Thirukural 317 of 1330 - திருக்குறள் 317 of 1330

thirukural
குறள் பால் : அறத்துப்பால். குறள் இயல் : துறவறவியல். அதிகாரம் : இன்னாசெய்யாமை.

எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம்
மாணாசெய் யாமை தலை.

Translation:

To work no wilful woe, in any wise, through all the days,
To any living soul, is virtue's highest praise.

Explanation:

It is the chief of all virtues not knowingly to do any person evil, even in the lowest degree, and at any time.

கலைஞர் உரை:

எவ்வளவிலும், எப்பொழுதும், எவரையும் இழிவுபடுத்தும் செயலை மனத்தால் கூட நினைக்காமல் இருப்பதே முதன்மையான சிறப்பாகும்.

[ads-post]

மு. உரை:

எவ்வளவு சிறியதாயினும் எக்காலத்திலும் எவரிடத்திலும் மனதால் எண்ணி உண்டாகின்ற துன்பச்செயலைச் செய்யாதிருத்தலே நல்லது.

சாலமன் பாப்பையா உரை:

எவ்வளவு சிறிதாயினும், எவருக்கு என்றாலும், எப்பொழுது ஆனாலும் சரி, மனத்தால் கூடத் தீமையைச் செய்யா திருப்பதே உயர்ந்தது.

மணக்குடவர் உரை:

யாதொன்றாயினும், எல்லா நாளும் யாவர்மாட்டும் இன்னாதவற்றை மனத்தினாலும் செய்யாமை நன்று.

பரிமேலழகர் உரை:

மனத்தான் ஆம் மாணா - மனத்தோடு உளவாகினற் இன்னாத செயல்களை; எஞ்ஞான்றும் யார்க்கும் எனைத்தானும் செய்யாமை தலை - எக்காலத்தும் யாவர்க்கும் சிறிதாயினும் செய்யாமை தலையாய அறம். (ஈண்டு மனத்தான் ஆகாத வழிப் பாவம் இல்லை என்பது பெற்றாம். ஆற்றலுண்டாய காலத்தும் ஆகாமையின். 'எஞ்ஞான்றும்' என்றும் எளியார்க்கும் ஆகாமையின் , 'யார்க்கும்' என்றும், செயல் சிறிதாயினும் பாவம் பெரிதாகலின், 'எனைத்தானும்' என்றும் கூறினார்.).

Thirukural 316 of 1330 - திருக்குறள் 316 of 1330

thirukural
குறள் பால் : அறத்துப்பால். குறள் இயல் : துறவறவியல். அதிகாரம் : இன்னாசெய்யாமை.

இன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமை
வேண்டும் பிறன்கண் செயல்.

Translation:

What his own soul has felt as bitter pain,
From making others feel should man abstain.

Explanation:

Let not a man consent to do those things to another which, he knows, will cause sorrow.

கலைஞர் உரை:

ஒருவன் தன்னுடைய வாழ்க்கையில் துன்பமானவை என்று அனுபவித்து அறிந்தவற்றை, மற்றவர்க்குச் செய்யாமலிருக்க வேண்டும்.

[ads-post]

மு. உரை:

ஒருவன் துன்பமானவை என்று தன் வாழ்க்கையில் கண்டு உணர்ந்தவைகளை மற்றவனிடத்தில் செய்யாமல் தவிர்க்க வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை:

தீமை எனத் தான் அறிந்தவற்றை அடுத்தவர்க்குச் செய்யாது இருக்க வேண்டும்.

மணக்குடவர் உரை:

தான் இன்னாதன இவையென்று அறிந்தவற்றைப் பிறற்குச் செய்தலை மேவாமை வேண்டும். இஃது இன்னா செய்யாமை வேண்டு மென்றது.

பரிமேலழகர் உரை:

இன்னா எனத் தான் உணர்ந்தவை - இவை மக்கட்கு இன்னாதன என அனுமானத்தால் தான் அறிந்தவற்றை, பிறன்கண் செயல் துன்னாமை வேண்டும் - பிறன் மாட்டுச் செய்தலை மேவாமை துறந்தவனுக்கு வேண்டும். (இன்பதுன்பங்கள் உயிர்க்குணம் ஆகலின், அவை காட்சி அளவையான் அறியப்படாமை அறிக. அறமும் பாவமும் உளவாவது மனம் உளனாயவழி ஆகலான், 'உணர்ந்தவை' என்றார்.).

Thirukural 315 of 1330 - திருக்குறள் 315 of 1330

thirukural
குறள் பால் : அறத்துப்பால். குறள் இயல் : துறவறவியல். அதிகாரம் : இன்னாசெய்யாமை.

அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்
தந்நோய்போல் போற்றாக் கடை.

Translation:

From wisdom's vaunted lore what doth the learner gain,
If as his own he guard not others' souls from pain?.

Explanation:

What benefit has he derived from his knowledge, who does not endeavour to keep off pain from another as much as from himself ?.

