Thirukural 106 of 1330 - திருக்குறள் 106 of 1330

thirukural
குறள் பால் : அறத்துப்பால். குறள் இயல் : இல்லறவியல். அதிகாரம் : செய்ந்நன்றி அறிதல்.

மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க
துன்பத்துள் துப்பாயார் நட்பு.

Translation:

Kindness of men of stainless soul remember evermore!
Forsake thou never friends who were thy stay in sorrow sore!.

Explanation:

Forsake not the friendship of those who have been your staff in adversity. Forget not be benevolence of the blameless.

கலைஞர் உரை:

மாசற்றவர்களின் உறவை மறக்கவும் கூடாது; துன்பத்தில் துணை நின்றவர் நட்பைத் துறக்கவும் கூடாது.

[ads-post]

மு. உரை:

குற்றமற்றவரின் உறவை எப்போதும் மறக்கலாகாது: துன்பம் வந்த காலத்தில் உறுதுணையாய் உதவியவர்களின் நட்பை எப்போதும் விடாலாகாது.

சாலமன் பாப்பையா உரை:

உன் துன்பத்துள் துணையாக நின்றவரின் நட்பை விடாதே; அறிவு ஒழுக்கங்களில் குற்றம் இல்லாதவரின் நட்பை மறந்து விடாதே.

மணக்குடவர் உரை:

தனக்குத் துன்பம் வந்தகாலத்து வலியாயினர் நட்பை விடாதொழிக: எக்காலத்துங் குற்றமற்றாரது நட்பை மறவாதொழிக.

பரிமேலழகர் உரை:

துன்பத்துள் துப்பு ஆயார் நட்பு துறவற்க - துன்பக் காலத்துத் தனக்குப் பற்றுக்கோடாயினாரது நட்பை விடாதொழிக; மாசு அற்றார் கேண்மை மறவற்க - அறிவொழுக்கங்களில் குற்றமற்றாரது கேண்மையை மறவா தொழிக. (கேண்மை: கேள் ஆம் தன்மை. இம்மைக்கு உறுதி கூறுவார், மறுமைக்கு உறுதியும் உடன் கூறினார்.).

Thirukural 105 of 1330 - திருக்குறள் 105 of 1330

thirukural
குறள் பால் : அறத்துப்பால். குறள் இயல் : இல்லறவியல். அதிகாரம் : செய்ந்நன்றி அறிதல்.

உதவி வரைத்தன்று உதவி உதவி
செயப்பட்டார் சால்பின் வரைத்து.

Translation:

The kindly aid's extent is of its worth no measure true;
Its worth is as the worth of him to whom the act you do.

Explanation:

The benefit itself is not the measure of the benefit; the worth of those who have received it is its measure.

கலைஞர் உரை:

உதவி என்பது, செய்யப்படும் அளவைப் பொருத்துச் சிறப்படைவதில்லை; அந்த உதவியைப் பெறுபவரின் பண்பைப் பொருத்தே அதன் அளவு மதிப்பிடப்படும்.

[ads-post]

மு. உரை:

கைமாறாகச் செய்யும் உதவி முன் செய்த உதவியின் அளவை உடையது அன்று, உதவி செய்யப்பட்டவற்றின் பண்புக்கு ஏற்ற அளவை உடையதாகும்.

சாலமன் பாப்பையா உரை:

ஒருவர் நமக்குச் செய்த உதவிக்குத் திரும்ப நாம் செய்வது, அவர் செய்த உதவியின் காரணம், பொருள், காலம் பார்த்து அன்று; உதவியைப் பெற்ற நம் பண்பாட்டுத் தகுதியே அதற்கு அளவாகும்.

மணக்குடவர் உரை:

முன்னே செய்த வுதவியின் அளவன்று பின்பு செய்யும் மாற்றுதவி: அவ்வுதவி செய்யப்பட்டவர் தன்மை எவ்வளவிற்று அவ்வளவிற்று அவர் செய்யும் மாற்றுதவி. இது மாற்றுதவிக்கு அளவில்லை என்றது.

பரிமேலழகர் உரை:

உதவி உதவி வரைத்து அன்று - கைம்மாறான உதவி, காரணத்தானும் பொருளானும் காலத்தானும் ஆகிய மூவகையானும் முன் செய்த உதவியளவிற்று அன்று; உதவி செயப்பட்டார் சால்பின் வரைத்து - அதனைச் செய்வித்துக் கொண்டவர்தம் அமைதி அளவிற்று. '(சால்பு எவ்வளவு பெரிதாயிற்று, உதவியும் அவ்வளவு பெரிதாம்' என்பார், "சால்பின்" வரைத்து என்றார். இவை இரண்டு பாட்டானும் மூன்றும் அல்லாத உதவி மாத்திரமும் அறிவார்க்குச் செய்த வழிப் பெரிதாம் என்பது கூறப்பட்டது.).

Thirukural 104 of 1330 - திருக்குறள் 104 of 1330

thirukural
 
குறள் பால் : அறத்துப்பால். குறள் இயல் : இல்லறவியல். அதிகாரம் : செய்ந்நன்றி அறிதல்.

தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்தெரி வார்.

Translation:

Each benefit to those of actions' fruit who rightly deem,
Though small as millet-seed, as palm-tree vast will seem.

Explanation:

Though the benefit conferred be as small as a millet seed, those who know its advantage will consider it as large as a palmyra fruit.

கலைஞர் உரை:

ஒருவர் செய்யும் தினையளவு நன்மையைக்கூட அதனால் பயன்பெறும் நன்றியுள்ளவர் பல்வேறு வகையில் பயன்படக்கூடிய பனையின் அளவாகக் கருதுவார்.

[ads-post]

மு. உரை:

ஒருவன் தினையளவாகிய உதவியைச் செய்த போதிலும் அதன் பயனை ஆராய்கின்றவர், அதனையே பனையளவாகக் கொண்டு போற்றுவர்.

சாலமன் பாப்பையா உரை:

தினை அளவாக மிகச் சிறிய உதவியே செய்யப்பெற்றிருந்தாலும் உதவியின் பயனை நன்கு அறிந்தவர் அதைப் பனை அளவு மிகப் பெரிய உதவியாய்க் கருதுவர்.

மணக்குடவர் உரை:

தினையளவு நன்றி செய்தாராயினும், அதனை யவ்வளவிற்றென்று நினையாது, பனையளவாகக் கொள்வார் அதன் பயனை யறிபவர். பனையளவு- அதனுயர்ச்சி.

பரிமேலழகர் உரை:

தினைத்துணை நன்றி செயினும் - தமக்குத் தினையளவிற்றாய உபகாரத்தை ஒருவன் செய்தானாயினும்; பனைத்துணையாக் கொள்வர் பயன் தெரிவார் - அதனை அவ்வளவிற்றாகக் கருதாது, பனையளவிற்றாகக் கருதுவர் அக்கருத்தின் பயன் தெரிவார். ('தினை', 'பனை' என்பன சிறுமை பெருமைகட்குக் காட்டுவன சில அளவை. அக்கருத்தின் பயனாவது அங்ஙனம் கருதுவார்க்கு வரும் பயன்.).
Powered by Blogger.