Thirukural 478 of 1330 - திருக்குறள் 478 of 1330

thirukural
குறள் பால் : பொருட்பால். குறள் இயல் : அரசியல். அதிகாரம் : வலியறிதல்.

ஆகாறு அளவிட்டி தாயினுங் கேடில்லை
போகாறு அகலாக் கடை.

Translation:

Incomings may be scant; but yet, no failure there,
If in expenditure you rightly learn to spare.

Explanation:

Even though the income (of a king) be small, it will not cause his (ruin), if his outgoings be not larger than his income.

கலைஞர் உரை:

எல்லை கடந்த செலவு இல்லாமல் இருக்குமேயானால் வரவு, குறைவாக இருப்பதால் கேடு எதுவும் விளைவதில்லை.

[ads-post]

மு. உரை:

பொருள் வரும் வழி (வருவாய்) சிறிதாக இருந்தாலும், போகும் வழி (செலவு)
விரிவுபடாவிட்டால் அதனால் தீங்கு இல்லை.

சாலமன் பாப்பையா உரை:

வருமானம் அளவில் சிறிது என்றாலும் செலவினம் பெரிதாகாதபோது கேடு இல்லை.

மணக்குடவர் உரை:

பொருள் வரும்வழியளவு சிறிதாயினும் கேடில்லையாம்; அது போம்வழி போகாதாயின். இது முதலுக்குத் தக்க செலவு செய்ய வேண்டுமென்றது.

பரிமேலழகர் உரை:

ஆகு ஆறு அளவு இட்டிது ஆயினும் கேடு இல்லை - அரசர்க்குப் பொருள் வருகின்ற நெறியளவு சிறிதாயிற்றாயினும் அதனால் கேடு இல்லையாம்: போகு ஆறு அகலாக் கடை - போகின்ற நெறிஅளவு அதனின் பெருகாதாயின். ('இட்டிது' எனவும் 'அகலாது' எனவும் வந்த பண்பின் தொழில்கள் பொருள் மேல் நின்றன. 'பொருள்' என்பது அதிகாரத்தான் வருவித்து, 'அளவு' என்பது பின்னும் கூட்டி உரைக்கப்பட்டன. முதலும் செலவும் தம்முள் ஒப்பினும் கேடு இல்லை என்பதாம்.)

Thirukural 477 of 1330 - திருக்குறள் 477 of 1330

thirukural
குறள் பால் : பொருட்பால். குறள் இயல் : அரசியல். அதிகாரம் : வலியறிதல்.

ஆற்றின் அறவறிந்து ஈக அதுபொருள்
போற்றி வழங்கு நெறி.

Translation:

With knowledge of the measure due, as virtue bids you give!
That is the way to guard your wealth, and seemly live.

Explanation:

Let a man know the measure of his ability (to give), and let him give accordingly; such giving is the way to preserve his property.

கலைஞர் உரை:

வருவாய் அளவை அறிந்து, அதனை வகுத்து வழங்குவதே பொருளைச் சீராகக் காத்து வாழும் வழியாகும்.

[ads-post]

மு. உரை:

தக்க வழியில் பிறர்க்கு கொடுக்கும் அளவு அறிந்து வாழாதவனுடைய வாழ்க்கை (பல வளமும்) இருப்பது போல் தோன்றி இல்லாமல் மறைந்து விடும்.

சாலமன் பாப்பையா உரை:

எதைப் பிறர்க்குக் கொடுத்தாலும் தம் பொருளாதார நிலையை அறிந்து கொடுக்கவும்; அப்படிக் கொடுப்பதே பொருளைக் காத்துக் கொண்டு, கொடுக்கும் முறையான வழியாகும்.

மணக்குடவர் உரை:

பொருளை அளவறிந்து கொடுக்கும் வழியாலே கொடுக்க; பொருளையுண்டாக்கி வழங்கும் நெறி அதுவாதலால். இது பொருளினது வலியறிந்து அதற்குத்தக்க செலவுசெய்ய வேண்டுமென்று கூறிற்று.

