Thirukural 516 of 1330 - திருக்குறள் 516 of 1330
குறள் பால் : பொருட்பால். குறள் இயல் : அரசியல். அதிகாரம் : தெரிந்துவினையாடல்.
செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோடு
எய்த உணர்ந்து செயல்.
Translation:
Let
king first ask, 'Who shall the deed perform?' and 'What the deed?'
Of
hour befitting both assured, let every work proceed.
Explanation:
Let
(a king) act, after having considered the agent (whom he is to employ), the
deed (he desires to do), and the time which is suitable to it.
கலைஞர் உரை:
செயலாற்ற வல்லவனைத் தேர்ந்து, செய்யப்பட வேண்டிய செயலையும் ஆராய்ந்த, காலமுணர்ந்து அதனைச் செயல்படுத்தவேண்டும்.
[ads-post]
மு.வ உரை:
செய்கின்றவனுடைய தன்மையை ஆராய்ந்து, செயலின் தன்மையையும் ஆராய்ந்து, தக்கக் காலத்தோடு பொறுந்துமாறு உணர்ந்து செய்விக்க வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை:
முதலில் ஒரு செயலைச் செய்ய வேண்டியவனின் தகுதிகளை எண்ணி அவன் செய்ய வேண்டிய செயலின் தகுதியையும் எண்ணி பிறகு அவனையும் அச்செயலையும் செய்யப்படும் காலத்தோடு பொருத்தி எண்ணிச் செயல் செய்க.
மணக்குடவர் உரை:
வினை செய்வானையும் ஆராய்ந்து அவ்வினையினது இயல்பையும் ஆராய்ந்து அதுமுடியுங் காலத்தோடே பொருந்த அறிந்து, பின்பு அவ்வினை அவன் செய்வானாக அமைக்க வேண்டும்.
பரிமேலழகர் உரை:
செய்வானை நாடி - முதற் கண்ணே செய்வானது இலக்கணத்தை ஆராய்ந்து, வினை நாடி - பின் செய்யப்படும் வினையினது இயல்பை ஆராய்ந்து, காலத்தொடு எய்த உணர்ந்து செயல் - பின் அவனையும் அதனையும் காலத்தோடு படுத்துப் பொருந்த அறிந்து அவனை அதன்கண் ஆடலைச் செய்க. (செய்வானது இலக்கணமும் வினையினது இயல்பும் மேலே கூறப்பட்டன. காலத்தொடு எய்த உணர்தலாவது, இக்காலத்து இவ்விலக்கணமுடையான் செய்யின் இவ்வியல்பிற்றாய வினை முடியும் என்று கூட்டி உணர்தல்.)