Thirukural 732 of 1330 - திருக்குறள் 732 of 1330

thirukural
குறள் பால் : பொருட்பால். குறள் இயல் : அரணியல். அதிகாரம் : நாடு.

பெரும்பொருளால் பெட்டக்க தாகி அருங்கேட்டால்
ஆற்ற விளைவது நாடு.

Translation:

That is a 'land' which men desire for wealth's abundant share,
Yielding rich increase, where calamities are rare.

Explanation:

A kingdom is that which is desire for its immense wealth, and which grows greatly in prosperity, being free from destructive causes.

கலைஞர் உரை:

பொருள் வளம் நிறைந்ததாகவும், பிறர் போற்றத் தக்கதாகவும், கேடற்றதாகவும், நல்ல விளைச்சல் கொண்டதாகவும் அமைவதே சிறந்த நாடாகும்.

[ads-post]

மு. உரை:

மிக்க பொருள் வளம் உடையதாய், எல்லோரும் விரும்பத்தக்கதாய் கேடு இல்லாததாய், மிகுதியாக விளைபொருள் தருவதே நாடாகும்.

சாலமன் பாப்பையா உரை:

மிகுந்த பொருளை உடையது; அதனால் அயல்நாட்டாரால் விரும்பப்படுவது; பெரும் மழை, கடும் வெயில், கொடு விலங்கு, தீய பறவைகள், முறையற்ற அரசு ஆகிய கேடுகள் இல்லாதது; அதிக விளைச்சலை உடையது; இதுவே நாடு.

மணக்குடவர் உரை:

பெரும்பொருளாலே விரும்பத்தக்கதாகிக் கேடரிதாதலோடே மிகவும் விளைவது நாடு. பெரும்பொருள்- நெல்லு. கேடாவது விட்டில், கிளி, நால்வாய், பெரும் புயலென் றிவற்றான் வரும்நட்டம்.

பரிமேலழகர் உரை:

பெரும்பொருளால் பெட்டக்கது ஆகி - அளவிறந்த பொருளுடைமையால் பிற தேயத்தாரானும் விரும்பத்தக்கதாய்; அருங்கேட்டால் ஆற்ற விளைவது நாடு - கேடின்மையோடுகூடி மிகவிளைவதே நாடாவது. (அளவிறப்பு, பொருள்களது பன்மைமேலும் தனித்தனி அவற்றின் மிகுதி மேலும் நின்றது. கேடாவது, மிக்க பெயல், பெயலின்மை, எலி, விட்டில், கிளி, அரசண்மை என்றிவற்றான் வருவது. 'மிக்க பெயலோடு பெயலின்மை எலி விட்டில் கிளி அக்கண் அரசண்மையோடு ஆறு'. இவற்றை வடநூலார் 'ஈதிவாதைகள்'என்ப. இவற்றுள் முன்னையவற்றது இன்மை அரசன் அறத்தானும், பின்னையது இன்மை அவன் மறத்தானும் வரும். இவ்வின்மைகளான் மிகவிளைவதாயிற்று.)


Thirukural 731 of 1330 - திருக்குறள் 731 of 1330

thirukural
குறள் பால் : பொருட்பால். குறள் இயல் : அரணியல். அதிகாரம் : நாடு.

தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச்
செல்வரும் சேர்வது நாடு.

Translation:

Where spreads fertility unfailing, where resides a band,
Of virtuous men, and those of ample wealth, call that a 'land'.

Explanation:

A kingdom is that in which (those who carry on) a complete cultivation, virtuous persons, and merchants with inexhaustible wealth, dwell together.

கலைஞர் உரை:

செழிப்புக் குறையாத விளைபொருள்களும், சிறந்த பெருமக்களும், செல்வத்தைத் தீயவழியில் செலவிடாதவர்களும் அமையப்பெற்றதே நல்ல நாடாகும்.

[ads-post]

மு. உரை:

குறையாத விளைபொருளும் தக்க அறிஞரும் கேடில்லாத செல்வம் உடையவரும் கூடிப் பொருந்தியுள்ள நாடே நாடாகும்.

சாலமன் பாப்பையா உரை:

குறையாத உற்பத்தியைத் தரும் உழைப்பாளர்களும், அற உணர்வு உடையவர்களும், சுயநலம் இல்லாத செல்வரும் சேர்ந்து வாழ்வதே நாடு.

