Thirukural 273 of 1330 - திருக்குறள் 273 of 1330

thirukural
குறள் பால் : அறத்துப்பால். குறள் இயல் : துறவறவியல். அதிகாரம் : கூடாவொழுக்கம்.

வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்
புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று.

Translation:

As if a steer should graze wrapped round with tiger's skin,
Is show of virtuous might when weakness lurks within.

Explanation:

The assumed appearance of power, by a man who has no power (to restrain his senses and perform austerity), is like a cow feeding on grass covered with a tiger's skin.

கலைஞர் உரை:

மனத்தை அடக்க முடியாதவர் துறவுக்கோலம் பூணுவது, பசு ஒன்று புலித்தோலைப் போர்த்திக் கொண்டு பயிரை மேய்வது போன்றதாகும்.

[ads-post]

மு. உரை:

மனத்தை அடக்கும் வல்லமை இல்லாதவன் மேற்கொண்ட வலிய தவக்கோலம், புலியின் தோலைப் போர்த்திக் கொண்டு பயிரை பசு மேய்ந்தாற் போன்றது.

சாலமன் பாப்பையா உரை:

கெட்டவன் நல்லவன் போல நடிப்பது, பசு புலியின் தோலைப் போர்த்திக் கொண்டு மேய்ந்தது போலாகும்.

மணக்குடவர் உரை:

வலியில்லாத நிலைமையை யுடையவன் வலிதாகிய தவவுருவங் கோடல், பெற்றமானது பிறர் பயப்படும்படி புலியினது தோலைப் போர்த்துப் பைங்கூழ் மேய்ந்த தன்மைத்து.

பரிமேலழகர் உரை:

வலி இல் நிலைமையான் வல் உருவம்- மனத்தைத் தன் வழிப்படுத்தும் வலி இல்லாத இயல்பினை உடையான் வலியுடையார் வேடத்தைக் கொண்டு தான் அதன்வழிப்படுதல்; பெற்றம் புலியின் தோல் போர்த்து மேய்ந்தற்று - பசு 'காவலர் கடியாமல்' புலியின் தோலைப் போர்த்துப் பைங்கூழை மேய்ந்தாற் போலும். (இல்பொருள் உவமை. 'வலிஇல் நிலைமையான்' என்ற அடையானும், மேய்ந்தற்று என்னும் தொழில் உவமையானும் வல் உருவத்தோடு மனவழிப்படுதல் என்பது பெற்றாம். காவலர் கடியாமை 'புலி புல் தின்னாது' என்பதனாலும் அச்சத்தானும் ஆம். ஆகவே, வல்உருவங் கோடற்குப் பயன் அன்ன காரணங்களான் உலகத்தார் அயிராமை ஆயிற்று. இவ்வாறு தனக்குரிய இல்லாளையும் துறந்து வலியும் இன்றிப் பிறர் அயிராத வல்உருவமுங் கொண்டு நின்றவன் மனவழிப்படுதலாவது, தன் மனம் ஓடிய வழியே ஓடிமறைந்து பிறர்க்கு உரிய மகளிரை விழைதலாம். அவ்வாறாதல், பெற்றம் தனக்கு உரிய புல்லைவிட்டுப் பிறர்க்குரிய பைங்கூழை மேய்ந்தாற்போலும் என்ற உவமையான் அறிக.).

Thirukural 272 of 1330 - திருக்குறள் 272 of 1330

thirukural
குறள் பால் : அறத்துப்பால். குறள் இயல் : துறவறவியல். அதிகாரம் : கூடாவொழுக்கம்.

வானுயர் தோற்றம் எவன்செய்யும் தன்னெஞ்சம்
தான்அறி குற்றப் படின்.

Translation:

What gain, though virtue's semblance high as heaven his fame exalt,
If heart dies down through sense of self-detected fault?.

Explanation:

What avails an appearance (of sanctity) high as heaven, if his mind suffers (the indulgence) of conscious sin.

கலைஞர் உரை:

தன் மனத்திற்குக் குற்றம் என்று தெரிந்தும்கூட அதைச் செய்பவர், துறவுக்கோலம் பூண்டிருப்பதால் எந்தப் பயனும் இல்லை.

[ads-post]

மு. உரை:

தன் மனம் தான் அறிந்த குற்றத்தில் தங்குமானால் வானத்தைப் போல் உயர்ந்துள்ள தவக்கோலம் ஒருவனுக்கு என்ன பயன் செய்யும்?.

சாலமன் பாப்பையா உரை:

தன் மீது தன் நெஞ்சமே குற்றம் சொல்லுமானால் மேலான நிலையினால் வரும் பலன்தான் என்ன?.

