Thirukural 256 of 1330 - திருக்குறள் 256 of 1330

thirukural
குறள் பால் : அறத்துப்பால். குறள் இயல் : துறவறவியல். அதிகாரம் : புலான்மறுத்தல்.

தினற்பொருட்டால் கொல்லாது உலகெனின் யாரும்
விலைப்பொருட்டால் ஊன்றருவா ரில்.

Translation:

'We eat the slain,' you say, by us no living creatures die;
Who'd kill and sell, I pray, if none came there the flesh to buy?.

Explanation:

If the world does not destroy life for the purpose of eating, then no one would sell flesh for the sake of money.

கலைஞர் உரை:

புலால் உண்பதற்காக உலகினர் உயிர்களைக் கொல்லாதிருப்பின், புலால் விற்பனை செய்யும் தொழிலை எவரும் மேற்கொள்ள மாட்டார்.

[ads-post]

மு. உரை:

புலால் தின்னும் பொருட்டு உலகத்தார் உயிர்களைக் கொல்லா திருப்பாரானால், விலையின் பொருட்டு ஊன் விற்பவர் இல்லாமல் போவார்.

சாலமன் பாப்பையா உரை:

தின்பதற்காகவே கொலை செய்பவர் இல்லை என்றால், இறைச்சியை விலைக்குத் தருபவரும் உலகில் எங்கும் இருக்கமாட்டார்.

மணக்குடவர் உரை:

தின்னுதற்காக உலகத்தார் கொள்ளாராயின், விலைக்காக ஊன் விற்பார் யாரும் இல்லை. இது கொன்று தின்னாது விலைக்குக்கொண்டு தின்பார்க்குக் குற்றமென்னை யென்றார்க்கு அதனாலுங் கொலைப்பாவம் வருமென்று கூறிற்று.

பரிமேலழகர் உரை:

தினற்பொருட்டால் உலகு கொல்லாது எனின் - பேதைமை காரணமாக அல்லது, ஊன் தின்கை காரணமாக உலகம் கொல்லாதாயின், விலைப்பொருட்டு ஊன் தருவார் யாரும் இல் - பொருள் காரணமாக ஊன் விற்பார் யாவரும் இல்லை. ('உலகு' என்பது ஈண்டு உயிர்ப்பன்மை மேல் நின்றது. பின் நிகழும் தின்கை முன் நிகழும் கொலைக்குக் காரணம் ஆகாமையின், 'தின்பார்க்குக் காரணத்தான் வரும் பாவம் இல்லை' என்ற வாதியை நோக்கி அருத்தாபத்தி அளவையால் காரணமாதல் சாதித்தலின், இதனான் மேலது வலியுறுத்தப்பட்டது.).

Thirukural 255 of 1330 - திருக்குறள் 255 of 1330

thirukural
குறள் பால் : அறத்துப்பால். குறள் இயல் : துறவறவியல். அதிகாரம் : புலான்மறுத்தல்.

உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊனுண்ண
அண்ணாத்தல் செய்யாது அளறு.

Translation:

If flesh you eat not, life's abodes unharmed remain;
Who eats, hell swallows him, and renders not again.

Explanation:

Not to eat flesh contributes to the continuance of life; therefore if a man eat flesh, hell will not open its mouth (to let him escape out, after he has once fallen in).

கலைஞர் உரை:

உயிர்களை உணவாக்கிக் கொள்ளச் சகதிக்குழியும் வாய் திறவாது; புலால் உண்ணாதவர்கள் இருப்பதால், பல உயிர்கள் கொல்லப்படாமல் வாழ்கின்றன.

[ads-post]

மு. உரை:

உயிர்கள் உடம்பு பெற்று வாழும் நிலைமை, ஊன் உண்ணாதிருத்தலை அடிப்படையாகக் கொண்டது ஊன் உண்டால் நரகம் அவனை வெளிவிடாது.

சாலமன் பாப்பையா உரை:

இறைச்சியைத் தின்னாது இருத்தல் என்னும் அறத்தின்மேல் உயிர்நிலை இருக்கிறது. இதை மீறித் தின்னும் உயிர்களை நரகம் விழுங்கும்; வெளியே விடவும் செய்யாது.

மணக்குடவர் உரை:

புலாலை யுண்ணாமை வேண்டும். அது பிறிதொன்றின் புண். ஆதலால் அதனை அவ்வாறு காண்பாருண்டாயின். இது புலால் மறுத்தல் வேண்டுமென்பதூஉம், அது தூயதாமென்பதூஉங் கூறிற்று.

