Thirukural 221 of 1330 - திருக்குறள் 221 of 1330
குறள் பால் :
அறத்துப்பால். குறள் இயல் :
இல்லறவியல். அதிகாரம் :
ஈகை.
வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம்
குறியெதிர்ப்பை நீர துடைத்து.
Translation:
Call that a gift to needy men thou dost
dispense,
All else is void of good, seeking for
recompense.
Explanation:
To give to the destitute is true charity.
All other gifts have the nature of (what is done for) a measured return.
கலைஞர் உரை:
இல்லாதவர்க்கு வழங்குவதே ஈகைப் பண்பாகும். மற்றவர்களுக்கு வழங்குவது என்பது ஏதோ ஓர் ஆதாயத்தை எதிர்பார்த்து வழங்கப்படுவதாகும்.
[ads-post]
மு.வ உரை:
வறியவர்க்கு ஒரு பொருளைக் கொடுப்பதே ஈகை எனப்படுவது, மற்றவர்க்குக் கொடுப்பதெல்லாம் பயன் எதிர்பார்த்து கொடுக்கும் தன்மை உடையது.
சாலமன் பாப்பையா உரை:
ஏதும் இல்லாதவர்க்குக் கொடுப்பதே ஈகை; பிற எல்லாம் கொடுத்ததைத் திரும்பப் பெறும் நோக்கம் உடையதே.
மணக்குடவர் உரை:
ஈகையாவது இல்லாதார்க்கு யாதானும் ஒன்றைக் கொடுத்தல்; இஃதொழிந்த கொடையெல்லாம் குறியெதிர்ப்பைக் கொடுத்த நீர்மையாதலையுடைத்து. இது கொடுக்குங்கால் இல்லார்க்குக் கொடுக்கவேண்டுமென்றது.
பரிமேலழகர் உரை:
வறியார்க்கு ஒன்று ஈவதே ஈகை - ஒரு பொருளும் இல்லாதார்க்கு அவர் வேண்டியது ஒன்றைக் கொடுப்பதே பிறர்க்குக் கொடுத்தலாவது, மற்று எல்லாம் குறியெதிர்ப்பை நீரது உடைத்து - அஃதொழிந்த எல்லாக் கொடையும் குறியெதிர்ப்பைக் கொடுக்கும் நீர்மையை உடைத்து. (ஒழிந்த கொடைகளாவன: வறியவர் அல்லாதார்க்கு ஒரு பயன் நோக்கிக் கொடுப்பன. குறியெதிர்ப்பாவது அளவு குறித்து வாங்கி அவ்வாங்கியவாறே எதிர் கொடுப்பது. 'நீரது' என்புழி, 'அது' என்பது பகுதிப்பொருள் விகுதி. பின்னும் தன்பால் வருதலின், 'குறியெதிர்ப்பை நீரது உடைத்து' என்றார். இதனால் ஈகையது இலக்கணம் கூறப்பட்டது.).