Thirukural 582 of 1330 - திருக்குறள் 582 of 1330

thirukural
குறள் பால் : பொருட்பால். குறள் இயல் : அரசியல். அதிகாரம் : ஒற்றாடல்.

எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும்
வல்லறிதல் வேந்தன் தொழில்.

Translation:

Each day, of every subject every deed,
'Tis duty of the king to learn with speed.

Explanation:

It is the duty of a king to know quickly (by a spy) what all happens, daily, amongst all men.

கலைஞர் உரை:

நண்பர், பகைவர், நடுநிலையாளர் ஆகிய எல்லாரிடத்திலும் நிகழும் எல்லா நிகழ்வுகளையும், எல்லாக் காலங்களிலும் ஒற்றரைக் கொண்டு விரைவாக அறிந்து கொள்வது அரசுக்குரிய கடமையாகும்.

[ads-post]

மு. உரை:

எல்லாரிடத்திலும் நிகழ்கின்றவை எல்லாவற்றையும் எக்காலத்திலும் (ஒற்றரைக் கொண்டு) விரைந்து அறிதல் அரசனுக்குரிய தொழிலாகும்.

சாலமன் பாப்பையா உரை:

பகைவர், நண்பர், பொதுவானவர் என எல்லாரிடத்திலும் நிகழ்வான எல்லாவற்றையும், எப்போதும் ஒற்றால் விரைந்து அறிந்து கொள்ள வேண்டியது அரசின் வேலை.

மணக்குடவர் உரை:

பகைவராகியும் நட்டாராகியும் மத்திமராகியும் உதாசீனராகியும் இருக்கின்ற அரசர்க்கும், அவர் சுற்றத்திற்கும், தஞ்சுற்றத்திற்கும் அறம் பொருள் இன்பங்களைப் பற்றி நிகழ்பவை யெல்லாவற்றையும் நாடோறும் பிறர் அறிவதன் முன்னர்த் தான் ஒற்றால் விரைந்தறிதல் வேந்தனது தொழில்.

பரிமேலழகர் உரை:

எல்லார்க்கும் நிகழ்பவை எல்லாம் எஞ்ஞான்றும் வல்அறிதல் - எல்லார்கண்ணும் நிகழ்வன எல்லாவற்றையும் நாள்தோறும் ஒற்றான் விரைந்தறிதல்; வேந்தன் தொழில் - அரசனுக்கு உரிய தொழில். ('எல்லார்க்கும்' என்றது மூன்று திறத்தாரையும். நான்காவது ஏழாவதன் பொருட்கண் வந்தது. 'நிகழ்வன எல்லாம்' என்றது, நல்லவும் தீயவுமாய சொற்களையும், செயல்களையும். அவை நிகழ்ந்த பொழுதே அவற்றிற்குத் தக்க அளியாகத் தெறலாகச் செய்யவேண்டுதலின் 'வல்லறிதல்' என்றும், இவ்விருதொழிற்கும் அறிதல் காரணம் ஆதலின், அதனையே உபசார வழக்கால் 'தொழில்' என்றும் கூறினார். 'ஒற்றான்' என்பது அதிகாரத்தான் வந்தது. இதனான் ஒற்றினாய அறன் கூறப்பட்டது.)


Thirukural 581 of 1330 - திருக்குறள் 581 of 1330

thirukural
குறள் பால் : பொருட்பால். குறள் இயல் : அரசியல். அதிகாரம் : ஒற்றாடல்.

ஒற்றும் உரைசான்ற நூலும் இவையிரண்டும்
தெற்றென்க மன்னவன் கண்.

Translation:

These two: the code renowned and spies,
In these let king confide as eyes.

Explanation:

Let a king consider as his eyes these two things, a spy and a book (of laws) universally esteemed.

கலைஞர் உரை:

நேர்மையும் திறனும் கொண்ட ஒற்றரும், நீதியுரைக்கும் அறநூலும் ஓர் அரசின் கண்களாகக் கருதப்பட வேண்டும்.

[ads-post]

மு. உரை:

ஒற்றரும் புகழ் அமைந்த நீதிநூலும் ஆகிய இவ்விருவகைக் கருவிகளையும் அரசன் தன்னுடைய கண்களாகத் தெளியவேணடும்.

சாலமன் பாப்பையா உரை:

ஒற்று, புகழும் தெளிவும் உள்ள நீதிநூல் இவ்விரண்டும் ஆட்சியாளரின் இரு கண் என்று அறிக.

மணக்குடவர் உரை:

ஒற்றினையும் முறையமைந்த நூலினையும் தெளியவறிந்த மன்னவனுக்கு இவையிரண்டையும் கண்களாகத் தெளிக. அரசர்க்குக் கல்வி இன்றிமையாததுபோல ஒற்றும் இன்றிமையாததென்றவாறு. இஃது ஒற்றுவேண்டுமென்றது.

பரிமேலழகர் உரை:

ஒற்றும் உரைசான்ற நூலும் இவை இரண்டும் - ஒற்றும் புகழமைந்த நீதிநூலுமாகிய இவை இரண்டனையும்; மன்னவன்கண் தெற்றென்க - அரசன் தன் இரண்டு கண்ணுமாகத் தெளிக. (ஒற்றுத் தன் கண் செல்லமாட்டாத பரப்பெலாம் சென்று கண்டு ஆண்டு நிகழ்ந்தன எல்லாம் உணர்த்தலானும், நூல் அந்நிகழ்ந்தவற்றிற்குத் தன்னுணர்வு செல்ல மாட்டாத வினைகளையெல்லாம் சொல்லி உணர்த்தலானும்,இவ்விரண்டனையுமே தனக்கு ஊனக் கண்ணும் ஞானக்கண்ணுமாகத் துணிந்துகொண்டு ஒழுகுக என்பதாம். ஒற்றனை 'ஒற்று' என்றார், வேந்தனை 'வேந்து' என்றாற்போல. 'தெற்றென்க' என்பது 'தெற்று' என்பது முதனிலையாகவந்த வியங்கோள். அது 'தெற்றென' என்னும் செயவென் எச்சத்தான் அறிக. இதனான் ஒற்றினது சிறப்புக் கூறப்பட்டது.)
Powered by Blogger.