Thirukural 743 of 1330 - திருக்குறள் 743 of 1330

thirukural
குறள் பால் : பொருட்பால். குறள் இயல் : அரணியல். அதிகாரம் : அரண்.

உயர்வகலம் திண்மை அருமைஇந் நான்கின்
அமைவரண் என்றுரைக்கும் நூல்.

Translation:

Height, breadth, strength, difficult access:
Science declares a fort must these possess.

Explanation:

The learned say that a fortress is an enclosure having these four (qualities) viz., height, breadth, strength and inaccessibility.

கலைஞர் உரை:

உயரம், அகலம், உறுதி, பகைவரால் அழிக்க இயலாத அமைப்பு ஆகிய நான்கும் அமைந்திருப்பதே அரணுக்குரிய இலக்கணமாகும்.

[ads-post]

மு. உரை:

உயரம், அகலம், உறுதி, பகைவரால் அழிக்க முடியாத அருமை ஆகிய இந்த நான்கும் அமைந்திப்பதே அரண் என்று நூலோர் கூறுவர்.

சாலமன் பாப்பையா உரை:

பகைவர் ஏற முடியாத உயரம், காவலர் நிற்க இயங்க வசதியான அகலம், இடிக்கமுடியாத வலிமை, கடக்க முடியாத பொறிகளின் அருமை, இந்நான்கையும் மிகுதியாக உடைய கோட்டையையே செயற்கை அரண் என்று நூல்கள் கூறும்.

மணக்குடவர் உரை:

உயர்ச்சியும், அகலமும், திண்மையும், கிட்டுதற்கு அருமையுமென்னும் இந்நான்கினது அமைதியுடையது மதிலாமென்று சொல்லுவர் நூலோர். திண்மையென்பது கல்லும் இட்டிகையும் இட்டுச் செய்தல்.

பரிமேலழகர் உரை:

உயர்வு, அகலம், திண்மை, அருமை இந்நான்கின் அமைவு - உயர்ச்சியும், அகலமும், திண்மையும், அருமையும் என்று சொல்லப்பட்ட இந்நான்கின் மிகுதியையுடைய மதிலை; அரண் என்று உரைக்கும் நூல் - அரண் என்று சொல்லுவர் நூலோர். (அமைவு, நூல் என்பன ஆகுபெயர். உயர்வு - ஏணியெய்தாதது. அகலம் - புறத்தோர்க்கு அகழலாகா அடியகலமும், அகத்தோர்க்கு நின்று வினை செய்யலாம் தலையகலமும். திண்மை - கல் இட்டிகைகளாற் செய்தலின் குத்தப்படாமை. அருமை - பொறிகளான் அணுகுதற்கு அருமை. பொறிகளாவன, 'வளைவிற் பொறியும் அடியிற்செறி நிலையும் கருவிர லூகமும் கல்லுமிழ் கவணும், பரிவுறு வெந்நெயும் பாகடு குழிசியும், காய்பொன் உலையும் கல்லிடு கூடையும் தூண்டிலும் துடக்கும் ஆண்டலை யடுப்பும் கவையும் கழுவும் புதையும் புழையும் ஐயவித் துலாமும் கைபெய ரூசியும் சென்றெறி சிரலும், பன்றியும் பணையும் எழுவும் சீப்பும் உழுவிறற் கணையமும் கோலும் குந்தமும் வேலும் சூலமும்' ( சிலப., அடைக் 207-216) என்றிவை முதலாயின)


Thirukural 742 of 1330 - திருக்குறள் 742 of 1330

thirukural
குறள் பால் : பொருட்பால். குறள் இயல் : அரணியல். அதிகாரம் : அரண்.

மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்
காடும் உடைய தரண்.

Translation:

A fort is that which owns fount of waters crystal clear,
An open space, a hill, and shade of beauteous forest near.

Explanation:

A fort is that which has everlasting water, plains, mountains and cool shady forests.

கலைஞர் உரை:

ஆழமும் அகலமும் கொண்ட அகழ், பரந்த நிலம், உயர்ந்து நிற்கும் மலைத்தொடர், அடர்ந்திருக்கும் காடு ஆகியவற்றை உடையதே அரணாகும்.

[ads-post]

மு. உரை:

மணிபோல் தெளிந்த நீரும், வெட்ட வெளியான நிலமும், மலையும், அழகிய நிழல் உடைய காடும் ஆகிய இவை நான்கும் உள்ளதே அரண் ஆகும்.

சாலமன் பாப்பையா உரை:

தெளிந்த நீர், வெட்ட வெளியான நிலம், உயர்ந்த மலை, அடர்ந்த காடு என்னும் இவையே நீர் அரண், நில அரண், மலை அரண், காட்டு அரண் என இயற்கை அரண்களாகும்.

மணக்குடவர் உரை:

தெளிந்த நீராயினும், நிழலும் நீருமிலாத வெறுநிலமாயினும், மலையாயினும், அழகிய நிழலினையுடைய காடாயினும் உடையது அரணாம். தெளிந்தநீர்- பெருநீர். இது கலங்காதாதலின். அணி நிழற்காடு என்றதனாலே செறிவுடைய காடென்று கொள்ளப்படும்.

பரிமேலழகர் உரை:

மணி நீரும் மண்ணும் மலையும் அணிநிழற் காடும் உடையது அரண் - மணி போலும் நிறத்தினையுடைய நீரும், வெள்ளிடை நிலமும், மலையும், குளிர்ந்த நிழலையுடைய காடும் உடையதே அரணாவது. (எஞ்ஞான்றும் வற்றாத நீர் என்பார் 'மணி நீர்' என்றும், நீரும் நிழலும் இல்லா மருநிலம் என்பார் 'மண்' என்றும், செறிந்த காடு என்பார். 'அணி நிழற் காடு' என்றும் கூறினார். மதிற்புறத்து மருநிலம் பகைவர் அரண் பற்றாமைப் பொருட்டு. நீரரண், நிலவரண், மலையரண், காட்டரண் என இயற்கையும் செயற்கையுமாய் இந்நான்கு அரணும் சூழப்படுவது அரண் என்பதாம்.)
Powered by Blogger.