மணக்குடவர் உரை:

தப்பாமல் விளையும் நிலங்களும் தகுதி யுடையாரும் தாழ்வில்லாத செல்வரும் சேர்வது நாடு. தள்ளா விளையுள்- மழையில்லாத காலத்தினும் சாவிபோகாத நிலம்.

பரிமேலழகர் உரை:

தள்ளா விளையுளும் - குன்றாத விளையுளைச் செய்வோரும்; தக்காரும் - அறவோரும்; தாழ்வு இலாச் செல்வரும் - கேடு இல்லாச் செல்வமுடையோரும்; சேர்வது நாடு - ஒருங்கு வாழ்வதே நாடாவது: (மற்றை உயர்திணைப் பொருள்களோடும் சேர்தல்தொழிலோடும் இயையாமையின், 'விளையுள்' என்பது உழவர்மேல் நின்றது. குன்றாமை: எல்லா உணவுகளும் நிறைய உளவாதல். இதனான் வாழ்வார்க்கு வறுமையின்மை பெறப்பட்டது. அறவோர் - துறந்தோர், அந்தணர் முதலாயினார். 'நற்றவஞ்செய்வார்க்கு இடம்: தவம் செய்வார்க்கும் அஃது இடம்' (சீவக. நாமக.48) என்றார் பிறரும். இதனான் அழிவின்மை பெறப்பட்டது. கேடு இல்லாமை - வழங்கத் தொலையாமை. செல்வர் - கலத்தினும் காலினும் அரும்பொருள் தரும் வணிகர். இதனான் அரசனுக்கும் வாழ்வார்க்கும் பொருள் வாய்த்தல் பெறப்பட்டது.)


Thirukural 730 of 1330 - திருக்குறள் 730 of 1330

thirukural
குறள் பால் : பொருட்பால். குறள் இயல் : அமைச்சியல். அதிகாரம் : அவையஞ்சாமை.

உளரெனினும் இல்லாரொடு ஒப்பர் களன்அஞ்சிக்
கற்ற செலச்சொல்லா தார்.

Translation:

Who what they've learned, in penetrating words know not to say,
The council fearing, though they live, as dead are they.

Explanation:

Those who through fear of the assembly are unable to set forth their learning in an interesting manner, though alive, are yet like the dead.

கலைஞர் உரை:

தாம் கற்றவைகளைக் கேட்போரைக் கவரும் வண்ணம் கூற இயலாமல் அவைக்கு அஞ்சுவோர், உயிரோடு இருந்தாலும்கூட இறந்தவருக்குச் சமமானவராகவே கருதப்படுவார்கள்.

[ads-post]

மு. உரை:

அவைக்களத்திற்கு அஞ்சித் தாம் கற்றவைகளைக் (கேட்பவர் மனத்தில்) பதியுமாறு சொல்ல முடியாதவர், உயிரோடு வாழ்ந்தலும் இறந்தவர்க்கு ஒப்பாவர்.

சாலமன் பாப்பையா உரை:

அவையைப் பார்த்துப் பயந்து, படித்தவற்றை அவைக்கு ஏற்பச் சொல்லத் தெரியாதவர், வாழ்ந்தாலும் வாழாதவர்க்குச் சமமே.

மணக்குடவர் உரை:

உளராயினும் செத்தாரோடு ஒப்பார்: அவைக்களத்தை அஞ்சித் தாம் கற்றதனை அதற்கு இசையச் சொல்லமாட்டாதார். இது செத்தாரோடு ஒப்பரென்றது. இவை ஐந்தும் அவையஞ்சுதலான் வருங்குற்றம்கூறின.

பரிமேலழகர் உரை:

களன் அஞ்சிக் கற்ற செலச் சொல்லாதார் - அவைக்களத்தை அஞ்சித் தாம் கற்றவற்றை அதற்கு ஏற்கச் சொல்ல மாட்டாதார்; உளர் எனினும் இல்லாரொடு ஒப்பர் - உயிர் வாழ்கின்றாராயினும் உலகத்தாரால் எண்ணப்படாமையின் இறந்தாரோடு ஒப்பர். (ஈண்டுக் 'களன்' என்றது ஆண்டிருந்தாரை. இவை ஐந்து பாட்டானும் அவைஅஞ்சுவாரது இழிவு கூறப்பட்டது.)
Powered by Blogger.