Thirukural 667 of 1330 - திருக்குறள் 667 of 1330

thirukural
குறள் பால் : பொருட்பால். குறள் இயல் : அமைச்சியல். அதிகாரம் : வினைத்திட்பம்.

உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு
அச்சாணி அன்னார் உடைத்து.

Translation:

Despise not men of modest bearing; Look not at form, but what men are:
For some there live, high functions sharing, Like linch-pin of the mighty car!.

Explanation:

Let none be despised for (their) size; (for) the world has those who resemble the linch-pin of the big rolling car.

கலைஞர் உரை:

உருவத்தால் சிறியவர்கள் என்பதற்காக யாரையும் கேலி செய்து அலட்சியப்படுத்தக் கூடாது. பெரிய தேர் ஓடுவதற்குக் காரணமான அச்சாணி உருவத்தால் சிறியதுதான் என்பதை உணர வேண்டும்.

[ads-post]

மு. உரை:

உருளும் பெரிய தேர்க்கு அச்சில் இருந்து தாங்கும் சிறிய ஆணிப் போன்றவர்கள் உலகத்தில் உள்ளனர், அவர்களுடைய உருவின் சிறுமையைக்கண்டு இகழக் கூடாது.

சாலமன் பாப்பையா உரை:

அச்சாணி சிறியது எனினும் உருளுகின்ற பெரிய தேருக்கு அது உதவுவது போல, மன உறுதி உடையவர்கள் வடிவத்தால் சிறியர் எனினும் செயலால் பெரியர் என்பதால் அவரை இகழக்கூடாது.

மணக்குடவர் உரை:

யாவரையும் வடிவுகண்டு இகழ்தலைத் தவிர்தல் வேண்டும். உருளாநின்ற பெரிய தேர்க்குக் காலாய் நடக்கின்ற உருளையைக் கழலாமல் தாங்கும் அச்சின் புறத்துச் செருகின சிற்றாணியைப் போலத் திண்ணியாரை இவ்வுலகம் உடைத்து: ஆதலால்.

பரிமேலழகர் உரை:

உருள் பெருந்தேர்க்கு அச்சு ஆணி அன்னார் உடைத்து - உருளா நின்ற பெரிய தேர்க்கு அச்சின்கண் ஆணிபோல வினைக்கண் திண்ணியாரையுடைத்து உலகம்; உருவு கண்டு எள்ளாமை வேண்டும் - அதனால் அவரை வடிவின் சிறுமை நோக்கி இகழ்தலை யொழிக. (சிறுமை, 'எள்ளாமை வேண்டும்' என்பதனானும், உவமையானும் பெற்றாம், அச்சு: உருள் கோத்த மரம். ஆணி: உருள் கழலாது அதன் கடைக்கண் செருகுமது. அது வடிவாற் சிறிதாயிருந்தே பெரிய பாரத்தைக் கொண்டுய்க்கும் திட்பம் உடைத்து, அதுபோல, வடிவாற் சிறியராயிருந்தே பெரிய வினைகளைக் கொண்டுய்க்கும் திட்பம் உடைய அமைச்சரும் உளர், அவரை அத்திட்பம் நோக்கி அறிந்துகொள்க என்பதாம். இதனால், அவரை அறியுமாறு கூறப்பட்டது.)


Thirukural 666 of 1330 - திருக்குறள் 666 of 1330

thirukural
குறள் பால் : பொருட்பால். குறள் இயல் : அமைச்சியல். அதிகாரம் : வினைத்திட்பம்.

எண்ணிய எண்ணியாங்கு எய்து எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின்.

Translation:

Whate'er men think, ev'n as they think, may men obtain,
If those who think can steadfastness of will retain.

Explanation:

If those who have planned (an undertaking) possess firmness (in executing it) they will obtain what they have desired even as they have desired it.

கலைஞர் உரை:

எண்ணியதைச் செயல்படுத்துவதில் உறுதி உடையவர்களாக இருந்தால் அவர்கள் எண்ணியவாறே வெற்றி பெறுவார்கள்.

[ads-post]

மு. உரை:

எண்ணியவர் (எண்ணியபடியே செயல் ஆற்றுவதில்) உறுதியுடையவராக இருக்கப்பெற்றால் அவர் எண்ணியவற்றை எண்ணியவாறே அடைவர்.