பரிமேலழகர் உரை:

உயிர் நிலை உண்ணாமை உள்ளது - ஒருசார் உயிர் உடம்பின் கண்ணே நிற்றல் ஊன் உண்ணாமை என்கின்ற அறத்தின் கண்ணது; உண்ண அளறு அண்ணாத்தல் செய்யாது - ஆகலான், அந்நிலை குலைய ஒருவன் அதனை உண்ணுமாயின், அவனை விழுங்கிய நிரயம் பின் உமிழ்வதற்கு அங்காவாது. (உண்ணப்படும் விலங்குகள் அதனால் தேய்ந்து சிலவாக, ஏனைய பலவாய் வருதலின், 'உண்ணாமை உள்ளது உயிர்நிலை' என்றார். 'உண்ணின் என்பது உண்ண' எனத்திரிந்து நின்றது. ஊன் உண்டவன் அப்பாவத்தான் நெடுங்காலம் நிரயத்துள் அழுந்தும் என்பதாம். கொலைப் பாவம் கொன்றார்்மேல் நிற்றலின், பின் ஊன் உண்பார்க்குப் பாவம் இல்லை என்பாரை மறுத்து, அஃது உண்டு என்பது இவ்விரண்டு பாட்டானும் கூறப்பட்டது.).

Thirukural 254 of 1330 - திருக்குறள் 254 of 1330

thirukural
குறள் பால் : அறத்துப்பால். குறள் இயல் : துறவறவியல். அதிகாரம் : புலான்மறுத்தல்.

அருளல்ல தியாதெனிற் கொல்லாமை கோறல்
பொருளல்ல தவ்வூன் தினல்.

Translation:

'What's grace, or lack of grace'? 'To kill' is this, that 'not to kill';
To eat dead flesh can never worthy end fulfil.

Explanation:

If it be asked what is kindness and what its opposite, the answer would be preservation and destruction of life; and therefore it is not right to feed on the flesh (obtained by taking away life).

கலைஞர் உரை:

கொல்லாமை அருளுடைமையாகும்; கொல்லுதல் அருளற்ற செயலாகும். எனவே ஊன் அருந்துதல் அறம் ஆகாது.

[ads-post]

மு. உரை:

அருள் எது என்றால் ஓர் உயிரையும் கொல்லாமலிருத்தல் அருளல்லாது எது என்றால் உயிர்களைக்கொள்ளுதல் அதன் உடம்பைத் தின்னுதல் அறம் அல்லாதது.

சாலமன் பாப்பையா உரை:

இரக்கம் எது என்றால் கொலை செய்யாமல் இருப்பதே; இரக்கம் இல்லாதது எது என்றால் கொலை செய்வதே; பாவம் எது என்றால் இறைச்சியைத் தின்பதே.

மணக்குடவர் உரை:

அருளல்லது யாதெனின், கொல்லாமையைச் சிதைத்தல்; பொருளல்லது யாதெனின் அவ்வூனைத் தின்றல். இஃது அதனை யுண்டதால் அருள் கெடுதலேயன்றிப் பெறுவதொரு பயனுமில்லை என்றது.

பரிமேலழகர் உரை:

அருள் யாது எனின் கொல்லாமை - அருள் யாது எனின், கொல்லாமை : அல்லது (யாதெனின்) கோறல் - அருள் அல்லது யாது எனின் கோறல்: அவ்வூன் தினல் பொருள் அல்லது - ஆகலான் அக்கோறலான் வந்த ஊனைத் தின்கை பாவம். (உபசாரவழக்கால் 'கொல்லாமை, கோறல்' ஆகிய காரியங்களை 'அருள் அல்லது' எனக் காரணங்கள் ஆக்கியும் 'ஊன் தின்கை' ஆகிய காரணத்தைப் 'பாவம்' எனக் காரிய மாக்கியும் கூறினார். அருளல்லது - கொடுமை. சிறப்புப்பற்றி அறமும் பொருள் எனப்படுதலின், பாவம் பொருள் அல்லது எனப்பட்டது. 'கோறல்' என முன் நின்றமையின் 'அவ்வூன்' என்றார். இனி இதனை இவ்வாறன்றி 'அருளல்லது' என்பதனை ஒன்றாக்கிக், 'கொல்லாமை கோறல்' என்பதற்குக் 'கொல்லாமை என்னும் விரதத்தை அழித்தல்' என்று உரைப்பாரும் உளர்.).
Powered by Blogger.