Thirukural 675 of 1330 - திருக்குறள் 675 of 1330

thirukural
குறள் பால் : பொருட்பால். குறள் இயல் : அமைச்சியல். அதிகாரம் : வினைசெயல்வகை.

பொருள்கருவி காலம் வினையிடனொடு ஐந்தும்
இருள்தீர எண்ணிச் செயல்.

Translation:

Treasure and instrument and time and deed and place of act:
These five, till every doubt remove, think o'er with care exact.

Explanation:

Do an act after a due consideration of the (following) five, viz. money, means, time, execution and place.

கலைஞர் உரை:

ஒரு காரியத்தில் .டுபடுவதற்கு முன்பு, அதற்குத் தேவையான பொருள், ஏற்ற கருவி, காலம், மேற்கொள்ளப் போகும் செயல்முறை, உகந்த இடம் ஆகிய ஐந்தையும் குறையில்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

[ads-post]

மு. உரை:

வேண்டிய பொருள், ஏற்றக்கருவி, தக்க காலம், மேற்கொண்ட தொழில், உரிய இடம் ஆகிய ஐந்தினையும் மயக்கம் தீர எண்ணிச் செய்ய வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை:

ஒரு செயலைச் செய்யத் தொடங்கும்போது தனக்கும் தன் எதிரிக்கும் இருக்கும் செல்வம், சாதனங்கள், ஏற்ற காலம், செயல்திறம், பொருத்தமான இடம் ஆகிய ஐந்தையும் சந்தேகத்திற்கு இடம் இல்லாமல் சிந்தித்துச் செய்க.

மணக்குடவர் உரை:

பொருளும், கருவியும், காலமும், வினையும் வினைசெய்யும் இடமுமென்னும் ஐந்தினையும் மயக்கந்தீர எண்ணிப் பின்பு வினைசெயத் தொடங்குக.

பரிமேலழகர் உரை:

பொருள் கருவி காலம் வினை இடனொடு ஐந்தும் - வினைசெய்யுமிடத்துப் பொருளும் கருவியும் காலமும் வினையும் இடனுமாகிய இவ்வைந்தனையும்; இருள் தீர எண்ணிச் செயல் - மயக்கம் அற எண்ணிச் செய்க. (எண்ணொடு, பிறவழியும் கூட்டப்பட்டது. பொருள் - அழியும் பொருளும் ஆகும் பொருளும். கருவி-தன்தானையும் மாற்றார் தானையும். காலம் - தனக்கு ஆகுங் காலமும் அவர்க்கு ஆகுங் காலமும். வினை - தான் வல்ல வினையும் அவர் வல்ல வினையும். இடம் - தான் வெல்லும் இடமும் அவர் வெல்லும் இடமும். இவற்றைத் தான் வெற்றியெய்தும் திறத்தில் பிழையாமல் எண்ணிச் செய்க என்பதாம்.)


Thirukural 674 of 1330 - திருக்குறள் 674 of 1330

thirukural
குறள் பால் : பொருட்பால். குறள் இயல் : அமைச்சியல். அதிகாரம் : வினைசெயல்வகை.

வினைபகை என்றிரண்டின் எச்சம் நினையுங்கால்
தீயெச்சம் போலத் தெறும்.

Translation:

With work or foe, when you neglect some little thing,
If you reflect, like smouldering fire, 'twill ruin bring.

Explanation:

When duly considered, the incomplete execution of an undertaking and hostility will grow and destroy one like the (unextinguished) remnant of a fire.

கலைஞர் உரை:

ஏற்ற செயலையோ, எதிர்கொண்ட பகையையோ முற்றாக முடிக்காமல் விட்டுவிட்டால் அது நெருப்பை அரை குறையாக அணைத்தது போலக் கேடு விளைவிக்கும்.

[ads-post]

மு. உரை:

செய்யத்தொடங்கியச் செயல், கொண்ட பகை என்று இவ்விரண்டின் குறை ஆராய்ந்து பார்த்தால், தீயின் குறைபோல் தெரியாமல் வளர்ந்து கெடுக்கும்.

சாலமன் பாப்பையா உரை:

செய்யத் தொடங்கிய செயல், அழிக்கத் தொடங்கிய பகை இவை இரண்டிலும் மிச்சம் இருந்தால் அவை தீயின் மிச்சம் போல வளர்ந்து அழிக்கும் (ஆதலால் எதையும் முழுமையாகச் செய்க).

