Thirukural 384 of 1330 - திருக்குறள் 384 of 1330

thirukural
குறள் பால் : பொருட்பால். குறள் இயல் : அரசியல். அதிகாரம் : இறைமாட்சி.

அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா
மானம் உடைய தரசு.

Translation:

Kingship, in virtue failing not, all vice restrains,
In courage failing not, it honour's grace maintains.

Explanation:

He is a king who, with manly modesty, swerves not from virtue, and refrains from vice.

கலைஞர் உரை:

அறநெறி தவறாமலும், குற்றமேதும் இழைக்காமலும், வீரத்துடனும், மானத்துடனும் ஆட்சி நடத்துபவர்களே சிறந்தவர்களாவார்கள்.

[ads-post]

மு. உரை:

ஆட்சி முறைக்கு உரிய அறத்தில் தவறாமல் அறமல்லாதவற்றை நீக்கி வீரத்தில் குறைபடாத மானத்தை உடையவனே சிறந்த அரசன் ஆவான்.

சாலமன் பாப்பையா உரை:

தனக்குச் சொல்லப்பட்ட அறத்திலிருந்து விலகாமல், அறமற்ற கொடுமைகள் தன் நாட்டில் நடைபெறாமல் விலக்கி, வீரத்தில் தவறாமல் நின்று மானத்தைப் பெரிதாக மதிப்பதே அரசு.

மணக்குடவர் உரை:

அறத்திற் றப்பாமலொழுகி அறமல்லாத காம வெகுளியைக் கடிந்து மறத்திற் றப்பாத மானத்தையுடையவன் அரசன்.

பரிமேலழகர் உரை:

அறன் இழுக்காது - தனக்கு ஒதிய அறத்தின் வழுவாது ஒழுகி, அல்லவை நீக்கி - அறனவல்லவை தன் நாட்டின் கண்ணும் நிகழாமல் கடிந்து, மறன் இழுக்கா மானம் உடையது அரசு - வீரத்தின் வழுவாத தாழ்வு இன்மையினை உடையான் அரசன். (அவ்வறமாவது , ஓதல், வேட்டல், ஈதல் என்னும் பொதுத்தொழிலினும், படைக்கலம் பயிறல், பல் உயிரோம்பல், பகைத்திறம் தெறுதல் என்னும் சிறப்புத்தொழிலினும் வழுவாது நிற்றல். மாண்ட, 'அறநெறி முதற்றே அரசின் கொற்றம்' (புறநா. 55) - என்பதனால், இவ்வறம் பொருட்குக் காரணமாதல் அறிக. அல்லவை, கொலை , களவு முதலாயின. குற்றமாய மானத்தின் நீக்குதற்கு, 'மறன் இழுக்கா மானம்' என்றார். அஃதாவது, 'வீறின்மையின் விலங்காம் என மதவேழமும் எறியான் - ஏறுண்டவர் நிகராயினும் பிறர் மிச்சில் என்று எறியான் - மாறன்மையின் மறம்வாடும் என்று இளையாரையும் எறியான் - ஆறன்மையின் முதியாரையும் எறியான் அயில் உழவன் (சீவக. மண்மக.159) எனவும் , அழியுநர் புறக்கொடை அயில்வேல் ஓச்சான்'.(பு.வெ. வஞ்சி. 20) எனவும் சொல்லப்படுவது. அரசு: அரசனது தன்மை : அஃது உபசார வழக்கால் அவன்றன்மேல் நின்றது.)

Thirukural 383 of 1330 - திருக்குறள் 383 of 1330

thirukural
குறள் பால் : பொருட்பால். குறள் இயல் : அரசியல். அதிகாரம் : இறைமாட்சி.

தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும்
நீங்கா நிலனான் பவர்க்கு.

Translation:

A sleepless promptitude, knowledge, decision strong:
These three for aye to rulers of the land belong.

Explanation:

These three things, viz., vigilance, learning, and bravery, should never be wanting in the ruler of a country.

கலைஞர் உரை:

காலம் தாழ்த்தாத விரைவான நடவடிக்கைகளும், அறிவுடைமையும், துணிவும் நாடாளுகின்றவர்களுக்குத் தேவையானவையும், நீங்காமல் நிலைத்திருக்க வேண்டியவையுமான பண்புகளாகும்.

