Thirukural 644 of 1330 - திருக்குறள் 644 of 1330

thirukural
குறள் பால் : பொருட்பால். குறள் இயல் : அமைச்சியல். அதிகாரம் : சொல்வன்மை.

திறனறிந்து சொல்லுக சொல்லை அறனும்
பொருளும் அதனினூஉங்கு இல்.

Translation:

Speak words adapted well to various hearers' state;
No higher virtue lives, no gain more surely great.

Explanation:

Understand the qualities (of your hearers) and (then) make your speech; for superior to it, there is neither virtue nor wealth.

கலைஞர் உரை:

காரணத்தைத் தெளிவாக அறிந்து ஒன்றைச் சொல்ல வேண்டும். அந்தச் சொல் வன்மையைப் போன்ற அறமும், உண்மைப் பொருளும் வேறெதுவும் இல்லை.

[ads-post]

மு. உரை:

சொல்லின் திறத்தை அறிந்து சொல்லை வழங்க வேண்டும், அத் தகைய சொல்வன்மையை விடச் சிறந்த அறமும் பொருளும் இல்லை.

சாலமன் பாப்பையா உரை:

எவரிடம் பேசகிறோமோ அவர் குடிப்பிறப்பு, கல்வி, ஒழுக்கம், செல்வம், தோற்றம், வயது ஆகிய தகுதிகளை அறிந்து பேச்சு; அப்படிப் பேசுவதைவிட உயர்ந்த அறமும் பொருளும் வேறு இல்லை.

மணக்குடவர் உரை:

சொல்லைச் சொல்லுந் திறனறிந்து சொல்லுக; அதனின் மேம்பட்ட அறனும் பொருளும் இல்லை. தாமறியவே புறங்கூறாமையும் பயனில சொல்லாமையும் பொய்கூறாமையும் உளவாம்: ஆதலான் அறனாயிற்று; அரசன் மாட்டும் ஏனையோர்மட்டும் தகுதியறிந்து சொல்லுதலான் பொருளாயிற்று.

பரிமேலழகர் உரை:

சொல்லைத் திறன் அறிந்து சொல்லுக - அப்பெற்றித்தாய சொல்லை, அமைச்சர் தம்முடையவும், கேட்பாருடையவுமாய திறங்களை அறிந்து சொல்லுக; அதனின் ஊங்கு அறனும் பொருளும் இல் - அங்ஙனம் சொல்லுதற்கு மேற்பட்ட அறனும் பொருளும் இல்லையாகலான். (அத்திறங்களாவன: குடிப்பிறப்பு , கல்வி, ஒழுக்கம், செல்வம், உருவம், பருவம் என்பவற்றான் வரும் தகுதி வேறுபாடுகள். அவற்றை அறிந்து சொல்லுதலாவது, அவற்றால் தமக்கும் அவர்க்கும் உளவாய ஏற்றத்தாழ்வுகளை அறிந்து அவ்வம் மரபாற் சொல்லுதல். அஃது உலகத்தோடு ஒட்ட ஒழுகலையும் இனிமையையும் பயத்தலின் அறனாயிற்று. தம் காரியம் முடித்தலின் பொருளாயிற்று. அறனும் பொருளும் எனக் காரணத்தைக் காரியமாக்கிக் கூறினார்.)

Thirukural 643 of 1330 - திருக்குறள் 643 of 1330

thirukural
குறள் பால் : பொருட்பால். குறள் இயல் : அமைச்சியல். அதிகாரம் : சொல்வன்மை.

கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்
வேட்ப மொழிவதாம் சொல்.

Translation:

Tis speech that spell-bound holds the listening ear,
While those who have not heard desire to hear.

Explanation:

The (minister's) speech is that which seeks (to express) elements as bind his friends (to himself) and is so delivered as to make even his enemies desire (his friendship).

கலைஞர் உரை:

கேட்போரைக் கவரும் தன்மையுடைதாகவும், கேட்காதவரும் தேடிவந்து விரும்பிக் கேட்கக் கூடியதாகவும் அமைவதே சொல்வன்மை எனப்படும்.

[ads-post]

மு. உரை:

சொல்லும் போது கேட்டவரைத் தன் வயப்படுத்தும் பண்புகளுடன், கேட்காதவரும் கேட்க விரும்புமாறு கூறப்படுவது சொல்வன்மையாகும்.

சாலமன் பாப்பையா உரை:

நண்பர்களைப் பிரிக்காமல் சேர்க்கும் தன்மையதாய்ப் பகைவரும் கேட்க விரும்புவதாய்ப் பேசவது சொல்லாற்றல். ( முன்பு கேட்டவர் மீண்டும் கேட்க, இதுவரை கேளாதவரும் விரும்பிக் கேட்கப் பேசுவது என்றும் கூறலாம்).