மணக்குடவர் உரை:

வினையும் பகைமையு மென்னும் இரண்டினது ஒழிபு விசாரிக்குங்காலத்துத் தீயின் ஒழிவுபோலக் கெடுக்கும். எச்சம்- சேஷம். இது வினைசெய்யுங்கால் சிறிதொழியச் செய்தோமென்று விடலாகாதென்றது.

பரிமேலழகர் உரை:

வினை பகை என்ற இரண்டின் எச்சம் - செய்யத் தொடங்கிய வினையும் களையத்தொடங்கிய பகையும் என்று சொல்லப்பட்ட இரண்டனது ஒழிவும்; நினையுங்கால் தீயெச்சம் போலத் தெறும் - ஆராயுங்கால் தீயினது ஒழிவு போலப்பின் வளர்ந்து கெடுக்கும். (இனி,இக்குறை என் செய்வது? என்று இகழ்ந்தொழியற்க, முடியச் செய்க என்பதாம், பின் வளர்தல் ஒப்புமைபற்றிப் பகையெச்சமும் உடன் கூறினார். இதனான் வலியான் செய்யுந் திறம் கூறப்பட்டது.)


Thirukural 673 of 1330 - திருக்குறள் 673 of 1330

thirukural
குறள் பால் : பொருட்பால். குறள் இயல் : அமைச்சியல். அதிகாரம் : வினைசெயல்வகை.

ஒல்லும்வா யெல்லாம் வினைநன்றே ஒல்லாக்கால்
செல்லும்வாய் நோக்கிச் செயல்.

Translation:

When way is clear, prompt let your action be;
When not, watch till some open path you see.

Explanation:

Whenever it is possible (to overcome your enemy) the act (of fighting) is certainly good; if not, endeavour to employ some more successful method.

கலைஞர் உரை:

இயலும் இடங்களில் எல்லாம் செயல் முடிப்பது நலம் தரும். இயலாத இடமாயின் அதற்கேற்ற வழியை அறிந்து அந்தச் செயலை முடிக்க வேண்டும்.

[ads-post]

மு. உரை:

இயலுமிடத்தில் எல்லாம் செயலைச் செய்து முடித்தல் நல்லது, இயலாவில்லையானால் பயன்படும் இடம் நோக்கியாவது செய்ய வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை:

ஒரு செயலைச் செய்யும்போது சாம, தான, பேத, தண்டம் என்னும் எல்லா உபாயங்களிலும் தண்டம் என்னும் உபாயம் கொண்டு செய்வது நல்லது. அது பலன் அளிக்காத போது, பிற மூன்றினுள் ஏற்ற ஒன்று கொண்டு செய்க.

மணக்குடவர் உரை:

இயலும் இடமெல்லாம் வினைசெய்தல் நன்று: இயலாத காலத்து அதனை நினைந்திருந்து இயலும் இடம் பார்த்துச் செய்க. இது வினைசெய்து முடிந்ததில்லை யென்று இகழாது பின்பு காலம் பார்த்துச் செய்கவென்றது.

பரிமேலழகர் உரை:

ஒல்லும் வாய் எல்லாம் வினை நன்று - வினை செய்யுங்கால் இயலுமிடத்தெல்லாம் போராற் செய்தல் நன்று; ஒல்லாக்கால் செல்லும் வாய் நோக்கிச் செயல் - அஃது இயலாவிடத்து ஏனை மூன்று உபாயத்துள்ளும் அது முடிவதோர் உபாயம் நோக்கிச் செய்க. (இயலுமிடம்: பகையின் தான் வலியனாகிய காலம். அக்காலத்துத் தண்டமே நன்று என்றார், அஞ்சுவது அதற்கேயாகலின். இயலா இடம் - ஒத்த காலமும் மெலிய காலமும். அவ்விரண்டு காலத்தும் சாமபேத தானங்களுள் அது முடியும் உபாயத்தாற் செய்க என்றார். அவை ஒன்றற்கொன்று வேறுபாடுடையவேனும் உடம்படுத்தற் பயத்தான் தம்முள் ஒக்கும் ஆகலின், இதனான், வலியான், ஒப்பான், மெலியான் என நிலை மூவகைத்து என்பதூஉம், அவற்றுள் வலியது சிறப்பும் கூறப்பட்டன.)
Powered by Blogger.