[ads-post]

மு. உரை:

காலம் தாழ்த்தாத தன்மை, கல்வியுடைமை, துணிவுடைமை இந்த மூன்று பண்புகளும் நிலத்தை ஆளும் அரசனுக்கு நீங்காமல் இருக்க வேண்டியவை.

சாலமன் பாப்பையா உரை:

செயல் ஆற்றுவதில் சோர்வு இல்லாமை, அனைத்தையும் அறியும் கல்வி, தீயவை எதிர்த்தாலும் நல்லன செய்வதற்கு ஏற்ற துணிவு இம்மூன்றும் நாட்டை ஆளுவோரை விட்டு விலகக்கூடாது.

மணக்குடவர் உரை:

மடியின்மையும் கல்வியுடைமையும் ஒரு பொருளை ஆராய்ந்து துணிதலுடைமையும் என்று சொல்லப்பட்ட இம்மூன்றும் பூமியை யாள்பவனுக்கு நீங்காமல் வேண்டும்.

பரிமேலழகர் உரை:

நிலன் ஆள்பவற்கு - நிலத்தினை ஆளும் திருவுடையாற்கு; தூங்காமை கல்வி துணிவு உடைமை இம்மூன்றும் நீங்கா - அக்காரியங்களில் விரைவுடைமையும், அவை அறிதற்கு ஏற்ற கல்வியுடமையும், ஆண்மை உடைமையும் ஆகிய இம்மூன்று குணமும் ஒருகாலும் நீங்கா. (கல்வியது கூறுபாடு முன்னர்க் கூறப்படும். ஆண்மையாவது, ஒன்றனையும் பாராது கடிதில் செய்வது ஆகலின்,அஃது ஈண்டு உபசார வழக்கால் 'துணிவு' எனப்பட்டது. உம்மை இறந்தது தழீஇய எச்ச உம்மை. இவற்றுள் கல்வி ஆறு அங்கத்திற்கும் உரித்து. ஏனைய வினைக்கு உரிய. 'நீங்கா' என்பதற்குமேல் எஞ்சாமைக்கு உரைத்தாங்கு உரைக்க)

Thirukural 382 of 1330 - திருக்குறள் 382 of 1330

thirukural
குறள் பால் : பொருட்பால். குறள் இயல் : அரசியல். அதிகாரம் : இறைமாட்சி.

அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும்
எஞ்சாமை வேந்தர்க் கியல்பு.

Translation:

Courage, a liberal hand, wisdom, and energy: these four
Are qualities a king adorn for evermore.

Explanation:

Never to fail in these four things, fearlessness, liberality, wisdom, and energy, is the kingly character.

கலைஞர் உரை:

துணிவு, இரக்க சிந்தை, அறிவாற்றல், உயர்ந்த குறிக்கோளை
எட்டும் முயற்சி ஆகிய நான்கு பண்புகளும் அரசுக்குரிய தகுதிகளாகும்.

[ads-post]


மு. உரை:

அஞ்சாமை, ஈகை , அறிவுடைமை, ஊக்கமுடைமை இந்த நான்கு பண்புகளும் குறைவு படாமல் இருத்தலே அரசனுக்கு இயல்பாகும்.

சாலமன் பாப்பையா உரை:

அநீதிக்கும் பகைவர்க்கும் பயப்படாதிருப்பது, வேண்டுவோர்க்கு வேண்டிய கொடுப்பது, வரும் முன்காக்கும் அறிவு, ஆபத்து வந்த பின் தளராத ஊக்கம் - இந்நான்கிலும் குறையாமல் இருப்பது ஆளுவோரின் இயல்பாக இருக்க வேண்டும்.


மணக்குடவர் உரை:

அஞ்சாமையும் ஈகையும் அறிவுடைமையும் ஊக்கமுடைமையுமென்னும் இந்நான்கு குணமும் ஒழியாமை வேந்தனுக்கியல்பு.