பரிமேலழகர் உரை:

ஆற்றின் அளவு அறிந்து ஈக - ஈயும் நெறியாலே தமக்கு உள்ள பொருளின் எல்லையை அறிந்து அதற்கு ஏற்ப ஈக, அது பொருள்போற்றி வழங்கும் நெறி - அங்ஙனம் ஈதல் பொருளைப் பேணிக் கொண்டொழுகும் நெறியாம். (ஈயும் நெறி மேலே இறைமாட்சியுள் 'வகுத்தலும் வல்லதரசு' குறள்.385) என்புழி உரைத்தாம் . எல்லைக்கு ஏற்ப ஈதலாவது, ஒன்றான எல்லையை நான்கு கூறாக்கி ,அவற்றுள் இரண்டனைத் தன் செலவாக்கி, ஒன்றனை மேல் இடர் வந்துழி அது நீக்குதற்பொருட்டு வைப்பாக்கி நின்ற ஒன்றனை ஈதல். பிறரும்,'வருவாயுள் கால் வழங்கி வாழ்தல்' (திரிகடுகம்.21) என்றார். பேணிக்கொண்டு ஒழுகுதல்: ஒருவரோடு நட்பிலாத அவனைத் தம்மோடு நட்புண்டாக்கிக் கொண்டு ஒழுகுதல். முதலில் செலவு சுருங்கின் பொருள் ஒருகாலும் நீங்காது என்பதாம்.)

Thirukural 476 of 1330 - திருக்குறள் 476 of 1330

thirukural
குறள் பால் : பொருட்பால். குறள் இயல் : அரசியல். அதிகாரம் : வலியறிதல்.

நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந் தூக்கின்
உயிர்க்கிறுதி ஆகி விடும்.

Translation:

Who daring climbs, and would himself upraise
Beyond the branch's tip, with life the forfeit pays.

Explanation:

There will be an end to the life of him who, having climbed out to the end of a branch, ventures to go further.

கலைஞர் உரை:

தன்னைப்பற்றி அதிகமாகக் கணக்குப் போட்டுக் கொண்டு, எல்லை மீறிப் போகிற ஒருவர், நுனிக் கிளையில் ஏறியவர் அதற்கு மேலும் ஏறிட முயற்சி செய்தால் என்ன ஆவாரோ அந்தக் கதிக்கு ஆளாவார்.

[ads-post]

மு. உரை:

ஒரு மரத்தின் நுனிக்கொம்பில் ஏறியவர், அதையும் கடந்து மேலே ஏற முனைந்தால், அவருடைய உயிர்க்கு முடிவாக நேர்ந்துவிடும்.

சாலமன் பாப்பையா உரை:

ஒரு மரக்கிளையின் நுனியில் ஏறிவிட்டவர், அந்த அளவையும் கடந்து மேலும் ஏற முயன்றால், அம் முயற்சியே அவர் உயிருக்கு முடிவாகிவிடும்.

மணக்குடவர் உரை:

ஒரு மரத்தின் நுனிக்கொம்பேறினவர் தம்மள வறிந்து வைத்துப் பின்னும் மேலேறுவாராயின் அஃது அவர்தம்முயிர்க்கு இறுதியாகிவிடும். இஃது அரசன் தன்னாற் செல்லலாமெல்லையளவு சென்றால் பின்பு மீள வேண்டுமென்றது. இதுவும் ஒரு வலியறிதல்.

பரிமேலழகர் உரை:

கொம்பர் நுனி ஏறினார் அஃது இறந்து ஊக்கின் - ஒருமரக்கோட்டினது நுனிக்கண்ணே ஏறி நின்றார், தம் ஊக்கத்தால் அவ்வளவினகைக் கடந்து மேலும் ஏற ஊக்குவாராயின்; உயிர்க்கு இறுதி ஆகிவிடும் - அவ்வூக்கம் அவர் உயிர்க்கு இறுதியாய் முடியும். ('நுனிக்கொம்பர்' என்பது கடைக்கண் என்பதுபோலப் பின் முன்னாகத் தொக்க ஆறாம் வேற்றுமைத்தொகை. பன்மை அறிவின்மைபற்றி இழித்தற்கண் வந்தது. இறுதிக்கு ஏது ஆவதனை 'இறுதி' என்றார். 'பகைமேற் செல்வான் தொடங்கித் தன்னால் செல்லலாமளவும் சென்று நின்றான், பின் அவ்வளவின் நில்லாது மன எழுச்சியான் மேலும் செல்லுமாயின், அவ்வெழுச்சி வினை முடிவிற்கு ஏதுவாகாது அவனுயிர் முடிவிற்கு ஏதுவாம்' என்னும் பொருள்தோன்ற நின்றமையின் , இதுவும் மேலை அலங்காரம். 'அளவு அறிந்து நிற்றல் வேண்டும்' என்றமையின் இதனான் வினைவலி அறியாவழிப்படும் இழுக்குக் கூறப்பட்டது.)
Powered by Blogger.