மணக்குடவர் உரை:

வானளவும் உயர்ந்த பெருமையுண்டாயினும் அஃதியாதினைச் செய்யவற்று; தன்னெஞ்சறியக் குற்ற முண்டாயின். தான்- அசை. இஃது இக்கூடா ஒழுக்கத்தானைப் பிறரறிந்து இகழாராயினும் அவன் செய்கின்ற தவத்தினாற் பயனுண்டாகாது என்றது.

பரிமேலழகர் உரை:

வான் உயர் தோற்றம் எவன் செய்யும் - ஒருவனுக்கு வான் போல உயர்ந்த தவவேடம் என்ன பயனைச் செய்யும்; தான் அறி குற்றம் தன் நெஞ்சம் படின் - தான் குற்றம் என்று அறிந்த அதன் கண்ணே தன் நெஞ்சு தாழும் ஆயின். ( 'வான் உயர் தோற்றம்' என்பது 'வான் தோய்குடி' (நாலடி 142) என்றாற்போல இலக்கணை வழக்கு. அறியாது செய்த குற்றமல்லது அறிந்து வைத்துச் செய்த குற்றம் கழுவப்படாமையின், நெஞ்சு குற்றத்ததாயேவிடும்; விடவே நின்ற வேடமாத்திரத்துக்குப் புறத்தாரை வெருட்டுதலே அல்லது வேறு பயன் இல்லை என்பதாம்.).

Thirukural 271 of 1330 - திருக்குறள் 271 of 1330

thirukural
குறள் பால் : அறத்துப்பால். குறள் இயல் : துறவறவியல். அதிகாரம் : கூடாவொழுக்கம்.

வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்
ஐந்தும் அகத்தே நகும்.

Translation:

Who with deceitful mind in false way walks of covert sin,
The five-fold elements his frame compose, decide within.

Explanation:

The five elements (of his body) will laugh within him at the feigned conduct of the deceitful minded man.

கலைஞர் உரை:

ஒழுக்க சீலரைப் போல உலகத்தை ஏமாற்றும் வஞ்சகரைப் பார்த்து அவரது உடலில் கலந்துள்ள நிலம், நீர், தீ, காற்று, வெளி எனப்படும் பஞ்சபூதங்களும் தமக்குள் சிரித்துக் கொள்ளும்.

[ads-post]

மு. உரை:

வஞ்சமனம் உடையவனது பொய்யொழுக்கத்தை அவனுடைய உடம்பில் கலந்து நிற்க்கும் ஐந்து பூதங்களும் கண்டு தம்முள் சிரிக்கும்.

சாலமன் பாப்பையா உரை:

வஞ்ச மனத்தவனின் திருட்டு நடத்தையைக் கண்டு அவன் உடம்போடு கலந்து இருக்கும் நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் என்னும் ஐந்து பூதங்களும் தமக்குள் சிரிக்கும்.

மணக்குடவர் உரை:

கள்ள மனத்தை யுடையானது குற்றத்தினையுடைய ஒழுக்கத்தைப் பிறரறியாராயினும், தன்னுடம்பி னுண்டான பூதங்களைந்தும் அறிந்து தம்முள்ளே நகாநிற்கும். பூதங்களைந்தும் அவையிற்றின் காரியமாகிய பொறிகளை.

பரிமேலழகர் உரை:

வஞ்ச மனத்தான் படிற்று ஒழுக்கம் - வஞ்சம் பொருந்திய மனத்தை உடையவனது மறைந்த ஒழுக்கத்தை; பூதங்கள் ஐந்தும் அகத்தே நகும் - உடம்பாய் அவனோடு கலந்து நிற்கின்ற பூதங்கள் ஐந்தும் கண்டு தம்முள்ளே நகும். (காமம் தன் கண்ணே தோன்றி நலியா நிற்கவும், அதனது இன்மை கூறிப் புறத்தாரை வஞ்சித்தலின் வஞ்சமனம் என்றும், அந்நலிவு பொறுக்கமாட்டாது ஒழுகும் களவு ஒழுக்கத்தைப் 'படிற்று ஒழுக்கம்' என்றும் உலகத்துக் களவு உடையார் பிறர் அறியாமல் செய்வனவற்றிற்கு ஐம்பெரும் பூதங்கள் சான்றாகலின், அவ்வொழுக்கத்தையும் அவன் மறைக்கின்ற ஆற்றையும் அறிந்து, அவனறியாமல் தம்முள்ளே நகுதலின், 'அகத்தே நகும்' என்றும் கூறினார். செய்த குற்றம் மறையாது ஆகலின், அவ்வொழுக்கம் ஆகாது என்பது கருத்து.).
Powered by Blogger.