பரிமேலழகர் உரை:

வேந்தற்கு இயல்பு - அரசனுக்கு இயல்பாவது, அஞ்சாமை ஈகை அறிவு ஊக்கம் இந்நான்கும் எஞ்சாமை - திண்மையும் கொடையும், அறிவும், ஊக்கமும், என்னும் இந்நான்கு குணமும் இடைவிடாது நிற்றல். (ஊக்கம் : வினை செய்தற்கண் மன எழுச்சி. இவற்றுள் அறிவு ஆறு அங்கத்திற்கும் உரித்து; ஈகை படைக்கு உரித்து, ஏனைய வினைக்கு உரிய. உயிர்க்குணங்களுள் ஒன்று தோன்ற ஏனைய அடங்கி வரும். அவற்றுள் இவை அடங்கின், அரசற்குக் கெடுவன பல ஆமாகலின், இவை எப்பொழுதும் தோன்றி நிற்றல் இயல்பாக வேண்டும் என்பார், 'எஞ்சாமை வேந்தற்கு இயல்பு' என்றார்.)

Thirukural 381 of 1330 - திருக்குறள் 381 of 1330

thirukural
குறள் பால் : பொருட்பால். குறள் இயல் : அரசியல். அதிகாரம் : இறைமாட்சி.

படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும்
உடையான் அரசருள் ஏறு.

Translation:

An army, people, wealth, a minister, friends, fort: six things-
Who owns them all, a lion lives amid the kings.

Explanation:

He who possesses these six things, an army, a people, wealth, ministers, friends and a fortress, is a lion among kings.

கலைஞர் உரை:

ஆற்றல்மிகு படை, அறிவார்ந்த குடிமக்கள், குறையா வளம், குறையற்ற அமைச்சு, முரிபடாத நட்பு, மோதியழிக்க முடியாத அரண் ஆகிய ஆறு சிறப்புகளும் உடையதே அரசுகளுக்கிடையே ஆண் சிங்கம் போன்ற அரசாகும்.

[ads-post]

மு. உரை:

படை குடி கூழ் அமைச்சு நட்பு அரண் என்று கூறப்படும் ஆறு அங்கங்களையும் உடையவனே அரசருள் ஆண் சிங்கம் போனறவன்.

சாலமன் பாப்பையா உரை:

வீரம் மிக்க படை, நாட்டுப்பற்று மிக்க மக்கள், எடுக்கக் குறையாத செல்வம், நாட்டின் நலம் அறிந்து செயல்படும் அமைச்சர், துன்பத்தில் உதவும் அண்டை மாநில நட்பு, அழிக்கமுடியாத காவல் ஆறும் உடையதே அரசுகளில் சிங்கம் போன்றது.

மணக்குடவர் உரை:

படையும் குடியும் கூழும் அமைச்சும் நட்பும் அரணுமென்னும் ஆறுபொருளினையும் உடையவன் அரசருள் ஏறுபோல்வன். ஈண்டுக் குடியுள் நாடு அடங்கிற்று. இஃது அரசனுக்கு உண்டாக்குவன கூறிற்று.

பரிமேலழகர் உரை:

படைகுடி கூழ் அமைச்சு நட்பு அரண் உடையான் - படையும் குடியும் கூழும் அமைச்சும் நட்பும் அரணும் என்று சொல்லப்பட்ட ஆறு அங்கங்களையும் உடையவன், அரசருள் ஏறு = அரசருள் ஏறு போல்வான். (ஈண்டுக் 'குடி' என்றது, அதனை உடைய நாட்டினை. கூழ் என்றது, அதற்கு ஏதுவாகிய பொருளை. அமைச்சு , நாடு, அரண், பொருள், படை , நட்பு என்பதே முறையாயினும் ஈண்டுச் செய்யுள் நோக்கிப் பிறழ வைத்தார். 'ஆறும்' உடையான் என்றதனால், அவற்றுள் ஒன்று இல்வழியும் அரசநீதி செல்லாது என்பது பெற்றாம். வடநூலார் இவற்றிற்கு 'அங்கம்' எனப்பெயர்கொடுத்ததூஉம் அது நோக்கி. 'ஏறு' என்பது உபசார வழக்கு.இதனால் அரசற்கு அங்கமாவன இவை என்பதூஉம், இவைமுற்றும் உடைமையே அவன் வெற்றிற்கு ஏது என்பதூஉம்கூறப்பட்டன.)
Powered by Blogger.