Thirukural 754 of 1330 - திருக்குறள் 754 of 1330

thirukural
குறள் பால் : பொருட்பால். குறள் இயல் : கூழியல். அதிகாரம் : பொருள்செயல்வகை.

அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறனறிந்து
தீதின்றி வந்த பொருள்.

Translation:

Their wealth, who blameless means can use aright,
Is source of virtue and of choice delight.

Explanation:

The wealth acquired with a knowledge of the proper means and without foul practices will yield virtue and happiness.

கலைஞர் உரை:

தீய வழியை மேற்கொண்டு திரட்டப்படாத செல்வம்தான் ஒருவருக்கு அறநெறியை எடுத்துக்காட்டி, அவருக்கு இன்பத்தையும் தரும்.

[ads-post]

மு. உரை:

சேர்க்கும் திறம் அறிந்து தீமை ஒன்றும் இல்லாமல், சேர்க்கப் பட்டுவந்த பொருள் ஒருவனுக்கு அறத்தையும் கொடுக்கும் இன்பத்தையும் கொடுக்கும்.

சாலமன் பாப்பையா உரை:

நேரிய வழிகை அறிந்து, தீமை ஏதும் செய்யாமல் சம்பாதிக்கப்பட்ட பணம் அறத்தையும் தரம்; இன்பத்தையும் தரும்.

மணக்குடவர் உரை:

அறத்தையும் தரும்: இன்பதையும் தரும்: பொருள் வருந்திறமறிந்து பிறர்க்குத் தீமை பயத்தலின்றி வந்த பொருள். இது பொருளால் கொள்ளும் பயன் அறஞ்செய்தலும் இன்பம் நுகர்தலும் அன்றே: அவ்விரண்டினையும் பயப்பது நியாயமாகத் தேடியபொருளாமாதலின் என்றது.

பரிமேலழகர் உரை:

திறன் அறிந்து தீது இன்றி வந்த பொருள் - செய்யும் திறத்தினை அறிந்து அரசன் கொடுங்கோன்மையிலனாக உளதாய பொருள்; அறன் ஈனும் இன்பமும் ஈனும் - அவனுக்கு அறத்தையும் கொடுக்கும், இன்பத்தையும் கொடுக்கும். (செய்யுந்திறம்: தான் பொருள் செய்தற்கு உரிய நெறி. 'இலனாக' என்றது 'இன்றி' எனத் திரிந்து நின்றது. 'செங்கோல்' என்று புகழப்படுதலானும், கடவுட்பூசை தானங்களாற் பயனெய்தலானும், 'அறன் ஈனும்' என்றும், நெடுங்காலம் நின்று துய்க்கப்படுதலான், 'இன்பமும் ஈனும்' என்றும் கூறினார். அதனான் அத்திறத்தான் ஈட்டுக என்பதாம்.)


Thirukural 753 of 1330 - திருக்குறள் 753 of 1330

thirukural
குறள் பால் : பொருட்பால். குறள் இயல் : கூழியல். அதிகாரம் : பொருள்செயல்வகை.

பொருளென்னும் பொய்யா விளக்கம் இருளறுக்கும்
எண்ணிய தேயத்துச் சென்று.

Translation:

Wealth, the lamp unfailing, speeds to every land,
Dispersing darkness at its lord's command.

Explanation:

The imperishable light of wealth goes into regions desired (by its owner) and destroys the darkness (of enmity therein).

கலைஞர் உரை:

பொருள் என்னும் அணையா விளக்கு மட்டும் கையில் இருந்துவிட்டால் நினைத்த இடத்துக்குச் சென்று இருள் என்னும் துன்பத்தைத் துரத்தி விட முடிகிறது.

[ads-post]

மு. உரை:

பொருள் என்று சொல்லப்படுகின்ற நந்தா விளக்கு, நினைத்த இடத்திற்குச் சென்று உள்ள இடையூற்றைக் கெடுக்கும்.

