Thirukural 715 of 1330 - திருக்குறள் 715 of 1330

thirukural
குறள் பால் : பொருட்பால். குறள் இயல் : அமைச்சியல். அதிகாரம் : அவையறிதல்.

நன்றென்ற வற்றுள்ளும் நன்றே முதுவருள்
முந்து கிளவாச் செறிவு.

Translation:

Midst all good things the best is modest grace,
That speaks not first before the elders' face.

Explanation:

The modesty by which one does not rush forward and speak in (an assembly of) superiors is the best among all (one's) good qualities.

கலைஞர் உரை:

அறிவாளிகள் கூடியிருக்கும் இடத்தில் முந்திரிக் கொட்டை போல் பேசாமல் இருக்கிற அடக்கமானது எல்லா நலன்களிலும் சிறந்த நலனாகும்.

[ads-post]

மு. உரை:

அறிவு மிகுந்தவரிடையே முந்திச் சென்று பேசாத அடக்கம் ஒருவனுக்கு நன்மை என்று சொல்லப்பட்டவை எல்லாவற்றிலும நல்லது.

சாலமன் பாப்பையா உரை:

தன் அறிவினுக்கும் மேலான அறிஞர் கூடியுள்ள அவையில் அவர் பேசுவதற்கு முன்பாகப் பேசாமல் அடங்கி இருப்பது, நல்லது என்று சொல்லப்பட்ட குணங்களுள் எல்லாம் நல்லது.

மணக்குடவர் உரை:

நன்றென்று சொல்லப்பட்ட எல்லாவற்றுள்ளும் மிக நன்று, தம்மின் முதிர்ந்தார்முன் அவரின் முற்பட்டு ஒன்றனைச் சொல்லாத அடக்கம். முதுவர்- தவத்தாலும் குலத்தாலும் கல்வியாலும் பிற யாதாலும் முதிர்ந்தார். இஃது இருந்த அவையின்கண் முந்துற்றுச் சொல்லல் ஆகா தென்றது.

பரிமேலழகர் உரை:

நன்று என்றவற்றுள்ளும் நன்றே - ஒருவற்கு இது நன்று என்று சிறப்பித்துச் சொல்லப்பட்ட குணங்கள் எல்லாவற்றுள்ளும் நன்றே; முதுவருள் முந்து கிளவாச் செறிவு - தம்மின் மிக்கார் அவைக்கண் அவரின் முற்பட்டு ஒன்றனைச் சொல்லாத அடக்கம். (தம் குறைவும், அவர் மிகுதியும், முந்து கிளர்ந்தாற் படும் இழுக்கும், கிளவாக்கால் எய்தும் நன்மையும் அறிந்தே அடங்கினமையின், அவ்வடக்கத்தினை 'நன்று என்றவற்றுள்ளும் நன்று' என்றார். முன் கிளத்தலையே விலக்கினமையின், உடன் கிளத்தலும் பின் கிளத்தலும்ஆம் என்பது பெற்றாம். இதனான் மிக்கார் அவைக்கண்செய்யும் திறம் கூறப்பட்டது.)


Thirukural 714 of 1330 - திருக்குறள் 714 of 1330

thirukural
குறள் பால் : பொருட்பால். குறள் இயல் : அமைச்சியல். அதிகாரம் : அவையறிதல்.

ஒளியார்முன் ஒள்ளிய ராதல் வெளியார்முன்
வான்சுதை வண்ணம் கொளல்.

Translation:

Before the bright ones shine as doth the light!
Before the dull ones be as purest stucco white!.

Explanation:

Ministers should be lights in the assembly of the enlightned, but assume the pure whiteness of mortar (ignorance) in that of fools.

கலைஞர் உரை:

அறிவாளிகளுக்கு முன்னால் அவர்களையொத்த பாலின் தூய்மையுடன் விளங்கும் அறிஞர்கள், அறிவில்லாதவர்கள் முன்னால் வெண்சுண்ணாம்பு போல் தம்மையும் அறிவற்றவர்களாய்க் காட்டிக் கொள்ள வேண்டும்.

[ads-post]

மு. உரை:

அறிவிற் சிறந்தவரின் முன் தானும் அறிவிற் சிறந்தவராக நடந்து கொள்ள வேண்டும், அறிவில்லாதவர் முன் தாமும் வெண் கண்ணம் போல் அறிவில்லாதவராய் இருக்க வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை:

தன்னிலும் மேலான தனக்குச் சமமான அறிஞர் கூடியுள்ள அவையில் தன் நூல் அறிவும் சொல்வன்மையும் வெளிப்படப் பேசுக; தன் அறிவிலும் குறைவான மக்கள் கூடியுள்ள அவையில் அவருக்கு விளங்கும்படி இறங்கிப் பேசுக.

