Thirukural 157 of 1330 - திருக்குறள் 157 of 1330

thirukural
குறள் பால் : அறத்துப்பால். குறள் இயல் : இல்லறவியல். அதிகாரம் : பொறையுடைமை.

திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்து
அறனல்ல செய்யாமை நன்று.

Translation:

Though others work thee ill, thus shalt thou blessing reap;
Grieve for their sin, thyself from vicious action keep!.

Explanation:

Though others inflict injuries on you, yet compassionating the evil (that will come upon them) it will be well not to do them anything contrary to virtue.

கலைஞர் உரை:

பிறர் செய்திடும் இழிவான காரியங்களுக்காகத் துன்பமுற்று வருந்தி, பதிலுக்கு அதே காரியங்களைச் செய்து பழி வாங்காமலிருப்பதுதான் சிறந்த பண்பாகும்.

[ads-post]

மு. உரை:

தகுதி அல்லாதவைகளைத் தனக்குப் பிறர் செய்த போதிலும், அதனால், அவர்க்கு வரும் துன்பத்திற்காக நொந்து, அறம் அல்லாதவைகளைச் செய்யாதிருத்தல் நல்லது.

சாலமன் பாப்பையா உரை:

கொடியவற்றைப் பிறர் தனக்குச் செய்தாலும், பதிலுக்குத் தானும் செய்தால் அவர் வருந்துவாரே என வருந்தி, அறம் அல்லாதவற்றைச் செய்யாது இருப்பது நல்லது.

மணக்குடவர் உரை:

தகுதியல்லாதவற்றைத் தனக்குப் பிறர்செய்தாராயினும் அவற்றைத் தானுஞ் செய்தால் அவர்க்கு உளதாம் நோவுக்கு நொந்து அறமல்லாதவற்றைச் செய்யாமை நன்று.

பரிமேலழகர் உரை:

திறன் அல்ல தன் பிறர் செய்யினும் - செய்யத்தகாத கொடியவற்றைத் தன்கண் பிறர் செய்தாராயினும்; நோநொந்து அறன் அல்ல செய்யாமை நன்று - அவர்க்கு அதனால் வரும்துன்பத்திற்கு நொந்து, தான் அறனல்லாத செயல்களைச் செய்யாதிருத்தல் ஒருவனுக்கு நன்று. [உம்மை: சிறப்பு உம்மை. துன்பத்திற்கு நோதலாவது "உம்மை - எரிவாய் நிரயத்து வீழ்வர்கொல்" (நாலடி. 58) என்று பரிதல்.].


Thirukural 156 of 1330 - திருக்குறள் 156 of 1330

thirukural
குறள் பால் : அறத்துப்பால். குறள் இயல் : இல்லறவியல். அதிகாரம் : பொறையுடைமை.

ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்
பொன்றுந் துணையும் புகழ்.

Translation:

Who wreak their wrath have pleasure for a day;
Who bear have praise till earth shall pass away.

Explanation:

The pleasure of the resentful continues for a day. The praise of the patient will continue until (the final destruction of) the world.

கலைஞர் உரை:

தமக்குக் கேடு செய்தவரை மன்னித்திடாமல் தண்டிப்பவர்க்கு அந்த ஒரு நாள் மட்டுமே இன்பமாக அமையும். மறப்போம் மன்னிப்போம் எனப் பொறுமை கடைப் பிடிப்பபோருக்கோ, வாழ்நாள் முழுதும் புகழ்மிக்கதாக அமையும்.

[ads-post]

மு. உரை:

தீங்கு செய்தவரைப் பொறுக்காமல் வருத்தினவர்க்கு ஒருநாள் இன்பமே; பொறுத்தவர்க்கு உலகம் அழியும் வரைக்கும் புகழ் உண்டு.

