன்பு பெற்றெடுத்த அருள் என்னும் குழந்தை, பொருள் எனப்படும் இன்பம் தரும் வளர்ப்புத் தாயால் வளரும்.

மணக்குடவர் உரை:

அறம் செய்தற்குக் காரணமாகிய அன்பினின்றும் தோன்றிய அருளாகிய குழவி, பொருளென்று சொல்லப்படும் செல்வத்தை யுடைய செவிலித்தாய் வளர்த்தலாலே உண்டாம். இது பொருளுடையார்க்கே அறஞ்செய்தலாவதென்பது கூறிற்று.

பரிமேலழகர் உரை:

அன்பு ஈன் அருள் என்னும் குழவி - அன்பினால் ஈனப்பட்ட அருள் என்னும் குழவி; பொருள் என்னும் செல்வச் செவிலியால் உண்டு - பொருள் என்று உயர்த்துச் சொல்லப்படும் செல்வத்தையுடைய செவிலியான் வளரும். (தொடர்பு பற்றாதே வருத்தமுற்றார்மேல் செல்வதாய அருள் தொடர்பு பற்றிச் செல்லும் அன்பு முதிர்ந்துழி உளதாவதாகலின், அதனை 'அன்பு ஈன் குழவி' என்றும், அது வறியார்மேற் செல்வது அவ்வறுமை களையவல்லார்க்காதலின் பொருளை அதற்குச் 'செவிலி' என்றும், அஃது உலகிற் செவிலியர் போலாது, தானே எல்லாப் பொருளும் உதவி வளர்த்தலிற் செல்வச் செவிலி என்றும் கூறினார்.)


Thirukural 756 of 1330 - திருக்குறள் 756 of 1330

thirukural
குறள் பால் : பொருட்பால். குறள் இயல் : கூழியல். அதிகாரம் : பொருள்செயல்வகை.

உறுபொருளும் உல்கு பொருளும்தன் ஒன்னார்த்
தெறுபொருளும் வேந்தன் பொருள்.

Translation:

Wealth that falls to him as heir, wealth from the kingdom's dues,
The spoils of slaughtered foes; these are the royal revenues.

Explanation:

Unclaimed wealth, wealth acquired by taxes, and wealth (got) by conquest of foes are (all) the wealth of the king.

கலைஞர் உரை:

வரியும், சுங்கமும், வெற்றி கொள்ளப்பட்ட பகை நாடு செலுத்தும் கப்பமும் அரசுக்குரிய பொருளாகும்.

[ads-post]

மு. உரை:

இறையாக வந்து சேரும் பொருளும், சுங்கமாகக் கொள்ளும் பொருளும், தன் பகைவரை வென்று திறமையாகக் கொள்ளும் பொருளும் அரசனுடைய பொருள்களாகும்.

சாலமன் பாப்பையா உரை:

வாரிசுதாரர் இல்லாமல் வந்த பொருள் வெளிநாட்டு பொருட்களுக்கு விதிக்கப்படும் வரி தன் பகைவர் தனக்குக் கட்டும் கப்பம் என்னும் இவை எல்லாம் அரசிற்கு உரிய பொருள்களாம்.

மணக்குடவர் உரை:

தானே வந்துற்ற பொருளும், ஆயத்தால் வரும் பொருளும், தன் பகைவரை யடர்த்துக்கொண்ட பொருளும் அரசனுக்குப் பொருளாம். உறுபொருள்- காவற் பொருள்.

பரிமேலழகர் உரை:

உறுபொருளும் - உடையாரின்மையின் தானே வந்துற்ற பொருளும்; உல்கு பொருளும் - சுங்கமாகிய பொருளும்; தன் ஒன்னார்த் தெறுபொருளும் - தன் பகைவரை வென்று திறையாகக் கொள்ளும் பொருளும்; வேந்தன் பொருள் - அரசனுக்கு உரிய பொருள்கள். (உறுபொருள்: வைத்தார் இறந்துபோக நெடுங்காலம் நிலத்தின்கண் கிடந்து பின் கண்டெடுத்ததூஉம், தாயத்தார் பெறாததூஉமாம். சுங்கம் - கலத்தினும் காலினும் வரும் பண்டங்கட்கு இறையாயது. தெறுபொருள்: 'தெறுதலான் வரும் பொருள்' என விரியும். ஆறில் ஒன்று ஒழியவும் உரியன கூறியவாறு. இவை மூன்று பாட்டானும் அஃது ஈட்டும் நெறி கூறப்பட்டது.)


Thirukural 755 of 1330 - திருக்குறள் 755 of 1330

thirukural
குறள் பால் : பொருட்பால். குறள் இயல் : கூழியல். அதிகாரம் : பொருள்செயல்வகை.

அருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம்
புல்லார் புரள விடல்.

Translation:

Wealth gained by loss of love and grace,
Let man cast off from his embrace.

Explanation:

(Kings) should rather avoid than seek the accumulation of wealth which does not flow in with mercy and love.

கலைஞர் உரை:

பெரும் செல்வமாக இருப்பினும் அது அருள் நெறியிலோ அன்பு வழியிலோ வராதபோது அதனைப் புறக்கணித்துவிட வேண்டும்.

[ads-post]

மு. உரை:

அருளோடும், அன்போடும் பொருந்தாத வழிகளில் வந்த செல்வத்தின் ஆக்கத்தைப் பெற்று மகிழாமல் அதைத் தீமையானது என்று நீக்கிவிட வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை:

பிறர்மீது இரக்கமும் அன்பும் இல்லாமல் சேர்க்கும் பணச் சேமிப்பை ஏற்காது விட்டு விடுக.

மணக்குடவர் உரை:

அருளுடைமையோடும் அன்புடைமையோடும் வாராத பொருளால் வரும் ஆக்கத்தைப் பொருந்தாது போக விடுக. இது பொருள் தேடுங்கால் பிறர் வருத்தத்திற்கு உபகரியாதும் பயின்றார் மாட்டுக் காதலில்லாமலும் பொருள்தேடுதலைத் தவிர்கவென்றது.

பரிமேலழகர் உரை:

அருளொடும் அன்பொடும் வாராப் பொருள் ஆக்கம் - தாம் குடிகள் மாட்டுச் செய்யும் அருளொடும், அவர் தம்மாட்டுச் செய்யும் அன்பொடும் கூடி வாராத பொருளீட்டத்தை; புல்லார் புரள விடல் - அரசர் பொருந்தாது கழியவிடுக. (அவற்றோடு கூடி வருதலாவது, ஆறிலொன்றாய் வருதல், அவ்வாறு வாராத பொருளீட்டம் பசுமட்கலத்துள் நீர்போலத் செய்தானையும் கொண்டு இறத்தலின், அதனைப் 'புல்லார்' என்று ஒழியாது, 'புரளவிடல்' என்றும் கூறினார்.)
Powered by Blogger.