மணக்குடவர் உரை:

ஒள்ளிய அறிவுடையார்முன்பு தாமும் ஒள்ளிய அறிவுடையராயிருத்தலும் வெள்ளிய அறிவுடையார் முன்பு வாலியசுதை வண்ணம் போன்ற வெண்மையைக் கொண்டிருத்தலும் அவையறிதலாவது.

பரிமேலழகர் உரை:

ஒளியார்முன் ஒள்ளியர் ஆதல்- அறிவால் ஒள்ளியாரவைக்கண் தாமும் ஒள்ளியராக; வெளியார்முன் வான்சுதை வண்ணம் கொளல் - ஏனை வெள்ளைகள் அவைக்கண் தாமும் வாலிய சுதையின் நிறத்தைக் கொள்க. ('ஒள்ளியார்' என்றது மிக்காரையும் ஒத்தாரையும். அது விகாரத்தால் 'ஒளியார்' என்று நின்றது. ஒள்ளியராதல்: தம் நூலறிவுஞ் சொல்வன்மையும் தோன்ற விரித்தல். அவை அறியாத புல்லாரை 'வெளியார்' என்றது. வயிரம் இல் மரத்தை 'வெளிறு' என்னும் வழக்குப்பற்றி. அவர் மதிக்கும் வகை அவரினும் வெண்மையுடையராக என்பார், 'வான் சுதை வண்ணம் கொளல்' என்றார். அவையளவு அறிந்தார் செய்யும் திறம் இதனான் தொகுத்துக் கூறப்பட்டது. பின்னர் விரித்துக் கூறுப.)


Thirukural 713 of 1330 - திருக்குறள் 713 of 1330

thirukural
குறள் பால் : பொருட்பால். குறள் இயல் : அமைச்சியல். அதிகாரம் : அவையறிதல்.

அவையறியார் சொல்லல்மேற் கொள்பவர் சொல்லின்
வகையறியார் வல்லதூஉம் இல்.

Translation:

Unversed in councils, who essays to speak.
Knows not the way of suasive words,- and all is weak.

Explanation:

Those who undertake to speak without knowing the (nature of the) court are ignorant of the quality of words as well as devoid of the power (of learning).

கலைஞர் உரை:

அவையின் தன்மை அறியாமல் சொற்களைப் பயன்படுத்துகிறவர்களுக்கு அந்தச் சொற்களின் வகையும் தெரியாது; பேசும் திறமையும் கிடையாது.

[ads-post]

மு. உரை:

அவையின் தன்மை அறியாமல் சொல்லுதலை மேற்கொள்கின்றவர், சொற்களின் வகை அறியாதவரே, அவர் சொல்லவல்லதும் இல்லை.

சாலமன் பாப்பையா உரை:

தம் பேச்சைக் கேட்கும் சபையின் இயல்பை அறியாமல் தொடர்ந்து பேசத் தொடங்குபவர், சொற்களின் கூறம் தெரியாதவர்; சொல்லும் திறமும் இல்லாதவர்.

மணக்குடவர் உரை:

அவையினது அளவை அறியாது ஒன்றைச் சொல்லுதலை மேற்கொள்பவர், சொல்லின் வகையும் அறியார்; அவ்வாறன்றி வேறு வல்லதூஉம் இலராவார்.

பரிமேலழகர் உரை:

அவை அறியார் சொல்லல் மேற்கொள்பவர் சொல்லின் வகை அறியார் - அவையினது அளவையறியாது ஒன்று சொல்லுதலைத் தம் மேற்கொள்வார் அச்சொல்லுதலின் கூறுபாடும் அறியார்; வல்லதூஉம் இல் - கற்றுவல்ல கலையும் அவர்க்கு இல்லை. (அம் மூவகைச் சொற்களால் வரும் சொல்லுதல் வகைமை, கேட்பாரது உணர்வு வகைமை பற்றி வருதலால், 'சொல்லின் வகையறியார்' என்றும், அஃது அறியார் என்று எல்லாரானும் இகழப்படுதலின் 'வல்லதூஉம்இல்' என்றும் கூறினார். இதனான் அவையறியாக்கால் வரும் குற்றம் கூறப்பட்டது.)
Powered by Blogger.