சாலமன் பாப்பையா உரை:

தமக்குத் தீங்கு செய்தவரைத் தண்டித்தவர்க்குத் தண்டித்த அன்று மட்டுமே இன்பம்; பொறுத்துக் கொண்டவர்க்கோ உலகம் அழியும் வரை புகழ் இருக்கும்.

மணக்குடவர் உரை:

ஒறுத்தவர்க்கு அற்றைநாளை யின்பமே உண்டாம்: பொறுத்தவர்க்குத் தாம் சாமளவும் புகழுண்டாம். இது புகழுண்டா மென்றது.

பரிமேலழகர் உரை:

ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் - தமக்குத் தீங்கு செய்தவனை ஒறுத்தார்க்கு உண்டாவது அவ்வொரு நாளை இன்பமே; பொறுத்தார்க்குப் பொன்றும் துணையும் புகழ் - அதனைப் பொறுத்தார்க்கு உலகம் அழியுமளவும் புகழ் உண்டாம். [ஒருநாளை இன்பம் அந்நாள் ஒன்றினுங் 'கருதியது முடித்தேம்' எனத் தருக்கியிருக்கும் பொய்யின்பம். ஆதாரமாகிய உலகம் பொன்றப் புகழும் பொன்றும் ஆகலின் ஏற்புடைய 'உலகு' என்னும் சொல் வருவித்து உரைக்கப்பட்டது].


Thirukural 155 of 1330 - திருக்குறள் 155 of 1330

thirukural
குறள் பால் : அறத்துப்பால். குறள் இயல் : இல்லறவியல். அதிகாரம் : பொறையுடைமை.

ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர்
பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து.

Translation:

Who wreak their wrath as worthless are despised;
Who patiently forbear as gold are prized.

Explanation:

(The wise) will not at all esteem the resentful. They will esteem the patient just as the gold which they lay up with care.

கலைஞர் உரை:

தமக்கு இழைக்கப்படும் தீமையைப் பொறுத்துக் கொள்பவர்களை உலகத்தார் பொன்னாக மதித்துப் போற்றுவார்கள். பொறுத்துக் கொள்ளாமல் தண்டிப்பவர்களை அதற்கு ஒப்பாகக் கருத மாட்டார்கள்.

[ads-post]

மு. உரை:

(தீங்கு செய்தவரைப்) பொறுக்காமல் வருத்தினவரை உலகத்தார் ஒரு பொருளாக மதியார்; ஆனால், பொறுத்தவரைப் பொன்போல் மனத்துள் வைத்து மதிப்பர்.

சாலமன் பாப்பையா உரை:

தனக்குத் தீமை செய்தவரைப் பொறுக்காமல் தண்டித்தவரைப் பெரியோர் ஒரு பொருட்டாக மதிக்கமாட்டார்; பொறுத்துக் கொண்டவரையோ பொன்னாகக் கருதி மதிப்பர்.

மணக்குடவர் உரை:

தமக்குத் துன்பஞ் செய்தாரை மாறாக ஒறுத்தாரை யொரு பொருளாக மதித்து வையார். பொறுத்தாரைப் பொன்னைப் பொதிந்து வைத்தாற்போலப் போற்றுவார் உலகத்தார்.

பரிமேலழகர் உரை:

ஒறுத்தாரை ஒன்றாக வையார் - பிறன் தமக்குத் தீங்கு செய்தவழிப் பொறாது அவனை ஒறுத்தாரை அறிவுடையார் ஒரு பொருளாக மனத்துக் கொள்ளார்; பொறுத்தாரைப் பொன்போல் பொதிந்து வைப்பர் - அதனைப் பொறுத்தாரைப் பொன்போல் பொதிந்து கொள்வர். (ஒறுத்தவர் தாமும் அத் தீங்கு செய்தவனோடு ஒத்தலின், 'ஒன்றாகவையார்' என்றார். 'பொதிந்து வைத்தல்', சால்புடைமை பற்றி இடைவிடாது நினைத்தல்.).
Powered by Blogger.