Thirukural 387 of 1330 - திருக்குறள் 387 of 1330

thirukural
குறள் பால் : பொருட்பால். குறள் இயல் : அரசியல். அதிகாரம் : இறைமாட்சி.

இன்சொலால் ஈத்தளிக்க வல்லார்க்குத் தன்சொலால்
தான்கண் டனைத்திவ் வுலகு.

Translation:

With pleasant speech, who gives and guards with powerful liberal hand,
He sees the world obedient all to his command.

Explanation:

The world will praise and submit itself to the mind of the king who is able to give with affability, and to protect all who come to him.

கலைஞர் உரை:

வாக்கில் இனிமையும், பிறர்க்கு வழங்கிக் காத்திடும் தன்மையும் கொண்டவர்க்கு இவ்வையகமே வசப்படும்.

[ads-post]

மு. உரை:

இனியச் சொற்களுடன் தக்கவர்க்குப் பொருளை உதவிக் காக்க வல்ல அரசனுக்கு இவ்வுலகம் தன் புகழோடு தான் கருதியபடி அமைவதாகும்.

சாலமன் பாப்பையா உரை:

இனிய சொல்லுடன் பிறர்க்குக் கொடுக்கவும், அவர்களைக் காக்கவும் ஆற்றல் பெற்ற அரசிற்கு அது எண்ணிய எல்லாவற்றையும் இவ்வுலகம் தரும்.

மணக்குடவர் உரை:

இனிய சொல்லோடே கொடுத்துத் தலையளி செய்ய வல்ல அரசனுக்குத் தன்னேவலாலே இவ்வுலகம் தான் கண்டாற் போலும் தன் வசத்தே கிடக்கும்.

பரிமேலழகர் உரை:

இன்சொலால் ஈத்து அளிக்க வல்லாற்கு - இனிய சொல்லுடனே ஈதலைச் செய்து அளிக்கவல்ல அரசனுக்கு, இவ்வுலகு தன் சொலால் தான் கண்டனைத்து - இவ்வுலகம் தன் புகழோடு மேவித் தான் கருதிய அளவிற்றாம். (இன்சொல்: கேள்வியினும் வினையினும் இனியவாய சொல். ஈதல்: வேண்டுவார்க்கு வேண்டுவன கொடுத்தல். அளித்தல்: தன் பரிவாரத்தானும் பகைவரானும் நலிவுபடாமல்காத்தல். இவை அரியவாகலின் 'வல்லாற்கு' என்றும், அவன் மண் முழுவதும் ஆளும் ஆகலின் 'இவ்வுலகு' என்றும்கூறினார். கருதிய அளவிற்றாதல் - கருதிய பொருள் எல்லாம் சுரத்தல்.) 

Thirukural 386 of 1330 - திருக்குறள் 386 of 1330

thirukural
குறள் பால் : பொருட்பால். குறள் இயல் : அரசியல். அதிகாரம் : இறைமாட்சி.

காட்சிக் கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்
மீக்கூறும் மன்னன் நிலம்.

Translation:

Where king is easy of access, where no harsh word repels,
That land's high praises every subject swells.

Explanation:

The whole world will exalt the country of the king who is easy of access, and who is free from harsh language.

கலைஞர் உரை:

காட்சிக்கு எளிமையும், கடுஞ்சொல் கூறாத இனிய பண்பாடும் உடைய அரசைத்தான் உலகம் புகழும்.

[ads-post]

மு. உரை:

காண்பதற்கு எளியவனாய்க் கடுஞ்சொல் கூறாதவாய் இருந்தால் அந்த மன்னனுடைய ஆட்சிக்கு உட்பட்ட நாட்டை உலகம் புகழும்.

சாலமன் பாப்பையா உரை:

நீதி வேண்டி வருபவர் காண்பதற்கு எளியனாய், எவர் இடத்தும் கடுஞ்சொல் கூறாதவனாய் இருந்தால், ஆளுவோனின் ஆட்சிப் பரப்பு விரிவடையும். (அவர் கட்சி வெற்றி பெறும்தொகுதிகள் கூடும்).

மணக்குடவர் உரை:

காண்கைக்கு எளியனாய்க் கடுஞ்சொற்கூறுதலும் அல்லனாயின் அம்மன்னனை உலகத்தார் உயர்த்துக் கூறுவர். இது மன்னன் உலகத்தார்மாட்டு ஒழுகுந் திறங் கூறிற்று.