சாலமன் பாப்பையா உரை:

பணம் எனப்படும் அணையா விளக்கு அயல்நாட்டிற்குள்ளும் சென்று பகையாகிய இருளைப் போக்கும்.

மணக்குடவர் உரை:

பொருளென்னும் மெய்யாகிய ஒளி எண்ணப்பட்ட தேசமெல்லாவற்றினுஞ் சென்று பகையென்னும் இருளை அறுக்கும். இது, பொருள் ஒளியில்லாதார்க்கும் ஒளியுண்டாக்கும்; அரசன் பொருளுடையனானால் தான் கருதிய தேசமெல்லாம் தன்னாணை நடத்துவானென்றது.

பரிமேலழகர் உரை:

பொருள் என்னும் பொய்யா விளக்கம் - பொருள் என்று எல்லாரானும் சிறப்பிக்கப்படும் நந்தா விளக்கு; எண்ணிய தேயத்துச் சென்று இருள் அறுக்கும் - தன்னைச் செய்தவர்க்கு அவர் நினைத்த தேயத்துச் சென்று பகை என்னும் இருளைக் கெடுக்கும். (எல்லார்க்கும் எஞ்ஞான்றும் இன்றியமையாததாய் வருதல் பற்றி. 'பொய்யா விளக்கம்' என்றும், ஏனைய விளக்கோடு இதனிடை வேற்றுமை தோன்ற 'எண்ணிய தேயத்துச் சென்று' என்றும் கூறினார். ஏகதேச உருவகம். இவை மூன்று பாட்டானும் பொருளது சிறப்புக் கூறப்பட்டது.


Thirukural 752 of 1330 - திருக்குறள் 752 of 1330

thirukural
குறள் பால் : பொருட்பால். குறள் இயல் : கூழியல். அதிகாரம் : பொருள்செயல்வகை.

இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை
எல்லாரும் செய்வர் சிறப்பு.

Translation:

Those who have nought all will despise;
All raise the wealthy to the skies.

Explanation:

All despise the poor; (but) all praise the rich.

கலைஞர் உரை:

பொருள் உள்ளவர்களைப் புகழ்ந்து போற்றுவதும் இல்லாதவர்களை இகழ்ந்து தூற்றுவதும்தான் இந்த உலக நடப்பாக உள்ளது.

[ads-post]

மு. உரை:

பொருள் இல்லாதவரை (வேறு நன்மை உடையவராக இருந்தாலும்) எல்லாரும் இகழ்வார், செல்வரை (வேறு நன்மை இல்லாவிட்டாலும்) எல்லாரும் சிறப்பு செய்வர்.

சாலமன் பாப்பையா உரை:

பணம் இல்லாதவரை எல்லாரும் இகழ்வர். செல்வரையோ எல்லாரும் பெருமைப்படுத்துவர்.

மணக்குடவர் உரை:

பொருளில்லாதாரை எல்லாரும் இகழுவர்; பொருளுடையாரை எல்லாருஞ் சிறப்புச் செய்வர். இது சிறப்பெய்தலும் பொருளுடைமையாலே வருமென்றது.

பரிமேலழகர் உரை:

இல்லாரை எல்லாரும் எள்ளுவர் - எல்லா நன்மையும் உடையராயினும் பொருளில்லாரை யாவரும் இகழ்வர்; செல்வரை எல்லாரும் சிறப்புச் செய்வர் - எல்லாத்தீமையும் உடையராயினும் அஃது உடையாரை யாவரும் உயரச் செய்வர். (உயரச் செய்தல் - தாம் தாழ்ந்து நிற்றல். இகழ்தற்கண்ணும் தாழ்தற்கண்ணும் பகைவர், நட்டார், நொதுமலர் என்னும் மூவகையாரும் ஒத்தலின், 'யாவரும்' என்றார். பின்னும் கூறியது அதனை வலியுறுத்தற்பொருட்டு.)
Powered by Blogger.