கலைஞர் உரை:

பிற உயிர்களுக்கு வரும் துன்பத்தைத் தம் துன்பம் போலக் கருதிக் காப்பாற்ற முனையாதவர்களுக்கு அறிவு இருந்தும் அதனால் எந்தப் பயனுமில்லை.

[ads-post]

மு. உரை:

மற்ற உயிரின் துன்பத்தை தன் துன்பம் போல் கருதிக் காப்பாற்றா விட்டால் பெற்றுள்ள அறிவினால் ஆகும் பயன் உண்டோ.

சாலமன் பாப்பையா உரை:

அடுத்த உயிர்க்கு வரும் துன்பத்தைத் தமக்கு வந்ததாக எண்ணாவிட்டால், அறிவைப் பெற்றதால் ஆகும் பயன்தான் என்ன?.

மணக்குடவர் உரை:

பிறிதோருயிர்க்குஉறும் நோயைத் தனக்கு உறும் நோய்போலக் காவாதவிடத்து, அறிவுடையனாகிய வதனால் ஆகுவதொரு பயன் உண்டாகாது. இஃது அறிவுடையார் செய்யார் என்றது.

பரிமேலழகர் உரை:

அறிவினான் ஆகுவது உண்டோ - துறந்தார்க்கு உயிர் முதலியவற்றை உள்ளவாறறிந்த அறிவினான் ஆவதொரு பயன் உண்டோ, பிறிதின் நோய் தம் நோய்போல் போற்றாக்கடை - பிறிதோர் உயிர்க்கு வரும் இன்னாதவற்றைத் தம் உயிர்க்கு வந்தனபோலக் குறிக்கொண்டு காவா இடத்து? (குறிக்கொண்டு காத்தலாவது: நடத்தல், இருத்தல், நிற்றல், உண்டல் முதலிய தம் தொழில்களானும், பிறவாற்றானும் உயிர்கள் உறுவனவற்றை முன்னே அறிந்து உறாமல் காத்தல். இது பெரும்பான்மையும் அஃறிணைக்கண் நுண்ணிய உடம்பு உடையவற்றைப் பற்றி வருதலின் பொதுப்படப் 'பிறிதின் நோய்' என்றும், 'மறப்பான் அது துன்புறினும் நமக்கு இன்னா செய்தலாம்' என்று அறிந்து காத்தல் வேண்டும் ஆகலின், அது 'செய்யாவழி அறிவினான் ஆகுவது உண்டோ' என்றும் கூறினார். இதனால் சோர்வால்செய்தல்விலக்கப்பட்டது.).

Thirukural 314 of 1330 - திருக்குறள் 314 of 1330

thirukural
குறள் பால் : அறத்துப்பால். குறள் இயல் : துறவறவியல். அதிகாரம் : இன்னாசெய்யாமை.

இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயஞ் செய்து விடல்.

Translation:

To punish wrong, with kindly benefits the doers ply;
Thus shame their souls; but pass the ill unheeded by.

Explanation:

The (proper) punishment to those who have done evil (to you), is to put them to shame by showing them kindness, in return and to forget both the evil and the good done on both sides.

கலைஞர் உரை:

நமக்குத் தீங்கு செய்தவரைத் தண்டிப்பதற்குச் சரியான வழி, அவர் வெட்கித் தலைகுனியும்படியாக அவருக்கு நன்மை செய்வதுதான்.

[ads-post]

மு. உரை:

இன்னா செய்தவரைத் தண்டித்தல் அவரே நாணும் படியாக அவருக்கு நல்லுதவி செய்து அவருடைய தீமையையும் நன்மையையும் மறந்து விடுதலாகும்.

சாலமன் பாப்பையா உரை:

நமக்குத் தீமை செய்தவரைத் தண்டிக்கும் வழி, அவர் வெட்கப்படும்படி அவருக்கு நன்மையைச் செய்து அவர் செய்த தீமையையும், நாம் செய்த நன்மையையும் மறந்துவிடுவதே.

மணக்குடவர் உரை:

இன்னாதன செய்தாரை ஒறுக்குமாறு என்னையெனின், அவர் நாணும்படியாக நல்ல நயமுடையவற்றைச் செய்துவிடுக. இஃது ஒறுக்கும் நெறி கூறியது.

பரிமேலழகர் உரை:

இன்னா செய்தாரை ஒறுத்தல் - தமக்கு இன்னாதவற்றைச் செய்தாரைத் துறந்தார் ஒறுத்தலாவது: அவர் நாண நல் நயம் செய்துவிடல் - அவர் தாமே நாணுமாறு அவர்க்கு இனிய உவகைகளைச் செய்து அவ்விரண்டனையும் மறத்தல். (மறவாவழிப் பின்னும் வந்து கிளைக்கும் ஆகலின் , மறக்கற்பால ஆயின. அவரை வெல்லும் உபாயம் கூறியவாறு . இவை மூன்று பாட்டானும் செற்றம் பற்றிச் செய்தல் விலக்கப்பட்டது.).
Powered by Blogger.