மணக்குடவர் உரை:

வினாவினாரைப் பிணித்துக் கொள்ளுந் தகையவாய், வினாவாதாரும் விரும்புமாறு சொல்லுதல் சொல்லாவது. இது மேம்படக் கூறல்வேண்டு மென்றது.

பரிமேலழகர் உரை:

கேட்டார்ப் பிணிக்கும் தகை அவாய் - நட்பாய் ஏற்றுக் கொண்டாரைப் பின் வேறுபடாமல் பிணிக்கும் குணங்களை அவாவி; கேளாரும் வேட்ப மொழிவது - மற்றைப் பகையாய் ஏற்றுக்கொள்ளாதாரும் பின் அப்பகைமை ஒழிந்து நட்பினை விரும்பும் வண்ணம் சொல்லப்படுவதே; சொல்லாம் - அமைச்சர்க்குச் சொல்லாவது. ((அக்குணங்களாவன: வழுவின்மை, சுருங்குதல், விளங்குதல், இனிதாதல், விழுப்பயன் தருதல் என்றிவை முதலாயின. அவற்றை அவாவுதலாவது: சொல்லுவான் குறித்தனவேயன்றி வேறு நுண்ணுணர்வுடையோர் கொள்பவற்றின்மேலும் நோக்குடைத்தாதல். 'அவாய்' என்னும் செய்தென்எச்சம் 'மொழிவது' என்னும் செயப்பாட்டு வினை கொண்டது. இனிக் 'கேட்டார்' 'கேளார்' என்பதற்கு 'நூல் கேட்டார் கேளாதார்' எனவும், 'வினவியார் வினவாதார்' எனவும் உரைப்பாரும் உளர். 'தகையவாய்' என்பதற்கு, எல்லாரும், 'தகுதியையுடையவாய்' என்று உரைத்தார்; அவர் அப்பன்மை, மொழிவது என்னும் ஒருமையோடு இயையாமை நோக்கிற்றிலர். இதனால் சொல்லினது இலக்கணம் கூறப்பட்டது.)

Thirukural 642 of 1330 - திருக்குறள் 642 of 1330

thirukural
குறள் பால் : பொருட்பால். குறள் இயல் : அமைச்சியல். அதிகாரம் : சொல்வன்மை.

ஆக்கமுங் கேடும் அதனால் வருதலால்
காத்தோம்பல் சொல்லின்கட் சோர்வு.

Translation:

Since gain and loss in life on speech depend,
From careless slip in speech thyself defend.

Explanation:

Since (both) wealth and evil result from (their) speech, ministers should most carefully guard themselves against faultiness therein.

கலைஞர் உரை:

ஆக்கமும் அழிவும் சொல்லால் ஏற்படும் என்பதால், எந்தவொரு சொல்லிலும் குறைபாடு நேராமல் கவனமாக இருக்க வேண்டும்.

[ads-post]

மு. உரை:

ஆக்கமும் கேடும் சொல்லுகின்ற சொல்லால் வருவதால் ஒருவன் தன்னுடைய சொல்லிற்க்கு தவறு நேராமல் காத்துக்கொள்ள வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை:

அவரவர் சொல் திறந்தாலேயே நன்மையும், தீமையும் வருவதால், பேசும் பேச்சில் பிழை வராமல் விழிப்புடன் பேசுக.

மணக்குடவர் உரை:

ஆக்கமும் கேடும் சொல்லினால் வருதலால் சொல்லின்கண் சோர்வைப் போற்றிக் காக்க வேண்டும். இது சோர்வுபடாமற் சொல்லல்வேண்டு மென்றது.

பரிமேலழகர் உரை:

ஆக்கமும் கேடும் அதனால் வருதலால் - தம் அரசர்க்கும் அங்கங்கட்கும் ஆக்க அழிவுகள் தம் சொல்லான் வரும் ஆகலான்; சொல்லின்கண் சோர்வு காத்து ஓம்பல் - அப்பெற்றித்தாய சொல்லின்கண் சோர்தலை அமைச்சர் தம்கண் நிகழாமல் போற்றிக் காக்க. (ஆக்கத்திற்கு ஏதுவாய நற்சொல்லையும் கேட்டிற்கு ஏதுவாய தீச்சொல்லையும், சொல்லாதல் ஒப்புமைபற்றி 'அதனால்' என்றார். செய்யுள் ஆகலின் சுட்டுப் பெயர் முன் வந்தது. பிறர் சோர்வு போலாது உயிர்கட்கு எல்லாம் ஒருங்கு வருதலால், 'காத்து ஓம்பல்' என்றார். இவை இரண்டு பாட்டானும் இஃது இவர்க்கு இன்றியமையாதது என்பது கூறப்பட்டது.)
Powered by Blogger.