சாலமன் பாப்பையா உரை:

ஒன்றைச் செய்ய எண்ணியவர் அதைச் செய்து முடிப்பதற்கு ஏற்ற மனஉறுதியை உடையவராக இருந்தால், அடைய நினைத்தவற்றை எல்லாம் அவர் எண்ணப்படியே அடைவார்.

மணக்குடவர் உரை:

தாம் எண்ணிய பொருள்களை எண்ணினபடியே பெறுவர்: அவ்வாறு எண்ணினவர் அவ்வினையைச் செய்து முடிக்குந் திண்மையுடையாராகப் பெறுவாராயின். இது வினையின்கண் திண்மை வேண்டு மென்றது.

பரிமேலழகர் உரை:

எண்ணிய எண்ணியாங்கு எய்துப - தாம் எய்த எண்ணிய பொருள்கள் எல்லாவற்றையும் அவ்வெண்ணியவாறே எய்துவர்; எண்ணியார் திண்ணியராகப் பெறின் - எண்ணியவர் அவற்றிற்கு வாயிலாகிய வினைக்கண் திண்மையுடையராகப் பெறின். ('எளிதின் எய்துப' என்பார், 'எண்ணியாங்கு எய்துப'என்றார். அவர் அவ்வாறல்லது எண்ணாமையின் திண்ணியராகவே வினை முடியும். அது முடிய அவை யாவையும்கைகூடும் என்பது கருத்து. இதனான் அஃதுடையார் எய்தும்பயன் கூறப்பட்டது.)


Thirukural 665 of 1330 - திருக்குறள் 665 of 1330

thirukural
குறள் பால் : பொருட்பால். குறள் இயல் : அமைச்சியல். அதிகாரம் : வினைத்திட்பம்.

வீறெய்தி மாண்டார் வினைத்திட்பம் வேந்தன்கண்
ஊறெய்தி உள்ளப் படும்.

Translation:

The power in act of men renowned and great,
With king acceptance finds and fame through all the state.

Explanation:

The firmness in action of those who have become great by the excellence (of their counsel) will, by attaining its fulfilment in the person of the king, be esteemed (by all).

கலைஞர் உரை:

செயல் திறனால் சிறப்புற்ற மாண்புடையவரின் வினைத் திட்பமானது, ஆட்சியாளரையும் கவர்ந்து பெரிதும் மதித்துப் போற்றப்படும்.

[ads-post]

மு. உரை:

செயல் திறனால் பெருமைபெற்று உயர்ந்தவரின் வினைத் திட்பமானது நாட்டை ஆளும் அரசனிடத்திலும் எட்டி மதிக்கப்பட்டு விளங்கும்.

சாலமன் பாப்பையா உரை:

எண்ணங்களால் சிறந்து, பெருமை மிக்கவர்களின் செயல் உறுதி. அரசு வரை செல்வதால் மற்றவர்களாலும் மதிக்கப்படும்.

மணக்குடவர் உரை:

மிகுதியெய்தி மாட்சிமைப்பட்டாரது வினைத் திட்பமானது அரசன்மாட்டு உறுதலையெய்தி எல்லாராலும் நினைக்கப்படும். இது வினைத்திட்ப முடையாரை எல்லாரும் விரும்புவரென்றது.

பரிமேலழகர் உரை:

வீறு எய்தி மாண்டார் வினைத்திட்பம் - எண்ணத்தால் சிறப்பெய்திப் பிற இலக்கணங்களாலும் மாட்சிமைப்பட்ட அமைச்சரது வினைத்திட்பம்; வேந்தன்கண் ஊறு எய்தி உள்ளப்படும் - வேந்தன்கண்ணே உறுதலை எய்தலான், எல்லாரானும் நன்கு மதிக்கப்படும். (வேந்தன்கண் ஊறு எய்தல் - எடுத்த வினை அதனான் முற்றுப்பெற்றுச் செல்வமும் புகழும் அவன் கண்ண ஆதல். 'எய்தலான்' என்பது திரிந்து நின்றது. உள்ளல் - மதிப்பான் மறைவாமை. இதனான் அதன் சிறப்புக் கூறப்பட்டது.)
Powered by Blogger.