Thirukural 229 of 1330 - திருக்குறள் 229 of 1330

thirukural
குறள் பால் : அறத்துப்பால். குறள் இயல் : இல்லறவியல். அதிகாரம் : ஈகை.

இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய
தாமே தமியர் உணல்.

Translation:

They keep their garners full, for self alone the board they spread;-
'Tis greater pain, be sure, than begging daily bread!.

Explanation:

Solitary and unshared eating for the sake of filling up one's own riches is certainly much more unpleasant than begging.

கலைஞர் உரை:

பிறர்க்கு .வதால் குறையக் கூடுமென்று, குவித்து வைத்துள்ளதைத் தாமே உண்ணுவது என்பது கையேந்தி இரந்து நிற்பதைக் காட்டிலும் கொடுமையானது.

[ads-post]

மு. உரை:

பொருளின் குறைபாட்டை நிரப்புவதற்க்காக உள்ளதைப் பிறர்க்கு ஈயாமல் தாமே தமியராய் உண்பது வறுமையால் இறப்பதை விடத் துன்பமானது.

சாலமன் பாப்பையா உரை:

பொருளைப் பெருக்க எண்ணி, எவருக்கும் தராமல், தானே தனித்து உண்பது, பிறரிடம் கை ஏந்துவதைவிடக் கொடியது.

மணக்குடவர் உரை:

இரத்தல்போல மெய்யாக இன்னாதாம்: தேடின உணவைத் தாமே தமியராயிருந் துண்டல். தமியரா யென்றது ஒருவருங் காணாமலென்றது.

பரிமேலழகர் உரை:

நிரப்பிய தாமே தமியர் உணல் - பொருட்குறை நிரப்பவேண்டி வறியார்க்கு ஈயாது தாமே தனித்து உண்டல் இரத்தலின் இன்னாது மன்ற - ஒருவர்க்குப் பிறர்பால் சென்று இரத்தலினும் இன்னாது ஒருதலையாக. (பொருட்குறை நிரப்பலாவது: ஒரோ எண்களைக் குறித்து இத்துணை ஈட்டுவதும் என ஈட்டத்தையே மேற்கொண்டு இவறிக் கூட்டுதல். தனித்தல்: பிறரை ஒழித்தல். இரத்தற்கு உள்ளது அப்பொழுதை இளிவரவே: பின் நல்குரவு இல்லை, தமியர் உண்டற்கு அவை இரண்டும் உளவாம் ஆகலின், 'இரத்தலின் இன்னாது' என்றார். 'நிரப்பிய' என்பதற்குத் 'தேடிய உணவுகளை' என்று உரைப்பாரும் உளர்.).


Thirukural 228 of 1330 - திருக்குறள் 228 of 1330

thirukural
குறள் பால் : அறத்துப்பால். குறள் இயல் : இல்லறவியல். அதிகாரம் : ஈகை.

ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை
வைத்திழக்கும் வன்க ணவர்.

Translation:

Delight of glad'ning human hearts with gifts do they not know.
Men of unpitying eye, who hoard their wealth and lose it so?.

Explanation:

Do the hard-eyed who lay up and lose their possessions not know the happiness which springs from the pleasure of giving ?.

கலைஞர் உரை:

ஏழை எளியோர்க்கு எதுவும் அளித்திடாமல் ஈட்டிய பொருள் அனைத்தையும் இழந்திடும் .வு இரக்கமற்றோர், பிறர்க்கு வழங்கி மகிழ்வதில் ஏற்படும் இன்பத்தை அறியமாட்டாரோ?.

[ads-post]

மு. உரை:

தாம் சேர்த்து வைத்துள்ள பொருளைப் பிறருக்குக் கொடுக்காமல் வைத்திருந்து பின் இழந்து விடும் வன் கண்மை உடையவர், பிறர்க்கு கொடுத்து மகிழும் மகிழ்ச்சியை அறியாரோ.

சாலமன் பாப்பையா உரை:

இல்லாதவர்க்குக் கொடுப்பதால் கொடுப்பவரும் பெறுபவரும் முகத்தாலும் மனத்தாலும் மகிழ்ச்சி அடைவர். பிறர்க்குக் கொடுக்காமல் பொருளைச் சேமித்து வைத்துப் பிறகு அதை இழந்துவிடும் கொடியவர்கள் அம்மகிழ்சியை அறியார்களோ?.

மணக்குடவர் உரை:

கொடுத்த கொடையினால் பெற்றவர்க்கு வரும் முகமலர்ச்சியைக் கண்டறியாரோ? தாமுடைய பொருளைக் கொடாதே வைத்துப் பின் னிழக்கின்ற வன்கண்ணர். இஃது இடார் இழப்பரென்றது.

பரிமேலழகர் உரை:

தாம் உடைமை வைத்து இழக்கும் வன்கணவர் - தாம் உடைய பொருளை ஈயாது வைத்துப் பின் இழந்துபோம் அருளிலாதார், ஈத்து உவக்கும் இன்பம் அறியார்கொல் - வறியார்க்கு வேண்டியவற்றைக் கொடுத்து அவர் உவத்தலான் அருளுடையார் எய்தும் இன்பத்தினைக் கண்டறியார் கொல்லோ! (உவக்கும் என்பது காரணத்தின்கண் வந்த பெயரெச்சம், அஃது இன்பம் என்னும் காரியப் பெயர் கொண்டது. அறிந்தாராயின், தாமும் அவ்வின்பத்தை எய்துவது அல்லது வைத்து இழவார் என்பது கருத்து.).
Powered by Blogger.