பரிமேலழகர் உரை:

காட்சிக்கு எளியன் - முறை வேண்டினார்க்கும் குறை வேண்டினார்க்கும் காண்டற்கு எளியனாய், கடுஞ்சொல்லன் அல்லனேல் - யாவர் மாட்டும் கடுஞ்சொல்லன் அல்லனும் ஆயின். மன்னன் நிலம் மீக்கூறும் - அம் மன்னனது நிலத்தை எல்லா நிலங்களிலும் உயர்த்துக் கூறும் உலகம் . (முறை வேண்டினார், வலியரான் நலிவு எய்தினார். குறை வேண்டினார், வறுமையுற்று இரந்தார். காண்டற்கு எளிமையாவது, பேர் அத்தாணிக்கண் அந்தணர் சான்றோர் உள்ளிட்டாரோடு செவ்வி உடையனாயிருத்தல். கடுஞ்சொல்: கேள்வியினும் வினையினும் கடியவாய சொல். நிலத்தை மீக்கூறும் எனவே, மன்னனை மீக்கூறுதல் சொல்ல வேண்டாதாயிற்று. மீக்கூறுதல் 'இவன் காக்கின்ற நாடு பசி, பிணி, பகை முதலிய இன்றி யாவர்க்கும் பேரின்பம் தருதலின் தேவருலகினும் நன்று' என்றல். 'உலகம்' என்னும் எழுவாய் வருவிக்கப்பட்டது.)

Thirukural 385 of 1330 - திருக்குறள் 385 of 1330

thirukural
குறள் பால் : பொருட்பால். குறள் இயல் : அரசியல். அதிகாரம் : இறைமாட்சி.

இயற்றலும் ஈட்டலுங் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்ல தரசு.

Translation:

A king is he who treasure gains, stores up, defends,
And duly for his kingdom's weal expends.

Explanation:

He is a king who is able to acquire (wealth), to lay it up, to guard, and to distribute it.

கலைஞர் உரை:

முறையாக நிதி ஆதாரங்களை வகுத்து, அரசாங்கக் கருவூலத்திற்கான வருவாயைப் பெருக்கி, அதைப் பாதுக்காத்துத் திட்டமிட்டுச் செலவிடுவதுதான் திறமையான நல்லாட்சிக்கு இலக்கணமாகும்.

 [ads-post]

மு. உரை:

பொருள் வரும் வழிகளை மேன்மேலும் இயற்றலும் வந்த பொருள்களைச் சேர்த்தலும், காத்தலும் காத்தவற்றை வகுத்துச் செலவு செய்தலும் வல்லவன் அரசன்.

சாலமன் பாப்பையா உரை:

பொருள் வரும் வழிகளை உருவாக்குவது வந்த பொருள்களைத் தொகுப்பது, தொகுத்தவற்றைப் பிறர்கவராமல் காப்பது, காத்தவற்றை அறம், பொருள், இன்பம் நோக்கிச் செலவிடுவது என்னும் இவற்றில் திறமை மிக்கதே அரசு.

மணக்குடவர் உரை:

பொருள் வரும்வழி யியற்றலும் அதனை அழியாம லீட்டலும் அதனைச் சோர்வுபடாமற் காத்தலும் காத்த அதனை வேண்டுவனவற்றிற்குப் பகுத்தலும் வல்லவன் அரசனாவான். பகுத்தல்- யானை குதிரை முதலிய படைக்குக் கொடுத்து அவையிற்றை யுண்டாக்குதல். இது பண்டாரங் கூறுமாறு கூறிற்று.

பரிமேலழகர் உரை:

இயற்றலும் - தனக்குப் பொருள்கள் வரும் வழிகளை மேன்மேல் உளவாக்கலும், ஈட்டலும் - அங்ஙனம் வந்தவற்றை ஒருவழித் தொகுத்தலும், காத்தலும் - தொகுத்தவற்றைப் பிறர் கொள்ளாமல் காத்தலும், காத்த வகுத்தலும் - காத்தவற்றை அறம், பொருள், இன்பங்களின் பொருட்டு விடுத்தலும், வல்லது அரசு - வல்லவனே அரசன் . (ஈட்டல், காத்தல் என்றவற்றிற்கு ஏற்ப, இயற்றல்என்பதற்குச் செயப்படுபொருள் வருவிக்கப்பட்டது. பொருள்களாவன:மணி, பொன், நெல் முதலாயின. அவை வரும் வழிகளாவன : பகைவரை அழித்தலும் , திறை கோடலும் , தன் நாடு தலையளித்தலும் முதலாயின. பிறர் என்றது பகைவர், கள்வர், சுற்றத்தார். வினைசெய்வார் முதலாயினர். கடவுளர், அந்தணர், வறியோர் என்று இவர்க்கும் புகழிற்கும் கொடுத்தலை அறப்பொருட்டாகவும், யானை, குதிரை, நாடு, அரண் என்று இவற்றிற்கும், பகையொடு கூடலின் பிரிக்கப்படுவார்க்கும், தன்னில்பிரிதலின் கூட்டப்படுவார்க்கும் கொடுத்தலைப் பொருட் பொருட்டாகவும், மண்டபம், வாவி, செய்குன்று, இளமரக்கா முதலிய செய்தற்கும், ஐம்புலன்களான் நுகர்வனவற்றிற்கும் கொடுத்தலைஇன்பப் பொருட்டாகவும் கொள்க. இயற்றல் முதலியதவறாமல் செய்தல் அரிதாகலின், 'வல்லது' என்றார். இவை நான்கு பாட்டானும் மாட்சியேகூறப்பட்டது.) 

Thirukural 384 of 1330 - திருக்குறள் 384 of 1330

thirukural
குறள் பால் : பொருட்பால். குறள் இயல் : அரசியல். அதிகாரம் : இறைமாட்சி.

அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா
மானம் உடைய தரசு.

Translation:

Kingship, in virtue failing not, all vice restrains,
In courage failing not, it honour's grace maintains.

Explanation:

He is a king who, with manly modesty, swerves not from virtue, and refrains from vice.

கலைஞர் உரை:

அறநெறி தவறாமலும், குற்றமேதும் இழைக்காமலும், வீரத்துடனும், மானத்துடனும் ஆட்சி நடத்துபவர்களே சிறந்தவர்களாவார்கள்.

[ads-post]

மு. உரை:

ஆட்சி முறைக்கு உரிய அறத்தில் தவறாமல் அறமல்லாதவற்றை நீக்கி வீரத்தில் குறைபடாத மானத்தை உடையவனே சிறந்த அரசன் ஆவான்.

சாலமன் பாப்பையா உரை:

தனக்குச் சொல்லப்பட்ட அறத்திலிருந்து விலகாமல், அறமற்ற கொடுமைகள் தன் நாட்டில் நடைபெறாமல் விலக்கி, வீரத்தில் தவறாமல் நின்று மானத்தைப் பெரிதாக மதிப்பதே அரசு.

மணக்குடவர் உரை:

அறத்திற் றப்பாமலொழுகி அறமல்லாத காம வெகுளியைக் கடிந்து மறத்திற் றப்பாத மானத்தையுடையவன் அரசன்.

பரிமேலழகர் உரை:

அறன் இழுக்காது - தனக்கு ஒதிய அறத்தின் வழுவாது ஒழுகி, அல்லவை நீக்கி - அறனவல்லவை தன் நாட்டின் கண்ணும் நிகழாமல் கடிந்து, மறன் இழுக்கா மானம் உடையது அரசு - வீரத்தின் வழுவாத தாழ்வு இன்மையினை உடையான் அரசன். (அவ்வறமாவது , ஓதல், வேட்டல், ஈதல் என்னும் பொதுத்தொழிலினும், படைக்கலம் பயிறல், பல் உயிரோம்பல், பகைத்திறம் தெறுதல் என்னும் சிறப்புத்தொழிலினும் வழுவாது நிற்றல். மாண்ட, 'அறநெறி முதற்றே அரசின் கொற்றம்' (புறநா. 55) - என்பதனால், இவ்வறம் பொருட்குக் காரணமாதல் அறிக. அல்லவை, கொலை , களவு முதலாயின. குற்றமாய மானத்தின் நீக்குதற்கு, 'மறன் இழுக்கா மானம்' என்றார். அஃதாவது, 'வீறின்மையின் விலங்காம் என மதவேழமும் எறியான் - ஏறுண்டவர் நிகராயினும் பிறர் மிச்சில் என்று எறியான் - மாறன்மையின் மறம்வாடும் என்று இளையாரையும் எறியான் - ஆறன்மையின் முதியாரையும் எறியான் அயில் உழவன் (சீவக. மண்மக.159) எனவும் , அழியுநர் புறக்கொடை அயில்வேல் ஓச்சான்'.(பு.வெ. வஞ்சி. 20) எனவும் சொல்லப்படுவது. அரசு: அரசனது தன்மை : அஃது உபசார வழக்கால் அவன்றன்மேல் நின்றது.)
Powered by Blogger.