Thirukural 464 of 1330 - திருக்குறள் 464 of 1330
குறள் பால் : பொருட்பால். குறள் இயல் : அரசியல். அதிகாரம் : தெரிந்துசெயல்வகை.
தெளிவி லதனைத் தொடங்கார் இளிவென்னும்
ஏதப்பாடு அஞ்சு பவர்.
Translation:
A work of which the issue is not clear,
Begin not they reproachful scorn who fear.
Explanation:
Those who fear reproach will not commence
anything which has not been (thoroughly considered) and made clear to them.
கலைஞர் உரை:
களங்கத்துக்குப் பயப்படக் கூடியவர்கள்தான் விளைவுகளை எண்ணிப் பார்த்து அந்தக் களங்கம் தரும் காரியத்தில் இறங்காமல் இருப்பார்கள்.
[ads-post]
மு.வ உரை:
கல்லாதவனுடைய இழிவு தருவதாகியக் குற்றத்திற்கு அஞ்சுகின்றவர் (இன்ன ஊதியம் பயிக்கும் என்னும்) தெளிவு இல்லாத செயலைத் தொடங்கமாட்டார்.
சாலமன் பாப்பையா உரை:
தனக்கு அவமானம் என்னும் குற்றம் வரும் என்று பயப்படுபவர், நம்பிக்கை இல்லாத செயலைச் செய்யத் தொடங்கமாட்டார்.
மணக்குடவர் உரை:
ஆராய்ந்தறிதலில்லாத வினையைச் செய்யத் தொடங்கார், இகழ்ச்சியாகிய குற்றப்பாட்டிற்கு அஞ்சுபவர்.
பரிமேலழகர் உரை:
தெளிவு இலதனைத் தொடங்கார் - இனத்தோடும் தனித்தும் ஆராய்ந்து துணிதல் இல்லாத வினையைத் தொடங்கார், இளிவு என்னும் ஏதப்பாடு அஞ்சுபவர் - தமக்கு இளிவரவு என்னும் குற்றம் உண்டாதலை அஞ்சுவார். (தொடங்கின் இடையின் மடங்கலாகாமையின், 'தொடங்கார்' என்றார். இளிவரவு - அவ்வினையால் பின் அழிவு எய்தியவழி, அதன் மேலும் அறிவும் மானமும் இலர் என்று உலகத்தார் இகழும் இகழ்ச்சி. அஃது உண்டாதல் ஒருதலையாகலின், தெளிவுள் வழித் தொடங்குக என்பதாம்.)